அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை : “கம்பிகளின் ஊடே” (கல்வியின் அசல் முகம்)

Share Button

“கம்பிகளின் ஊடே”

(கல்வியின் அசல் முகம்)

புதிய தொடர் – 1

அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை

கடந்த வாரம் ஆசிரியர் நண்பர்களுடன் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். நண்பர் சிவகுருநாதனின் காரில் சென்றேன். காரை நண்பர் சிவகுருநாதன் ஓட்டினார். எங்களுடன் வந்த கல்லூரி நண்பனும், முதுகலை
பொருளியல் ஆசிரியருமான சுரேஷ்காத்தான் பின்னிருக்கையில் அமர்ந்தப்படி கவிதைகளை வாசித்துக் கொண்டு வந்தான்.

கவிதையின் கருப்பொருள், வடிவம், சொற்பிரயோகம் கண்டு வியந்து பேசி வந்தோம். கவிதைகள் வழியாக மரணம் குறித்து பேச்சு சென்றது. அப்போது, நண்பர் சிவகுருநாதன் கூறிய செய்தி என்னை பின்னோக்கிப் பயணிக்க வைத்தது. கார் முன்னோக்கிப் பாய்ந்தது. அப்போது, நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது.

மாலை பள்ளி முடிந்ததும், நண்பர்களுடன் விளையாடுவேன். அதன் பின்பு, வீடு திரும்புவேன். அன்றும் அப்படித்தான் வீடு திரும்பினேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது தங்கை மலர் பக்கத்து வீட்டில் சாவி பெற்று வீட்டைத் திறந்திருந்தாள். அம்மா இன்னும் பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என்று கூறினாள்.

இப்படி அம்மாவுக்காக காத்திருக்கும் போதே பள்ளி முடிந்து தம்பிகள் இருவரும் வந்தார்கள். அம்மா அருகில் உள்ள உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் வேலை பார்த்து வந்தார். பள்ளி முடித்து அம்மா ஐந்து மணிக்கெல்லாம் வீடு வந்து விடுவார். அன்று மணி ஆறு ஆகியும் வரவில்லை.

எங்களுக்கு பசித்தது. பள்ளி முடிந்து வீடு வந்ததும் டீ, பிஸ்கட் கொடுக்கும் அம்மாவைக் காணாது வருந்தினோம். எனது தம்பிகள் இருவருக்கும் பசி தாங்காது. அழத் தொடங்கினார்கள். பக்கத்து வீட்டு பார்வதி அத்தை சாப்பிடுவதற்கு பனியாரம் கொடுத்தார். அம்மா திட்டுவார் என்பதற்காகப் பயந்து வேண்டாம் என்றோம். ஆனால், தம்பிகள் இருவரும் பெற்றுக் கொண்டனர்.

தங்கையும் நானும் பசியில் செய்வது அறியாது தவித்தோம். ஒருவழியாக அம்மா ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்தார். அவரின் முகம் சோகமாக இருந்தது. அவர் முகம் அழுது அழுது வீங்கிப் போய் இருந்தது.
அம்மாவுடன், அப்பாவும் வந்திருந்தார்.

அப்பாவும் அம்மாவைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். அவர் எப்போதும் ஏழு அல்லது எட்டு மணிக்குதான் வீட்டிற்கு வருவார். பலமுறை இன்னும் தாமதமாக வீட்டிற்கு வருவார்.
காரணம் கேட்டால், சங்கத்திற்கு சென்று வந்ததாகக் கூறுவார். ”சங்கத்தையே கட்டி அழுங்க” என்று அம்மா கத்துவார். அப்போது, எங்களுக்கு சங்கம் என்பதெல்லாம் புரியாத வார்த்தைகள்.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் கூட அறிந்திராத வயது. ”பாவம்! பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே செத்துப் போயிட்டாங்க” என்று அம்மா புலம்பினார். அம்மாவுடன் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார் என்பதை அறிந்தோம்.

“ஒரு நிமிசம் கூட சும்மா இருக்க மாட்டா. தொண்டை தண்ணி வத்த கத்துவா. எப்ப பாரு குழந்தைகள் குழந்தைகள் என்றுதான் இருப்பா. வீட்டில் இருந்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் அவதி அவதியா ஓடி வருவா! இப்ப அவ குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வாங்க.? என்று புலம்பினார்.

அம்மாவும் அவதி அவதியாகத்தான் பள்ளிக்கு செல்வார். எங்கள் நால்வரையும் குளிப்பாட்டி, சீருடை அணிவித்து, உணவு தந்து, அவர் குளித்துக் கிளம்ப ஏறக்குறைய எட்டரை மணியை நெருங்கிவிடும். “எட்டு
முப்பது மணிக்குள் செல்லாவிட்டால் மேனேஜர் திட்டுவார்.” என்று கூறி பலமுறை சாப்பாட்டை டிப்பனில் அள்ளி வைத்துக் கொண்டுக் கிளம்பி விடுவார்.

அப்படி எடுத்துச் செல்லும் காலை உணவை பல தடவை சாப்பிட்டதில்லை. அதனையே மதியம் சாப்பிடுவார். சில சமயங்களில் மதியமும் சாப்பிடுவதில்லை. அதிகாரி வந்துவிட்டார் என்று புலம்புவார். அவருக்கும் உடல் மேல் அக்கறை இருந்ததில்லை.

பலமுறை, இப்படி பல ஆசிரியர்கள் கற்றுத்தரும் போது இறந்து போய்விட்டார்கள் என்பதைக் கூறக் கேட்டுள்ளேன். எண்பதுகளின் இறுதி வரைக்கும் அம்மாவுக்கு சம்பளம் மொத்தம் இரண்டாயிரம் மட்டும் தான் என்பதும் எனக்குத் தெரியாது. அப்பா மேனேஜருடன் தகராறு காரணமாக வேலை இழந்திருந்தார் என்பதும், சங்கத்தின் உதவியால் வேறு ஒரு பள்ளியில் பணிபுரிந்தார் என்பதையும் கல்லூரி சென்ற பின்புதான் அறிந்தேன்.

ஐந்தாண்டுகள் அம்மாவின் ஒற்றை சம்பளத்துடன் தான் எங்களை பள்ளிக்கு அனுப்பினார். அதில்தான்
அப்பாவின் வக்கீல் செலவையும் கொடுத்துள்ளார் என்பதும் அப்போதுதான் தெரியும். அம்மா எங்கள் அனைவரையும் அரசு உதவிபெறும் பள்ளியில்தான் படிக்க வைத்தார். என் தம்பிகள் இருவரும் அப்பாவின் பள்ளியில் பயின்றனர்.

கடைசி தம்பி இப்போது நீதிபதியாக உள்ளார். மூத்த தம்பி உயர்நீதிமன்ற வக்கீலாகப் பணிபுரிகின்றார். இப்போது அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. காலம் அவர்களை அறுபத்து நான்கு வயதிற்குள் எடுத்துக்
கொண்டது. ஐம்பத்து எட்டு வயது வரை வேலை பார்த்தனர். பொதுவாக ஆசிரியர்கள் தங்கள் உடல்நலன் மீது அக்கறை கொள்வதில்லை.

ஏன் என்று காரணம் புரியவில்லை. நானும் பலமுறை உடலை நன்றாகப் பேண வேண்டும் என்று முடிவெடுப்பேன். ஆனால், தொப்பைத்தான் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆயுளும் அவதிக்குள்ளாகிக் கொண்டு வருகின்றது. ஆசிரியர்கள் பலரும் அட்டாக், சுகர் என வந்த பின்பு தான்
உடல் நலனில் அக்கறைக் கொள்கின்றனர்.

இருப்பினும் அதனையும் கடைபிடிக்க கஷ்டப்படுகின்றனர். ஆசிரியர் பணி என்பது சிக்கலானது. அதனை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். பிறபணிகளைப் போன்று அலுவலக வேலை
முடிந்ததும் வீட்டிற்கு வந்து நிம்மதியாக இருக்க முடியாது. கோப்புகளை மூடி வைத்துவிட்டு வருவது போல் ஆசிரியர் பணி இல்லை; இயலாது.

குழந்தைகளின் மனச்சுமையை, அவர்களின் சோகத்தை, வருத்தத்தை அப்படியே பள்ளியில் புதைத்துவிட்டு வர இயலாது. அதனை வீடுவரை ஆசிரியர்கள் சுமந்து வருகின்றார்கள். அதற்காக வருந்துகிறார்கள். அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை துடிப்பார்கள்.

அந்த அழுத்தத்தில் சொந்த குழந்தைகளை மறந்துவிடுவதும் உண்டு. கற்பித்தல் என்பது தொடர் செயல். வீட்டில் அதற்கான முன் தயாரிப்பில் ஈடுபட வேண்டும். குழந்தைகளின் திறன் வளர்ப்பதற்கு பல புத்தகங்களைப் படித்து உழைக்க வேண்டும். குழந்தைகள் முழுமையான அடைவுத்திறன் பெறுவதற்கு பல செயல்பாடுகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு சிந்திக்க வேண்டும். ஆசிரியருக்கென்று எத்தனை அழுத்தம், சுமை இருந்தாலும், அதனையெல்லாம் மறந்துவிட்டு வகுப்பறையில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதனை இப்படி அப்படி என வரிகளில் நிரப்பி புரியவைக்க இயலாது.

”என்ன சர்வண்? என்ன அமைதியா வர்றீங்க?” என்ற சிவகுருநாதனின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்திருந்தது.

“என்ன சொல்றீங்க? என்னால் நம்மமுடியவில்லை. ரெம்ப சின்ன வயசே! ஆபீஸ் வேலையெல்லாம் பார்ப்பானே அந்த வின்செண்ட் ஜோசப்பா?”

“ஆமாம். முப்பத்தெட்டு வயசாகின்றது. அவன் ஆபீஸ் வேலை மட்டுமில்லை. சர்ச்சில் கிட்டார் வாசிப்பான். இப்படி எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்வான்”

“எப்படி இறந்தான்?”

“போன வெள்ளிக்கிழமை ஸ்கூலில் பொங்கல் விழா கொண்டாடி இருக்காங்க. அவன் ஓடியாடி பொங்கலுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கான். அவனும் ஆசிரியர்களுடன் சேர்ந்தே பொங்கல் கிண்டி, பொங்கல் விழாவில் பங்கெடுத்து உள்ளான். மதியம் மாணவர்களுக்கு பொங்கல் வழங்கி உள்ளான்.

மதியம் இரண்டுக்கு மேல் ஆனதும், அவனை அழைத்து தலைமை ஆசிரியர், ”ஜோசப் சார் சாப்பிட்டு வேலை பாருங்க” என்று கூறி இருக்கின்றார். அவர் இன்னும் ஒரு கிளாஸ் பசங்க மட்டும் தான். அவுங்களுக்கும் பொங்கல் கொடுத்துட்டுச் சாப்பிடப் போறேன் என்று கூறியுள்ளான். அந்த கிளாஸ் பசங்க வந்து நின்னு இருக்காங்க.

ஒரு பையனுக்கு கரண்டியில் பொங்கலை அள்ளிக் கொடுத்துள்ளான். தலை சுற்றுவது போல் இருந்துள்ளது. ஒருமாதிரி இருக்கு என பக்கத்து ஆசிரியரிடம் கூறி உள்ளான். அப்படியே சரிந்து கீழே விழுந்துட்டான். என்ன ஏது என்று ஓடிப் போய் பார்த்தா செத்து போயிட்டான். அவுங்க அக்கா எங்க ஸ்கூல் வேலை பார்க்கிறாங்க…”

“என்னால் நம்ப முடியலை. எத்தனை குழந்தைகள்?”

“இரண்டு பெண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை ஒன்றாம் வகுப்பு படிக்கின்றாள். மற்றொரு பெண் குழந்தைக்கு மூன்று வயதாகின்றது.”

என்னால் அதற்குமேல் பேச இயலவில்லை. என் கண்கள் கண்ணீரில் பூத்தன. இறந்த ஜோசப்புடன் பல முறை அலுவலகங்களில் சந்தித்து பேசி இருக்கின்றேன். அவனது புன்னகை இன்னும் நினைவில் இருக்கின்றது.
இப்போது, அவன் சோகமாக வயலின் இசைத்துக் கொண்டிருந்தான்.

ஜோசப் பென்சன் ஸ்கீமா எனறு சுரேஷ் கேட்டார். இல்லை. அவன் சிபிஎஸ் முதல் செட் என்று சிவகுருநாதன் கூறினார். எனக்கு அந்த குழந்தைகள் ஞாபகம் வந்து சென்றது.

சில வருடங்களுக்கு முன் , என்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியரின் தங்கையின் கணவன் இறந்து போனார். அவருக்கும் இதே போன்று இரண்டு குழந்தைகள். கை குழந்தையாக இருந்தவள், ”தந்தை எங்கே?” எனக்
கேட்கும் போது, தாய்க்கு அழுகையைத் தவிர வேறு ஒன்றையும் பதிலாகத் தர இயலவில்லை. ஜோசப்பின் குழந்தை அழுகும் காட்சி நினைவில் வந்து இம்சித்தது.

அம்மாவின் அழுகையை விரலால் துடைத்துவிட்டு ”அப்பா. அப்பா ?” எனக் கேட்கும் குழந்தைக்கு எவராலும் பதில் சொல்லமுடியாது. அந்த இளம் பெண்ணுக்கு எந்த ஆறுதலும் கூற இயலாது. வருமானம் இழப்பு
என்பதுடன் எதிர்காலமே இருண்டு போய் இருக்கும் அவர்களுக்கு, கணவனின் சேமிப்பு ஒன்றே உதவி.

ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர் இருந்தாலும், வாழ்க்கை நடத்த வருமானம் தேவையே? அதுவரை ஆதாரமாக
ஆறுதலாக அவரின் சேமிப்பு மட்டுமே துணை என்பதை எவர் அறிவர்?

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ முடிவற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களின் குரலில் உள்ள நியாயம் பொதுமக்களுக்கு புரிய வைக்க வேண்டியது அவசியம்.

ஆனால், ஆசிரியர்களில் யாருக்கும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசவோ, பதிவு செய்யவோ அல்லது எடுத்துரைக்கவோ தெரியவில்லை. பொதுமக்களின் பல கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் அவர்களுக்கு எதிராகவே உள்ளன. அரசும் இதனை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மக்கள் விரோத போராட்டமாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமலில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் மேற்கு வங்காளத்தில் இல்லை. எல்லா மாநிலங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழங்கும் ஊதியத்தில் பத்துசதவீத தொகையுடன் , அரசும் தன் பங்காக அதே அளவு தொகையைச் செலுத்தி, அதனை மத்திய தொகுப்பில் சேர்த்து வைத்துள்ளார்கள்.

ஆனால், தமிழகத்தில் மட்டும் அந்த தொகை எங்குள்ளது என்று தெரியவில்லை. மத்திய தொகுப்பிலும் சேர்க்கவில்லை. ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகை எங்கு உள்ளது என்று அரசால் கூற இயலவில்லை என்பதுடன், இதுவரை ஓய்வு பெற்றவர்களுக்கோ
அல்லது இறந்தவர்களுக்கோ அத்தொகை வழங்கப்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இன்று, எப்போதும் போல் பள்ளிக்கு வந்தேன். எனது வண்டியை நிறுத்தினேன். என்னை நோக்கி குழந்தைகள் ஆவலுடன் ஓடி வந்தனர். அப்போது, ஒருவர் தன் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு,
அக்குழந்தையின் புத்தகப் பையைத் தோளில் சுமந்துக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைவதைக் கண்டேன். இரண்டாம் வகுப்பு ஜன்னலில் இருந்து ஒரு குழந்தை அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.

அக்குழந்தை எனக்கு ஜோசப்பின் குழந்தையாகத் தெரிந்தது. அக்குழந்தையின் ஏக்கம் அப்படித்தான் தெரிந்தது. இப்படி பல ஜோசப்புகளின் கதைகள் உண்டு.

ஜோசப்பின் குழந்தைக்கு அப்பாவை மட்டுமல்ல. அவர் சேமித்த பணத்தையும் திரும்பக் கொடுக்க முடியுமா? என்பது தெரியவில்லை. இப்படி ஆசிரியர்களின் பங்களிப்பு ஐம்பதாயிரம் கோடி என்று ஆசிரியர்கள் சங்கம்
கூறிகின்றது. அதுகுறித்து சொல்ல இயலுமா?

அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் தொடரும்…

 

 

க.சரவணன்
எழுத்தாளர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

2 responses to “அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை : “கம்பிகளின் ஊடே” (கல்வியின் அசல் முகம்)”

  1. Pudugai selva says:

    புதுக்கோட்டையில் வைகறை எனும் ஆசிரியர்… கவிஞன் சமூகம் சார்ந்த கவிதையை படித்து விட்டு என் மூஞ்சிய பாத்துக்கிட்டே இருப்பான்…. அப்புடி நேசிச்சான் அவன் குழந்தையை… தன் குழந்தைக்காக கொரு கவிதை நூலையே எழுதியவன் … திடீரென இல்லாமல் போனான். நான்கு வயது மகனை விட்டுட்டு… என் வீட்டிலும் நன்கு வயதில் பிள்ளைகள் அவர்களி

  2. Anansia rani says:

    மிகவும் அருமை சார்!!….ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் ஊடக நண்பர்கள்,தாங்கள் இந்த நிலைக்கு வர யார் காரணம் எனசற்று யோசித்து போராட்டத்தின் நியாயங்களை மக்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும்.சகோதரர் ஜோசப்பின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!…இனி ஆசிரியர்களின் நிலை….???இது போல் கண்ணீர் கதைளை கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க வேண்டியது தான்..ஒன்று பட்டால்உண்டு வாழ்வு எனப் பல கதைகள்கூறும் நாம் ஒன்று பட்டுப்போராட தவறி விட்டோம்…சீட்டுகட்டு கோபுரம் போல சரிந்து விழுந்தது போராட்டம் மட்டுமல்ல நம் எதிர் காலமும் தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *