இலங்கையில் கண்ணீர் துளி விழுந்தால், தமிழ்நாட்டின் இதயங்கள் தடதடக்கும் என்பதை காலம் பலமுறை உணர்த்திவிட்டது. இது ‘கவலை மாற்று காலம்’ போலிருக்கிறது! இங்கே நடக்கும் ஒவ்வொரு துக்க நிகழ்வுக்கும் உள்ளம் உருகி கவிதை வடிக்கிறார் பொத்துவில் அஸ்மின். இலங்கையை சேர்ந்த இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக உருவாக்கிய அஞ்சலி பாடல்தான் இப்போது அவரது நினைவிடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘வானமே இடித்ததம்மா’ என்ற அந்தப்பாடலை இப்போது கேட்டாலும், மண்டைக்குள் ஒரு சூறாவளி இறங்கி மனம் கொள்ளாத கவலையை கொட்டிவிட்டு போகும்.
இசையமைப்பாளர் வர்ஷனின் அற்புதமான குரலும், அஸ்மினின் கவர்ந்திழுக்கும் வரிகளும், இவர்கள் இருவரையும் போயஸ் கார்டனுக்கே வரவழைத்து, சசிகலாவை சந்திக்க வைத்த கதையெல்லாம் தமிழகம் அறியும். இதோ- இவர்களது அடுத்த கவன ஈர்ப்பு? ‘போங்கடா நாங்க பொங்கலடா..’
தஞ்சை மற்றும் கடைமடை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் உயிரை போக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்க, நிமிஷங்கள் ஒவ்வொன்றும் ரணமாக கழிந்து கொண்டிருக்கிறது விவசாயி வாழ்வில். எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் சோகப் பொங்கலாகிப் போன நிகழ்வை, வழக்கம் போல இலங்கையில் இருந்தே கவலை கொண்டு கண்ணீர் வடித்திருக்கிறார் அஸ்மின்.
வழக்கம் போல ‘கவர்ச்சிக் கூட்டணி’ இணைந்துவிட்டது. இந்த சோகத்தை பாடலாகவே உருவாக்கிவிட்டார்கள் இருவரும். கேளுங்கள்… உள்ளம் அழும். உதடுகள் அழும். விவசாயிக்காக இன்னும் நாலு சொட்டு கண்ணீர் விழும்!
*இதோ அந்த பாடல் வரிகள்*
*பல்லவி*
——————
தாயினை மறந்த பிள்ளைகள் போல
உழவரை மறந்த பொங்கலிது…
உழுதிட ஒருதுண்டு நெலங்கூட இல்லை
உழவர்கள் எங்கடா பொங்குவது…?
*அனுபல்லவி*
——————–
ஏழைகள் என்றதும் ஏளனப்பேச்சி
எலிக்கறி சாப்பிடும் நிலைவரலாச்சு
ஏறுது எறங்குது எங்களின் மூச்சு
சாவது இங்கு தினசரி யாச்சு
விவசாயநெலமின்று
மைதானமாச்சு
பாக்கின்றேன் எங்கிழும்
கட்டடக் காட்சி
நிம்மதிபோச்சி
என்னடா பேச்சி
எறச்சிக்கு எருதையும் வித்தாச்சு
பொங்கலும் வேணாம் தொங்கலும் வேணாம்
கொளத்தின கட்டுங்கட-இல்ல
ஒழவன வந்து கொன்னுப்புட்டு
பெரும் கல்லற கட்டுங்கடா….
(தாயினை)
*சரணம்-01*
——————
வள்ளுவன் அன்று சொன்னது என்ன..
பாரதி பொங்கிப் பாடியுமென்ன….
விவசாயி இன்று தற்கொல பண்ண
விவசாயம் வளர்ந்திட செய்தது என்ன..?
சோத்துக்கு பதிலா தின்பாயா மண்ண…?
ஓங்கைய நீ கொண்டு குத்தினாய் கண்ண
பொங்கலும் வேணாம் தொங்கலும் வேணாம்
கொளத்தின கட்டுங்கட-இல்ல
ஒழவன வந்து கொன்னுப்புட்டு
பெரும் கல்லற கட்டுங்கடா….
*சரணம்-02*
——————-
அரசுக்கு எம்மேல அக்கறையில்ல
காவேரி நிக்குது அக்கரையில
மண்ணில சொட்டு தண்ணியுமில்ல
வானுக்கும் நெஞ்சிலே ஈரமுமில்ல…
உலகுக்கே சாப்பாடு போட்டவன் பிள்ள
தெருவில நிக்குது பட்டினி கொல்ல…
பொங்கலும் வேணாம் தொங்கலும் வேணாம்
கொளத்தின கட்டுங்கட-இல்ல
ஒழவன வந்து கொன்னுப்புட்டு
பெரும் கல்லற கட்டுங்கடா….
(தாயினை)
கவிஞர் அஸ்மின்
Leave a Reply