தனிக் கட்சியேதான் வேண்டும் என்று என்ன அவசியம்?

Share Button

திரு.அண்ணாமலை!
திருமதி.லதா ரஜினிகாந்த்!
திரு.ராகவா லாரன்ஸ்!

அடுத்து யாரெல்லாம் சேவை அமைப்பு துவங்கி பிறகு கட்சியாக்கப் போகிறார்கள்?

மக்களுக்கு சேவை செய்வதற்கு அதிகாரம் அவசியமில்லை என்பதற்கு சர்வதேச சேவை அமைப்புகள் ரெட் கிராஸ், லயன்ஸ், ரோட்டரி, ஜேசீஸ், டாட்டா, பிர்லா நிறுவனங்களின் சாரிட்டிகள், தமிழ்நாட்டின் உதாரணமாக சூர்யாவின் அகரம், கோவையில் சிறு துளி, எக்ஸ்ஃநோரா இப்படி ஆயிரக்கணக்கான உதாரணங்களைச் சொல்ல இயலும்.

மக்கள் சேவை மட்டுமே நோக்கமென்றால் ஒரு ட்ரஸ்ட் துவங்கி சொந்தப் பணம், நம்பிக்கை வைக்கும் நண்பர்கள் பணம் என்று திரட்டி செய்ய இயலும்.

உலகின் பெரிய பணக்காரர் பில்கேட்ஸ் தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. பில்கேட்ஸ் தன் அறக்கட்டளை மூலம் செய்து வரும் சேவைப் பணிகள் ஏராளம்.

கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், டோணி இவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் இல்லாத செல்வாக்கா?

பணமோ அல்லது செல்வாக்கோ இருப்பதாலேயே அரசியலுக்கு வர வேண்டும் என்று என்ன அவசியம்?

அது அவரவர் அடிப்படை உரிமைதான். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்தான் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதெல்லாம் நொண்டிச் சாக்கு!

தனக்கு நாற்காலிக் கனவு இல்லை என்று மைக் முன்னால் எவரும் சொல்லலாம். தன் மனசாட்சியிடம் சொல்ல முடியாது.

ஏற்கெனவே இங்கே இயங்கி வரும் ஒரு கட்சியுடன் கூடவா உங்கள் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை? ஏதாவது ஒரு கட்சியைத் தேர்வு செய்து அதில் இணைந்து அந்தக் கட்சியை பலப்படுத்தலாமே..

தனிக் கட்சியேதான் வேண்டும் என்று என்ன அவசியம்?

மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதும் தனிக் கட்சி துவங்கினாரா அல்லது ஏற்கெனவே சுதந்திரம் அடைவதை நோக்கமாகக் கொண்ட காங்கிரசில் இணைந்தாரா?

திராவிடர் கழகம் புகழ் பெற்று இருந்த போதும் அதை அரசியல் கட்சியாக பெரியார் ஏன் அறிவிக்க வில்லை?

எம்.ஜி.ஆருக்கு தன் புகழும், மக்கள் செல்வாக்கும் நன்கு தெரிந்தும் தனிக் கட்சி துவங்கி அரசியலுக்கு வராமல் தன் கொள்கைகளுக்கு ஏற்ற இடமாகக் கருதி தி.மு.க வில் ஏன் சேர்ந்து கட்சியின் வெற்றிக்காக உழைத்தார்?

கவுண்டமணியின் பிரபலமான காமெடி வசனம்தான் தோன்றுகிறது..

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

– பட்டுக்கோட்டை பிரபாகர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *