இந்த இலவச பயிற்சி மையத்தை தடுக்கவோ, கெடுக்கவோ, கொச்சைப்படுத்தவோ எவருக்கும் (முக்கியமாக என் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் சரி) உரிமை இல்லை!

Share Button

கிராமத்தில் பிறந்து, சிறுவயதில் கிராமத்தில் விளையாடும் அத்தனை விளையாட்டையும் விளையாடி, அவ்வப்போது மாடு மேய்த்தல், வீட்டிற்கு சமைக்க விறகு சேகரித்தல், களை எடுத்தல், நாற்று நட உதவுதல், நெல் அறுத்து அதைக்கட்ட பிரி சுற்றுதல், நெல்கட்டடித்தல்,வேர் கடலை பறித்தல்,அண்டை கொத்துதல், பயிறுக்கு நீர் பாய்ச்சுதல் என அத்தனையும் செய்து விவசாயப் பின்னணியில் இருந்து அரசுப்பள்ளியில் படித்து நகரத்து பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை பார்க்கையில் குறைவான மதிப்பெண்ணாக இருந்தாலும் அப்பள்ளியின் முதல் மதிப்பெண்ணாகவும் அந்தப்பள்ளியின் வரலாற்றில் முதல் மதிப்பெண்ணாகவும் பெற்று பள்ளிப்படிப்பினை முடித்து மேற்படிப்பு படிக்க நினைக்கும்போது 4 சகோதரிகளுடன் பிறந்த என்னால் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக விரும்பிய படிப்புக்கு பணம் கட்ட இயலாத காரணத்தால் 7 மாதம் படிக்காமல் வீட்டிலேயே இருந்தேன்.

பின் எந்த செலவும் இல்லை மாதம் தோறும் Stipend வரும் செலவில்லாமல் படித்து விடலாம் என Diploma in Nursing மூன்று வருட படிப்பில் சேர்ந்தேன். செலவில்லாமல் மூன்று வருட படிப்பையும் முடித்து,ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்த பின் மாதம் 5000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டே எனது வருமானத்தில் தொலைதூரக்கல்வியின் மூலம் பட்டப்படிப்பை தொடங்கினேன்.
பின் அரசுபணியில் மாத சம்பளம் 3500/-ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றிக்கொண்டே பட்டப்படிப்பை படித்து முடித்தேன்…பெயருக்கு பக்கத்தில் போடத்தான் நான் பட்டப்படிப்பை படித்தேன்.

அப்படி இருக்க ஒரு நாள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் நான் இருந்தபோது நோயாளியாக வந்திருந்த ஒரு வாலிபர் நீங்க என்ன படிச்சிருக்கீங்க?நர்சிங்ல ஆண்களெல்லாம் உண்டா?எனக்கேட்டு ஆரம்பித்த உரையாடலில், அவர் போட்டித்தேர்வுக்கு தயார் செய்வதாக கூறினார்.. நானும், தொலைதூரக்கல்வியில் பட்ட படிப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் எனக்கூற நீங்களும் போட்டித்தேர்வுக்கு தயார் செய்யலாமே என அவர் கூற தொலைதூரக்கல்வி பட்டப்படிப்பு படித்தால் போட்டித்தேர்வு எழுத எனக்கு தகுதி இல்லை என நினைத்திருந்த எனக்கு, நீங்களும் தகுதி படைத்தவர் தான் எனக்கூறினார் அவர்..மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் ஞாயிறுதோறும் இலவச வகுப்பு எடுக்கிறார்கள் அங்கு வாரம்தோறும் சென்று பயிற்சி பெறுங்கள் என்று அவர் கூறிய வாசகங்கள் என் வாழ்க்கையில் திருப்புமுனை யாக அமைந்தது..

பிறகு ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சென்றேன். ஆயக்குடி இலவச பயிற்சி மையம் எனக்கு ஊன்றுகோலாக அமைந்தது சுமார் ஒரு வருடம் ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பயின்றேன்.எனக்கு தன்னம்பிக்கையும் உத்வேகமும் தந்தது ஆயக்குடி இலவச பயிற்சி மையமே…அங்கு படித்து தான் Railway மற்றும் NICL தேர்வில் வெற்றி பெற்றேன்..சென்னை வந்த பிறகு மனித நேயம் Free IAS Academy ,All India Civil Service Free Coaching Centreல் படித்து Ministry of Home Affairs ACIO Intelligence Bureau Officer Exam, IBPS RRB Bank Exam,TNPSC Group 2 தேர்வுகளில் வெற்றி பெற்றேன்…

பின் வங்கியில் மேனஜராக பணியாற்றிக்கொண்டே வந்த வருவாயைக்கொண்டு அப்பல்லோ பயிற்சி மையத்தில் படித்து இரண்டு Group 1 தேர்வில் வெற்றி பெற்றேன்…சென்னையில் இத்தனை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருந்தாலும் நான் வறுமையில் இருந்த போது எனக்கு தன்னம்பிக்கையையும் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இலவச பயிற்சியை கொடுத்தது ஆயக்குடி இலவச பயிற்சை மையம் தான்…இன்றும் வறுமை மற்றும் சூழ்நிலை காரணத்தால் நிறைய கிராமப்புற மற்றும் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் கிடைத்த கூலி வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

என் வாழ்வில் மாற்றம் கொடுத்த எனக்கு வழிகாட்டிய ஆயக்குடி இலவச பயிற்சி மையம் போல நானும் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நினைத்தேன்…எனவே என் கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மாணவர்களுக்காக இலவசமாக பயிற்சியை எனது வீட்டு மொட்டை மாடியில் 2017ல் ஆரம்பித்தேன்.அது வளர்ந்து கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து Dr APJ Free Coaching Centre மூலம் நான் பெற்ற இலவச பயிற்சியை ஏழ்மையில் உள்ளவர்களுக்கு,இலவசமாக வகுப்பெடுக்கும் நல் உள்ளங்களின் ஆதரவுடன் இலவச பயிற்சி மையத்தை சிறப்பாக நடத்தி வருகிறேன்.

இனிமேலும் இலவசமாக நடத்துவேன்…அவ்வளவு ஆத்மார்த்தமாக இந்த பயிற்சிமையத்தை கோவிலாகவும் புனிதமாகவும் நடத்தி வருகிறேன்… இந்த இலவச பயிற்சி மையத்தை தடுக்கவோ, கெடுக்கவோ, கொச்சைப்படுத்தவோ எவருக்கும் (முக்கியமாக என் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் சரி) உரிமை இல்லை.

இந்த இலவச பயிற்சி தொடரும்…

 

Cmr Manimozhiyan, DSP

Deputy Superintendent of Police,

Tamilnadu Police Department

 

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

5 responses to “இந்த இலவச பயிற்சி மையத்தை தடுக்கவோ, கெடுக்கவோ, கொச்சைப்படுத்தவோ எவருக்கும் (முக்கியமாக என் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் சரி) உரிமை இல்லை!”

  1. Elangovan j says:

    Thank you sir

  2. Elumalai says:

    ஐயா நான் இருக்கிறேன் தொடர்ந்து செய்வோம் இலவச கல்வியை அனைவருக்கும் கொடுப்போம் என்றும் உங்களுடன் உங்களின் வழித்தோன்றல் ஏழுமலை

  3. Umamageshwari Karunanithi says:

    தொடரட்டும் உங்கள் பணி ஆசானே……

  4. M.Ezhil says:

    Really u r great.u r rollmodel of youngsters those who wil achieve in their life All the best keep doing????

  5. Ramanujam says:

    All the best for all your endeavours.I am there with you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *