தொழில் வழிகாட்டிகள்
தொழில் வழிகாட்டிகள்
எனக்கு தினசரி ஏதாவது ஒரு வியப்பூட்டும் புள்ளிவிபரம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் என் கையில் இப்போது இருப்பது தமிழ்நாட்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளோரின் புள்ளி விபரம்.
அதன்படி அக்டோபர் 2024 நிலவரப்படி 44 லட்சத்து 64 ஆயிரம்பேர் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
இதில் ஆண்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 42 ஆயிரத்து 915. பெண்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 21 ஆயிரத்து 633. மூன்றாம் பாலினத்தவர் 254 பேர். வயதுவாரியாகப் பிரித்துப் பார்த்தால் 19-30 வயதுக்குட்பட்டவர்கள் 19 லட்சத்து 5 ஆயிரத்து 594 பேர். 31-45 வயதுக்குட்பட்டோர் 14 லட்சத்து ஆயிரத்து 521 பேர்.
யோசித்துப்பாருங்கள். இளமையின் வேகமும் உடற்திறனும் படைப்பாற்றலும் மிளிரும் வயதில் லட்சக்கணக்கானோர் வெறும் பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை கிடைக்காதா என்று ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 6000 குரூப் 2 இடங்களுக்கு அறிவிக்கையைக் கொடுத்தால், 15 லட்சம்பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். கடினமாக உழைத்து போட்டியில் முன்னணி இடம்பிடித்து அரசு வேலை பெற அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
அரசுப்பணியை இவ்வளவுபேரும் குறிவைக்கக் காரணம், பணிப்பாதுகாப்பும் தொழிற்சங்க உரிமையும்தான். மேலும் தமிழகத்துக்குள் பணி, பணியிட மாறுதலுக்கான வாய்ப்பு, தொழிலாளர் உரிமைகள் என்று பல துணைக்காரணங்களும் உள்ளன.
இவையெல்லாம் உண்மையிலேயே நேர்மறையான அம்சங்கள்தாம். ஆனால், யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே… வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தோரில் எத்தனை பேருக்கு எந்த வயதில் வேலை கிடைக்கிறது என்று விசாரித்துபாருங்கள்.
அதிர்ச்சியாகிவிடுவீர்கள். குறைவான காலியிடங்கள், பதிவுமூப்பு, அதிக பதிவாளர்கள் என்ற முக்கோணச் சிக்கல், 20 -30 ஆண்டுகள்வரை காத்திருந்தாலும் வேலையைப் பெற்றுத்தர முடியாத சூழலை உருவாக்குகிறது.
அதேபோல, பல லட்சக்கணக்கான போட்டியாளர்களுடன் போட்டியிட்டு போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது எளிதன்று. ஒன்றுக்கு மேற்பட்ட முறை போட்டியிட்டு கடும் உழைப்பைச் செலுத்தி அதன்பின்னர் வெற்றிபெறும் தேர்வர்களை நாம் பார்க்கிறோம்.
இந்த வம்பே வேண்டாம் என்பவர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்குச் செல்கின்றனர். பிடித்த வேலைக்குச் செல்வோரைவிட கிடைத்த வேலைக்குச் செல்வோரே அதிகம்.
பாருங்கள், நமக்குக் கிடைத்திருப்பது ஒரேயொரு வாழ்க்கை. அதனை அதன் போக்கில் வாழ்வதில் ஏதானும் பொருளிருக்கிறதா? நமதுவிருப்பங்களுக்காக அதனை வாழ்ந்து தீர்க்க வேண்டாமோ?
தொழில்வாழ்க்கை தொடர்பான மேலே கண்ட தெரிவுகளில் இல்லாத ஒரு விஷயம் இருக்கிறதே…அதனை யோசித்தீர்களா? ஆம், அதுதான் ‘சொந்தத் தொழில் தொடங்குவது’.
சுய தொழில் என்றாலே காத தூரம் ஓடுவது நம்மூரில் ஒரு பாரம்பரியமான பழக்கம்…வழக்கம். ஏனாம்? அது ஒரு ‘ரிஸ்க்’ எடுக்கும் சமாச்சாரமாம்.
‘நம்ம குடும்பத்துக்கு அது ஒத்து வருமா?’ என்பன போன்ற வசனங்களும், ‘பிசினஸ் பண்ணனும்னா ஏகப்பட்ட காசு ஆகுமே’ என்ற தடைக்கற்களும், ‘முதலீட்டுக்கு எங்கே செல்வது?’ என்ற கலக்கமும் உரிமங்களைப்பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டுமே என்ற அச்சமும் நம்மைப் பின்னுக்கு இழுக்கின்றன.
இதுபோன்ற சூழலில் நமக்கு ஒரு வழிகாட்டி(mentor) இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா? நியாயம்தான். அப்படி ஒரு அமைப்பு முறை நம் நாட்டில் இருக்கிறதுதான்.
நமக்குத்தான் தெரிவதில்லை. தொழில்நுட்ப-வணிக அடைகாப்பகங்கள்(Technology -Business Incubators) என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றால் தயவு செய்து சாட் ஜிபிடியிடமோ, கூகிளாண்டவரிடமோ கேளுங்கள்.
படிக்கும்போது உங்களைத் தொழில் முனைவோராக ஆக்குவதே இவ்வமைப்புகளின் நோக்கமாகும். அதேபோல டை-சென்னை பொன்ற அமைப்புகள் தொழில் வழிகாட்டும் சேவையை வழங்குகின்றன.
இவைதவிர, பல்வேறு தொழில்முனைவோர் ஒரு கூட்டமைப்பாகச் சேர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் வழிகாட்டி உதவும் போக்கையும் சென்னை, கோவை போன்ற நகரங்களில் பார்க்க முடிகிறது.
வணிகச் சந்திப்புகளை அவர்கள் மேற்கொண்டு, ஒருவரின் தொழிலுக்கு மற்றவர் உதவுகின்றனர்.
மேலும் தமிழக அரசு, டான்சிம் என்ற அமைப்பை உருவாக்கி, தொழில் வழிகாட்டும் சேவையைத் தொடங்கியிருக்கிறது.
ஒரு தொழில் யோசனையாக உருவெடுப்பதிலிருந்து நிறுவனத்தை நடத்துவது (கடன் பெறுவது உட்பட) வரை பல்வேறு சேவைகளை இவ்வமைப்பு வழங்குகிறது.
ஆக, மனத்தடைகளைப் புறம் தள்ளிவிட்டு சுய தொழில் செய்வது குறித்தும் தமிழ் இளைஞர்கள் சிந்திக்கலாம். தொழில் முனைவு உலகைப்பொறுத்தவரை நேற்றைப்போல இன்று இல்லை.
இது, வாய்ப்புகளின் காலம். தொழில்நுட்பத்தின் காலம். இவற்றைப் பிடித்துக்கொண்டு வாழ்க்கை எனும் காட்டு வெள்ளத்தில் எளிதாகக் கரையேறலாம்.
நமக்குத்தேவையெல்லாம், கொஞ்சம் மாற்றி சிந்திக்கும் மனதும், கொஞ்சம் தைரியமும் மட்டும்தான்.
……………
கா.சு.துரையரசு, இதழாளர்.
தொடர்புக்கு: editor@munaivu.com
………….
Leave a Reply