குழு வழிகாட்டுதல் : ஆலோசனை என்பது வெறும் அறிவுரைகள் அல்ல!

Share Button

குழு வழிகாட்டுதல் :-

நான்காம் வகுப்பு ஆசிரியர் பதற்றத்துடன், தயங்கிவந்து இவ்வாறு கூறினார், “சார், எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். என் கிளாஸ் பசங்க, ரொம்ப சேட்டை பண்ணுறாங்க.

இன்னைக்கு ஒருத்தனை சமாதனப்படுத்தினா, மறுநாள் ஒருத்தன் கிளம்பிடுறான். பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள சண்டை போட்டுகிறானுங்க. அதுவும் இந்த கொரோனாவுக்குப் பின் ரொம்ப மோசம்.

WWF பார்த்திட்டு ஒருத்தன் அதே மாதிரி மற்றொருத்தனை அசால்டா தூக்கிப் போடுறான். படியில் இறங்கிப் போகும்போது தாடையில் குத்து விடுறான். ஒருத்தனை பார்த்து ஒருத்தன் அதேமாதிரி பண்ணுறாங்க.

எதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றது. நீங்க ரவுண்ட்ஸ் வரும்போது கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க.”

சரி! இப்படி குழுவுக்கு ஆலோசனை வழங்கலாமா?

இப்படி ஒரு வகுப்பு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை குழு ஆலோசனை என்கிறோம். குழு ஆலோசனை என்பது தனிநபருக்கு வழங்கக்கூடியதாக இருக்காது.

தனிநபருக்கு ஆலோசனை வழங்கும்போது அறிமுகமாகவும், காரணங்களை அறிந்துகொள்ளும் விதமாகவும், தகவல்களை வழங்குவதாகவும், மதிப்பீடு செய்வதாகவும் அமைய வேண்டும்.

ஆனால், குழுவிற்கு வழிகாட்டும்பொழுது அந்தக் குழுவினுடைய தேவை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

அவர்களைச் சுற்றியுள்ள சமூகப் பிரச்சினைகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர்களுடைய தேவைகளை அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து வரவழைக்க வேண்டும்.

இந்த ஆசிரியரை பொறுத்தவரை அவர் பயப்படுவது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதால், குடும்ப அளவில் பிரச்சனை உருவாகிவிடும் என்றும், இதேபோல் இம்மாணவர்கள் வளர்ந்தால், எதிர்காலத்தில் சமூகத்தில் அடிதடி நபராக வளர்ந்துவிடுவார்கள் என்பதும்தான்.

ஆகவே, அந்த வகுப்பிற்குக் குழு ஆலோசனைத் தேவை. இதுபோல் மாணவ பருவத்தில் , அதிக மதிப்பெண் பெறவும், பயமின்றித் தேர்வு எழுதவும், சமூகம் மீதான சரியான புரிதலைப் பெறவும் இந்தக் குழு ஆலோசனை பெரிதும் பயன்படுகின்றது.

பொதுவாக இம்மாதிரியான விசயத்திற்கு ஆலோசனை என்பதை பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயது உள்ளவர்களுக்கு வழங்குதல் நல்லது.

ஆனால், இங்கு பத்து அல்லது பதினொறு வயது குழந்தைகளுக்கு குழு ஆலோசனை வழங்குதல் வேண்டும் . ஆகவே, அதற்குத் தகுந்து எனது ஆலோசனை அமைய வேண்டும்.

ஆலோசனை என்பது வெறும் அறிவுரைகள் அல்ல. எளிய குழு ஆலோசனை வழங்குவதன் மூலம் குழு சூழ்நிலையின் மனநிலையை அறியமுடியும். அதன்வழி குழந்தையின் நிலையை பற்றி அறிய வாய்ப்பு உள்ளது.

சண்டை போடுவதால் ஏற்படும் விளைவையும், குழந்தை காயமடைவதால் ஏற்படும் வலிகள், பிரச்சனைகள் குறித்தும், குழந்தைகளின் சண்டை குடும்ப சண்டையாக மாறுவது சம்பந்தமாக ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கொண்டு நாடகம் நடத்தி விழிப்புணர்வு அளித்தேன்.

அதன்பின், நாடகம் குறித்து அவர்களிடம் கலந்து ஆலோசனை செய்தேன். அதற்கான தீர்வுகளை அவர்களாகவே கூறச் செய்தேன்.

இதுபோல் விழிப்புணர்வு நாடகம் நடத்தியபின் அவர்களே கலந்து ஆலோச்சிப்பதன் மூலமாக அவர்களே தங்களது பிரச்சனைக்குத் தீர்வு காணச் செய்ய முடியும்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு எனது வகுப்பறையில் உள்ள மாணவர்கள் பலருக்கும் தமிழ் எழுத்துக்களைக் கூட்டி வாசிப்பதில் பிரச்சனை இருப்பதைக் கண்டேன்.

இதில் முக்கியமான விசயம் என்னவெனில், அனைத்து மாணவர்களும் தமிழின் அனைத்து எழுத்துகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

ஆனால், எழுத்துக்களைக் கூட்டி, சேர்த்து வாசிப்பதில் மிகவும் பிரச்சனை இருப்பதையும் அறிந்து கொண்டேன். ஆகவே, அதனைக் களைய செயல் ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

தொடர் வாசிப்பு இன்மையே சரளமாக வாசிப்பதற்கு தடையாகவும் உள்ளதைக் கண்டறிந்தேன். ஆகவே, தமிழ் மீது ஆர்வம் கொள்ளவதற்கு, தமிழ் மன்றம் மூலம் நண்பர் பேராசிரியர் முருகேசபாண்டியன் அவர்களை மாணவர்களுடன் கலந்துரையாட அழைத்தேன்.

அவர் ஆரம்பத்தில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்பதை அறிவேன். மேலும், அவர் இலக்கிய விமர்சகர் என்பதை விட குழந்தைகளின் உள்ளத்தை அறிந்தவர் என்பதால், தமிழில் ஆர்வம் ஏற்படுத்தும் விதம் பேச வேண்டும் என்றேன்.

உண்மையில், அவரது பேச்சு மாணவர்களின் உள்ளத்தைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், அவர் சொல்லும் விசயங்களைக் குழந்தைகள் செயல்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. அவர் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு பேசினார்.

மாணவர்களிடம் சலிப்பு ஏற்படாமல் பேசினார். 45 நிமிடங்கள் கதைகள், பாடல்கள் வழியாக குழந்தைகளுக்குத் தமிழ் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் பேச்சை அமைத்திருந்தார்.

30 நிமிடங்கள் குழந்தைகளுக்கு தமிழ் வாசிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவர்பேசி சென்றபின், ஓரிரு தினங்களில் குழந்தைகள் தானாகவே கதை புத்தகங்கள் எடுத்து வாசிக்க ஆரம்பித்தனர்.

இது மாதிரி ஆளுமைகளை அழைத்து வந்தும் ஆலோசனைகள் கூற வைக்கலாம். குழு வழிகாட்டல் மூலமாகக் கூறும் யோசனையை மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பதையும் அவர்களே சீர் தூக்கிப் பார்த்து உணர்ந்து கொள்வார்கள் என்பதை இந்நிகழ்வின் மூலம் அறிந்து கொண்டேன்.

இந்தக்குழு வழிக்காட்டுதல் என்பது ஒரு வழிகாட்டும் முறையாக அமையலாமே தவிர இதுதான் வழிகாட்டும் முறை எனக் கூற முடியாது.

க.சரவணன், தலைமையாசிரியர், மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *