மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்பு! மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது என மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தகவல்!

Share Button

வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டம் :-

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்பு. திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமாக எடுத்துகூறினார்.

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசின் 157 திட்டங்கள் ஆண்டுக்கு 8 லட்சம் கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருவதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை மத்திய அரசில் வெவ்வேறு துறை சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான திட்டங்கள் இருந்தது என்றும் அவற்றையெல்லாம் முறைப்படுத்தி 157 திட்டங்களாக தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆண்டுக்கு 8 லட்சம் கோடி

ஆண்டொன்றிற்கு இந்த திட்டங்களுக்காக மட்டும் மக்கள் நலனுக்கென சுமார் 8 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன், அனைவரும் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற தொழில் முனைவோராக உருவெடுக்க மத்திய அரசு வங்கிகள் மூலம் கடன் உதவிகளை வழங்கி வருகிறது என்றும் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்பு புத்தகத்தை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வெளியிட மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பாஸ்கர பாண்டியன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ஊட்டச்சத்து இயக்கத்தின் வாயிலாக சிறந்த போஷாக்கு மிக்க குழந்தைகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் கல்லூரியில் சிறந்த மதிப்பெண் எடுத்த கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுகளை இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் வழங்கினர்.

மேலும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 15 சுய உதவி குழுக்களுக்கு 1 கோடியே 9 லட்சம் ரூபாய் கடன் உதவி மற்றும் 35 நபர்களுக்கு 50 லட்சத்து 75 ஆயிரம் தாட்கோ கடன்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை மற்றும் அஞ்சலக துறையின் மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தை பற்றிய விளக்கத்தை இந்திய தகவல் பணியின் பயிற்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்திப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை துகள்களாக்கி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இந்திய தகவல் பணியின் பயிற்சி அதிகாரிகளுக்கு அவர் விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பக மண்டல அலுவலக இயக்குனர் ஜெ. காமராஜ் நோக்கவுரை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பிச்சுமணி முன்னிலை வைத்தார். வேலூர் மத்திய மக்கள் தொடர்பக கள அலுவலக உதவி அலுவலர் ஜெயகணேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் துறையில் உள்ள திட்டங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தரப்படும் திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் தரப்படும் திட்டங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு வகை திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *