இலட்சியமே நிச்சயமாய் கொள்ளடா !

Share Button

இலட்சியமே நிச்சயமாய் கொள்ளடா !

மகாபாரதத்தில் யட்சன் தருமரிடம் ஒரு  கேள்வி கேட்பார்.. ‘உலகில் அதிக வேகத்துடன் பயணிப்பது எது? என்பார்.அதற்கு உடனே தருமர் ‘மனம்’ என்பார்.

மனம் ஆரம்பத்திலிருந்தே ஒரு சுபாவத்தை வைத்திருக்கும்.அது தன்னை ஊக்குவித்தால் மட்டுமே நம்பும்.இல்லையேல் நம்பாது. சிறுவயதில் பார்த்திருப்போம் ஒவ்வொருவரும் காணும் பொருட்களிலெல்லாம் கனவுகள் முளைக்கும்.

நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும். முதலில் பார்க்கும் போது இருக்கும் வேட்கை பின் குறையும், உருமாறும், ஒரு கட்டத்தில் அதீத கற்பனையின் மூலம் மட்டும் அனுபவித்துவிட்டு பிறிதொன்றை தேடிச் சென்றுவிடும்.

ஆசைப்பட்ட விஷயம் அப்படியே நிறைவேறாமல் draft listல் சேமித்து வைத்துக் கொள்வோம்.

மனம் ஒன்றிலிருக்க, மற்றொன்றில் பாயும்.ஒன்றை எடுத்தெரிந்தால் இன்னொன்று ஓடிவரும்.மனம் ஒருகணமும் நிலைத்து நிற்காது.

இது உனக்கு கிடைக்காது எனத் தட்டிக்கழிக்கும். நேர விரயம் என்று அசரீரி போல் ஒலிக்கும்.மற்றொரு முயற்சித்துப் பார் என்று நம்பிக்கை ஊட்டும்.சற்று குழப்பமான மனநிலையே இலட்சியங்களை தேர்வு செய்ய காலம் பிடிக்கும்.

பேராசையா? இலட்சியமா?

ஒரு மனிதனின் இலட்சியம் மற்றொருவரின் பேராசையாக தெரியும். vectors change with every second person! ஒவ்வொருவரின் பார்வையின் கோணம் வேறு வேறுதான்.

சிறுவயதில் ஆசை என்ன என்று கேட்டால் பெரிய பணக்காரனாகி விரும்பியதை வாங்க வேண்டும், உண்ண வேண்டும் என்றே சொல்லுவோம். இந்த எண்ணத்தை சிறிது காலம் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எண்ணி எண்ணி பூரிப்படைவோம்.

ஒரு கனவு உங்களை முதலில் மகிழ்வித்தது போன்று மீண்டும் மகிழ்விக்க முடியாது. பிறகு அந்த ஆசை அனைத்தும் கொஞ்சம் அந்நியமாய் தெரியும். இளம் வயது காதல் போல் சிறுபிள்ளைத்தனமாய் தெரியும்.பிறகு ஆசைப்படுவதில் கொஞ்சம் மெச்சூரிட்டி வரும்.

ஒரு சிலருக்கு மட்டும் முதல் மதிப்பெண் பெற்று டிவியில் முகம் வர வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் பெரும்பாலானோர் கெளரமான மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் பெற்றோர்க்கு செலவு வைக்காத, தொழில் துறையில் பிரகாசமுள்ள படிப்பு ஒன்றை தெரிவு செய்ய வேண்டுமென குறுகிய இலட்சியத்தை மனதில் திட்டமிட்டுக் கொள்வார்கள்.

இந்த இலட்சியத்துக்கான முதல் வெற்றியாக விரும்பிய படிப்பு, மதிப்பெண் கிடைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக இலட்சியம் காலாவதியாகத் துவங்கும். மற்றொரு மனது விவாதம் செய்யும். ‘உனக்கு விரும்பிய படிப்பும், நல்ல கல்லூரியும் கிடைக்க வேண்டும் என்பது விதி என மனது எண்ணங்களை மடைமாற்றும்.

இந்த எண்ணம் வலுப்பெற வலுப்பெற இலட்சியமும் சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள தொலைவு வரை தூரம் செல்லும். வாழ்வில் இரண்டாம் முறையாய் இலட்சியம் காலாவதியாகும்.

இதுவும் கடந்து போகும் என எண்ணலாமா…

நிறைவேறாத ஆசைக்கு இலட்சியம் என பெயர் வைத்ததாய் நினைத்துக் கொள்கிறார்கள்.நல்ல வேலை கிடைத்து சுயமாய் சிந்திக்கும் முடிவெடுக்கும் திறன் வாய்க்கும் போதுதான் இலட்சியம் குறித்த புரிதல் வருகிறது.

அது சின்ன சின்ன விஷயங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தனக்கென ஒரு கொள்கையை வகுக்கிறது. மற்றவர்களையே பார்த்து பார்த்து முயன்று பார்த்த பின் தனக்கே என ஒரு தங்க விதியை மனது உருவாக்குகிறது.

அதற்கான வழிமுறைகளையும் மனது கட்டமைத்துக் கொள்கிறது. சிறிய பணியாக இருந்தாலும் செம்மையாக செய்ய வேண்டும் என தன் முனைப்பை வலிமைப்படுத்துகிறது.

இந்த சுய உறுதி மற்றவர்களின் பாராட்டிலும்,சுயதிருப்தியிலும் இன்னும் எழுச்சி பெறுகிறது.

எதனையும் தன்னால் சுயமாக செய்து முடிக்க முடியுமென.. எத்தனை தன்னம்பிக்கை பேச்சாளர்களால் செய்ய முடியாததை மனம் தானே உருவாக்கிக் கொண்டதை அறியமுடிகிறது. ஒரு இலட்சியம் சுயம்புவாக மனதில் தோன்றி வேர் பிடிக்கும்.

இந்த தன்னம்பிக்கை எத்தகைய பணியையும் தன்னை நம்பி ஒப்படைக்கலாம் எனவும் எதனையும் செய்து முடிக்கும் மனோதிடமும் வாய்க்கிறது. நினைத்ததை எட்ட வேண்டுமென எண்ணத்தை தானே உருவாக்குகிறது மனம், பின் அதில் முடிந்தவரை துரிதமாக செயல்படுவது, அடுத்து அதில் உள்ள நுணுக்கத்தை ஆராய்ந்து முழுமையாய் நிறைவேற்றிட மனம் திவிரமாய் ஈடுபடுகிறது.

தன்னால் எல்லாம் முடியுமா எனும் சந்தேகம் வலுவிலந்து.. முயற்சியை கைவிடாமல்,மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் எனும் நிலையை எட்டும்.

முடிந்தவரை Compromise, Adjust, ஏற்றுக் கொண்டு பின்னால் போக மாட்டோம். இப்படி இருப்பதை சுற்றி இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… நிச்சயம் இல்லை. வாழ்வோரை கண்டால் மனம் வெறுக்கும் என்பது போல..எல்லா கட்டுப்பாடுகளும் செலுத்துவர்.

இதற்கு ராமாயணத்தில் விபீஷணன் சொல்லும் வசனத்தை நினைவு கூறலாம். அவனிடம் “இவ்வளவு தீயவர்கள் நடுவில் நீ மட்டும் எப்படி நல்லவனாக இருக்க்ச் முடியும்?, என்றதற்கு “32 பற்களுக்கு நடுவே இருக்கும் நாக்கு போல ஜாக்கிரதையாக இருந்தேன்” என்றானாம். நாமும் இதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இலட்சியத்தை முடிவு செய்து விட்டோம் அதனை நிறைவேற்ற யாரேனும் உதவுவார்களா?நிச்சயம் இல்லை.யாரேனும் உதவிக்கு எதிர்பார்ப்பது நெடுஞ்சாலையில் மினி பஸ்ஸுக்கு காத்திருப்பது போல கால விரையமானது.

நீ ஒரு இலட்சியத்தை பேசும் போது மற்றவர்கள் அனைவரும் உன்னை ஏளனம் செய்வார்கள். இதில் மனம் சோர்ந்து விடக்கூடாது. மற்றவர்கள் குறை கூறும் போது நாம் எப்படி எதிர்வினையாற்ற வேண்டுமெனில்…

சமீபத்தில் வாழ்க்கை வழிகள் குறித்து சிவகுமார் எழுதிய மேற்கோள் நினைவுக்கு வருகிறது. தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் விரக்தியில் விளிம்பில் இருக்கும் போது… அந்த முதலாளி பெண்மணி சொல்கிறார் “கவலைப்படாதே, பனி பெய்து குட்டை நிரம்பாது!

இதெல்லாம் விரைவில் ஆவியாகி காணாமல் போய்விடும்” பிறரின் கேலிகளை பொறுமையோடு சகித்துக் கொள்ள இந்த வரி நிச்சயம் ஏளனம் செய்வோர்க்கு நிச்சயம் பொருந்தும்.

Every new idea is a joke, until one man achieve it..வெற்றியடையும் வரை வீண்முயற்சி என்றும், வெற்றியடைந்தவுடன் விடாமுயற்சி என்றுதான் சொல்வார்கள். ஆகவே இலட்சியத்தை முதலில் நிர்ணயிக்க வேண்டும்.

பின் அதற்காக உழைக்க வேண்டும். ஏனெனில் வெற்றியடையும் போது மட்டுமே இலட்சியங்கள் புனிதமாகின்றன.

இலட்சியத்தை அடைய குறுக்கு வழியில் செல்லலாமா..இதற்கு காந்தி சொல்கிறார் வெற்றியை விட வெற்றியை அடையும் பாதை மிக முக்கியம் என்கிறார்.இறையன்பு அவர்கள் ‘குறுக்கு வழி நேர்வழியைக் காட்டிலும் நீளமானது’ என்கிறார்.

ஆகவே இலட்சியத்தை அடையும் பாதையும் நிச்சயம் இலட்சிய வேட்கையுடன் நேர்மையாய் அமைய வேண்டும்.

வழியே ஏகுக
வழியே மீளுக என்கிறது நறுந்தொகை,
நேர்மையான வழியிலேயே செல்க,

சென்ற நேர்மையான வழியிலேயே திரும்புக. இலட்சியத்தை நிச்சயமாய் கொள்ளுங்கள். அதன் வழியே செல்லுங்கள். வெற்றி எனும் மலர் தூவ வருங்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

– மணிகண்டபிரபு

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *