புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: வருக வருக பெண் சக்தியே!
பாரத மாதாவுக்கு மீண்டும் ஒரு பெண் குடியரசுத் தலைவர் வாய்த்திருக்கிறார்.
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு ஜூலை 25 ஆம் தேதியான இன்று திங்கள்கிழமை பதவியேற்றார்.
இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் , அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார் முர்மு.
பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக பதவி விலகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் முர்மு ஆகியோர் சம்பிரதாய முறைப்படி ஊர்வலமாக நாடாளுமன்றத்துக்கு வந்தனர். முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவரான எம். வெங்கையா நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, முர்மு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று, தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பதவி விலகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரை சந்தித்தார்.
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு :
புதிய குடியரசுத் தலைவருக்கு உலகத்தின் பல நாடுகளில் இருந்தும் வாழ்த்துகள் வந்துகொண்டிருக்கின்றன.
யார் இந்த திரௌபதி முர்மு?
ஜூன் 30, 1958 இல், ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் கீழ் வரும் உபர்பேடா கிராமத்தில் சந்தலி பழங்குடி குடும்பத்தில் பிறந்த திரௌபதி முர்மு புவனேஸ்வரில் கல்வி கற்றார். 1979 முதல் 1983 வரை மாநில நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.
பிறகு, 1997 வரை ராய்ரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.முர்மு 1997 இல் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்து அரசியல் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
அவர் முதலில் ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்தின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2000 ஆம் ஆண்டில் அதே பஞ்சாயத்தின் தலைவரானார். பின்னர், பிஜேபி பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
முர்மு ஒடிசாவில் பிஜேபி மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சர் பதவியேற்றார். முதலில் மார்ச் 2000 முதல் ஆகஸ்ட் 2022 வரை வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான தனிப் பொறுப்புடன் மாநில அமைச்சராகவும், பின்னர் மீன்வளம் மற்றும் விலங்கு வள மேம்பாட்டு அமைச்சராகவும் ஆனார். ஆகஸ்ட் 2002 முதல் மே 2004 வரை.
2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2007 ஆம் ஆண்டில் ஒடிசா சட்டமன்றத்தால் சிறந்த எம்எல்ஏவுக்கான ‘நீலகந்தா’ என்று விருது பெற்றார்.
2015ல் முர்மு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரானார். ஒடிசாவிலிருந்து ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் பழங்குடித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த அவரது அரசியல் பயணத்தின் போது, அவர் தனது வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவர் முர்மு. அவரது கணவர் ஷியாம் சரண் முர்மு, 2014 இல் காலமானார். அவர் தனது இரு மகன்களையும் நான்கு வருட இடைவெளியில் இழந்தார்.
முர்மு தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்தார்.
பழங்குடி சமூகத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வைப் பரப்பி, பொதுப் பிரதிநிதியாக நீண்ட காலம் பொதுமக்களுக்குச் சேவை செய்து பொது வாழ்வில் தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் முர்மு.
நாட்டின் மிக மிக உயர்ந்த ஓர் பதவிக்கு, அடித்தட்டில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இந்திய ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு!
– ரா.அ.மணவாளன்
Leave a Reply