உலகமே இந்திய இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது: பிரதமர் மோடி!
அண்ணா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று (ஜூலை 29) கலந்துகொண்ட பாரத பிரதமர் மோடி இந்தியாவின் இளைஞர்களுக்கு முக்கியமான அழைப்பை விடுத்துள்ளார். இன்று அவரது பேச்சு இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.
பிரதமர் தனது உரையில், “மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்களே, தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் திரு எல். முருகன் அவர்களே, இதர அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர். வேல்ராஜ் அவர்களே, இளம் நண்பர்களே, அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே!
அனைவருக்கும் வணக்கம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்காலம் பற்றி ஏற்கனவே நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள்.
எனவே, இன்று, வெற்றியின் தினம் மட்டுமல்ல, விருப்பங்களின் நாளும் கூட. நம் இளைஞர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற விழைகிறேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும், இதர பணியாளர்களுக்கும் இது ஓர் சிறப்பான தினம். நீங்கள் தான் நாளைய தலைவர்களை உருவாக்கும் தேச கட்டமைப்பாளர்கள். ஏராளமான பிரிவு மாணவர்கள் கல்வி பயின்று, வெளியேறியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
எனினும் ஒவ்வொரு பிரிவினரும் தனித்துவம் வாய்ந்தவர்களே. தங்களுக்கு உரித்தான நினைவுகளை அவர்கள் விட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, இன்று பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
உங்கள் குழந்தையின் வெற்றியில் உங்கள் தியாகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது இளைஞர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக சென்னை என்ற துடிப்பான நகரில் இன்று நாம் குழுமியுள்ளோம்.
125 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 1897 இல் மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் சுவாமி விவேகானந்தர் பேசினார். எதிர்கால இந்தியாவிற்கு அவரது திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டது. “எனது நம்பிக்கை, இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது.
அவர்களிலிருந்து என் பணியாளர்கள் உருவாவார்கள். சிங்கங்களைப் போல, ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் அவர்கள் தீர்வு காண்பார்கள்” என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன.
ஆனால் இந்த முறை, தனது இளைஞர்களின் மீது இந்தியா மட்டுமே நம்பிக்கை கொள்ளவில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையுடன் நோக்குகின்றன. ஏனென்றால் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி சக்திகள், இந்தியா தான் உலகின் வளர்ச்சி இயந்திரம்.
இது மிகப்பெரிய கௌரவம். இது மாபெரும் பொறுப்பும் கூட. இதில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
நம் இளைஞர்களிடையே நம்பிக்கை பற்றி பேசும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களை நாம் எவ்வாறு மறக்க முடியும்.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் டாக்டர் கலாம் மிக நெருக்கமாக இருந்தார் என்பது, இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பெருமிதம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். அவர் தங்கியிருந்த அறை, நினைவகமாக மாறியிருப்பதாக அறிகிறேன் .
அவரின் சிந்தனைகளும், மாண்புகளும் நம் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டட்டும்” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
– ரா.அ. மணவாளன்
Leave a Reply