தரத்திலும் உழைப்பிலும் மாணவர்கள் மனங்கவர வேண்டும் விலையில்லாச் சீருடைகள்!

Share Button

அண்மைக்காலமாக அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு புதிய சீருடைகளை
அறிவித்து நடைமுறைப்படுத்துவதை வழக்கமாக்கி வருவது பாராட்டுக்குரியது. எனினும், இச்சீருடை
மாற்றங்கள் மாணவரிடையே பெரிய குழப்பங்களையும் பெற்றோருக்குப் புதிய வீண் செலவுகளையும்
தோற்றுவித்து விடுவதை மறுப்பதற்கில்லை.

நடப்பில் இச்சீருடை மாற்றமானது 1 முதல் 5 வகுப்புகள், 6 முதல் 8 வகுப்புகள், 9 மற்றும் 10 வகுப்புகள், 11 மற்றும் 12 வகுப்புகள் என முறையே வெவ்வேறு வகையான பள்ளிச் சீருடைகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்த ஒன்றாகும்.

அறிவிப்பில் கண்டவாறு இப்புத்தம் புதிய பள்ளிச் சீருடைகள் காண்பதற்கு மிக அழகாகவே
இருக்கின்றன. ஆனால், நடப்பில் அந்தந்த பள்ளிகளும் உரிய அலுவலகங்கள் வாயிலாகப் பெற்று மாணவ –
மாணவிகளுக்கு வழங்கும்போது தான் அவர்கள் தரமற்ற, நீடித்து நிலைத்து நிற்காத, பொத்தான்கள் எளிதில் பிய்ந்து போகத்தக்க, ஒரிரு சலவையிலேயே சுருங்கக்கூடிய மலிவான துணியில் தைக்கப்பட்ட சீருடைகள் என்பதைத் தொன்றுதொட்டு வருவதை உணரத் தலைப்படுவதை அறிய முடிகிறது.

அதிகபட்சம் ஓரிரு மாதங்கள்தாம் அவ்வாறு வழங்கப்படும் அரசுச் சீருடைகளின் ஆயுட்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அச்சீருடைகளின் தையல் எப்போது வேண்டுமானாலும் பிரிந்தோ, கிழிந்தோ போகும் என்ற அச்சத்தின் காரணமாகவே பள்ளி நிர்வாகமே மாணவர் மூலமாகப் பெற்றோரிடம் வெளிச்சந்தையில் நல்ல, தரமான, நீடித்து நிலைக்கத்தக்க அதே வண்ணச் சீருடைகளைத் தைத்து அணிந்து வரும்படி கேட்டுக் கொள்ளும் அவலநிலை இங்குள்ளது.

குறிப்பாக, உயர்தொடக்க நிலையிலிருந்தே பல தரப்பட்ட மாணவ, மாணவிகள் அரசுச் சீருடைகளைப் பேருக்கு வாங்கி வீட்டின் ஒரு மூலையில் கிடத்திவிட்டு தாமே காசு கொடுத்து வாங்கிய அல்லது தைத்த சீருடைகளை அணிந்து வருவதையே உடைப் பாதுகாப்பாகக் கருதி வருவதை அறியும்போது அரசாங்கத்தின் வரிப்பணம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்க்கொண்டிருக்கிறதே எனக்
கல்வியாளர்கள் பலர் வேதனைப்படுவதுண்டு.

ஏனெனில், பதின்பருவத்தினருக்குத் தாம் உடுத்தும் ஆடையானது உடலைப் பாதுகாக்கும் ஒப்பற்ற கவசமாக இருக்க வேண்டும் என்பது பேரவாவாகும். எப்போது என்னவாகும் என்றும் திடீரென பிரிந்து கிழிந்தவற்றை உடன் சரிசெய்ய வழியின்றிக் கையறுநிலையில் தடுமாறி நிற்பதிலேயே காலம் கழியுமானால் கல்வி கற்பது எங்ஙனம்?

வீணான மன உளைச்சல்களால் பல்வேறு வேண்டும் விரும்பத்தகாத முடிவுகளுக்கு முன்னெடுப்பதைத் தவிர்க்க இயலாது. பல்வேறு புதுமைகளைப் புகுத்தும் பள்ளிக்கல்வித்துறையின் சீர்மிகு நடவடிக்கைகள்
பெரும்பான்மையோரின் பாராட்டைப் பெற்று பீடுநடை போட்டாலும், பருவத்திற்கொன்றாக
வழங்கப்படும் கண்ணைக்கவரும் விலையில்லா பள்ளிச் சீருடைகளின் தரம் குறித்து ஆராய வேண்டியதும்
சீரமைக்க முயல்வதும் இன்றியமையாதவை ஆகும்.

ஆண்டுக்கு மூன்று, நான்கு இணைச் சீருடைகள் வழங்குவதைக் கணக்குக்கு என்று கொள்ளாமல் ஆண்டிற்கு இரண்டு என்ற அடிப்படையில் வெளிச்சந்தைக்கு இணையாக நல்ல, தரமிக்க, அதிக நாள்கள் உழைக்கக் கூடியதாக வழங்க முயற்சிப்பதே சாலச்சிறந்த செயலாக அமையும்.

இதன்மூலமாக, பள்ளித் திறப்பிற்கு முன்னும் பின்னும் ஏழை, எளிய, வறுமைக்கோட்டிற்குக் கீழ்
வாழும் அன்றாடங்காய்ச்சிகளான பெற்றோருக்குப் பிள்ளைகளின் கல்வி சார்ந்த கூடுதல் செலவுகளைக்
குறைத்துக் கொள்ள வழியேற்படும். ஏனெனில், மற்ற எல்லா செலவுகளிலும் பெரும் செலவு புதிய
சீருடைகளைப் பிள்ளைகளுக்குப் பெற்றுத் தருவது என்பது மிகையாகாது.

கந்துவட்டிக்குக் கடன் வாங்கித்தான் பல குக்கிராமங்களில் படிக்காத பாமரர்களின் முதல் தலைமுறை எழுதப் படிக்க முயலும் குழந்தைகளின் சீருடைக் கனவுகள் பெரும் கண்ணீருக்கிடையில் நனவாக்கப்படுகின்றன.

ஆகவே, தமிழகக் கல்வி வரலாற்றில் பல்வேறு மாற்றங்களையும் புதிய மைல்கற்களையும் அடைய விரும்பும் ஆட்சியாளர்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் பள்ளிச் சீருடைகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனம்கவரும் வகையில் தொலைநோக்குடன் எண்ணிக்கை மட்டுமல்லாமல் தரத்திலும் உழைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

………………………

முனைவர் மணி.கணேசன்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *