உழைக்கும் மனுஷி!
அதிகாலையில்
முதல் ஆளாக எழுந்து
வாசல் பெருக்கிக் கோலம் வரைந்து
அலைந்து திரிந்து தண்ணீர் சேகரித்து
குவிந்த பாத்திரங்கள் அழுக்குப் போக்கி
வேகும் உயிரை நீரில் அமிழ்த்தி
அழுது அடம்பிடிக்கும்
குழந்தைகளைக் குளிப்பாட்டி
அரக்கப்பரக்க ஓடியாடி
சமையல் முடித்து
அலும்புப் பிடித்த பிள்ளைகளுக்கு
ஊட்டிவிட்டு
கணவருக்கும் சேர்த்து சாப்பாடு கட்டி
கன்னம் சிவக்க பரிமாறியதில் திட்டுவாங்கி
பற்றியெரியும் வயிற்றில்
பசியைக்கொட்டி
விரைந்தோடும் நடையோட்டத்தில்
நேரம் சுருக்கி
அலுவலகக் கதவை அச்சத்துடன் திறந்து
பூனையாய் உட்புகும் அதிகார அறையானது
கழுத்தைநெரித்து
மன்னித்து வெளியில் தள்ள
தாகம் தீரத்தீர வழிந்தோடும்
சுடுகண்ணீரை
வாரிப் பருகும் காலம் கடிந்து
வேர்வையுடன் வழியும்
எச்சில்பார்வைகளைக் கழுவி
படுக்கையில் களைத்து கண்கள் சொருகினால்
குடலைக் குமட்டும் பிராந்தி நெடிகளோடு
உடலை உணவாய் உயிருடன் குதறும்
தாலி கட்டிய மிருகம் அவளை!
……………………..
அமுதாராம்
ராஜீவ் காந்தி நகர், மன்னார்குடி.
Leave a Reply