பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது ஐநா சபையில் இன்று வாக்கெடுப்பு நியூயார்க் : ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த உள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டன் சென்றுள்ள வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் போம்பே உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். பிரதமர் மோடியும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி பல்வேறு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதும் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால் மசூத் அசார் மீது தடை விதிக்கப்படும்.
Leave a Reply