சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்திரத்தை குறைக்கவே அவரை கட்டிப்பிடித்தேன் என ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று பிற்பகல் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
முன்னதாக அவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட சேஞ்சர்ஸ் மேக்கர்ஸ் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நாடாளுமன்றத்தில் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி அவரை கட்டி பிடித்தார். இதனால் ஸ்டென்னாகி போன மோடி கட்டிப்பிடித்துவிட்டு திரும்பிய ராகுலை அழைத்து தோளில் தட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி மோடியை கட்டி அணைத்தது ஏன் என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல் கூறுகையில் அன்பு செலுத்துவதே மதங்களின் அடிப்படை. அதை வெளிபபடுத்தவே மோடியை கட்டியணைத்தேன். அன்பு மூலமாகத்தான் ஆத்திரத்தை குறைக்க முடியும். என் மீது மோடிக்கு அன்பு இல்லாவிட்டாலும் அவர் மீது எனக்கு அன்பு உள்ளது என்பதை காட்டவே கட்டியணைத்தேன். எனது குடும்பத்தை மோடி அவமதித்தே பேசி வருகிறார். இருந்தாலும் நான் அவர் மீது அன்பை காட்டினேன்.
பிரதமர் மீது எனக்கு விரோதமோ குரோதமோ இல்லை. அன்பு காட்டாதவர்கள் தான் பிறரை பற்றி யோசிக்க மாட்டார்கள். வெறுப்பை காட்டுபவர்களுக்கு அன்பை காட்டுவதே சரியான பதிலாகும். 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததிலும் நன்மை கிடைத்தது. தோல்வி அடைந்ததால்தான் அரசியலை நான் கற்றுக் கொண்டேன்.
இந்த அரசியலை கற்றுக் கொடுத்ததால்தான் எனக்கு மோடி மீது அன்பு வந்தது. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மீது யாரும் வெறுப்பது கிடையாது. அன்பின் மூலம் ஆத்திரத்தை அடக்குவது எனது குணம் மட்டுமல்ல, நாட்டின் குணம். குறிப்பாக தமிழர்களின் குணம் ஆகும் என்று ராகுல்காந்தி பேசினார்.
Leave a Reply