அவாஅறுத்தல்
பிறந்த குழந்தையாய் இருக்கும்போது, பாலுக்கு ஆசை, சிறுபிராயத்தில் விளையாட்டில் ஆசை, பருவம் அடைந்ததும் படிப்பில் ஆசை, பணத்தில் ஆசை, உத்தியோகத்தில் ஆசை, பெண்ணின்மேல் ஆசை, பிள்ளையர்கள்மேல் ஆசை, வயதாகும்பொழுது பேரன் பேத்திகள்மேல் ஆசை, வயதானாலும் உயிர்வாழ ஆசை, இப்படியாக ஆசைகள் முடிவதில்லை.
மீண்டும், முன்செய்த கர்மவினைகளால் பிறவி அமைகிறது. வினைப்பயன் வேறுபிறவிகளிலும் தொடர்ந்து வரும் ஆற்றல் வாய்ந்தது. இப்படியாக ஆசைகள் முடிவதில்லை, இறுதியில் மரணம் எதிர்கொள்கிறது.
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பீனும் வித்து –குறள்
எல்லா உயிர்களுக்கும், எந்தகாலத்திலும் நிச்சயமாக பிறவியைத் தரக்கூடிய மூலகாரணம் ஆசைதான் என்பது இக்குறளின் பொருள். எனில், இதிலிருந்து மீள வழியென்ன? மகான்களும், ஆழ்வார்களும், ஞானிகளும், ஆச்சார்யர்களும், சைவசமயக்குறவர்களும் வழிவகுத்து அருள்செய்துள்ளார்கள். ஏராளமான நூல்கள் கடைத்தேற்றத்தை விளக்குகின்றன.
”பகவத்கீதா, கிஞ்சிதபாதா” என்ற ஆதிசங்கரரின் வாக்குப்படி, எவனால் பகவத்கீதை சிறிதேனும் படிக்கப்பட்டதோ, கங்கைதீர்த்தம் துளியேனும் பருகப்பட்டதோ, விஷ்ணுவின் அர்ச்சனை தடவையேனும் செய்யப்பட்டதோ, அவனால் எமனுடன் சச்சரவு செய்யப்படுவதில்லை.
”சிவசிவ என்றிட தீவினைமாளும், சிவசிவ என்றிட தேவரும் ஆவார்” என்று திருமூலர் வாக்கின்படி சிவகதி பெறலாம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே,
ஜென்மமும் மரணமும் இன்றிதீருமே
இன்மையே ராமஎன்ற இரண்டுஎழுதினால்.
இராமநாமம் ஜென்ம கடைத்தேற்ற தாரகமந்திரம் ஆகும்
காசியில், இறந்த உடலை தன்மடிமேல் அம்பிகை கிடத்திக்கொள்கிறார், ஈஸ்வரன் அந்த உடலின் காதில் இராமமந்திரத்தை உபதேசிக்கிறார். இது இராமகிருஷ்ணரின் வாக்கு. இதனால் காசியில் இறக்க முக்தி என்பது உறுதியாகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், உபதேசங்கள் எல்லாம் பிறருக்குத்தான், தனக்கு இல்லை என்கிற ஆணவம்தான் காரணம். பாகவதம் படிப்பதும் மற்றும் கேட்பதும் முக்தியடைய சிறந்த
வழியாகும். பூந்தானம்தெரு வின்திண்ணையில் பராயணத்தைக் கேட்டிருந்த இரண்டு தென்னைமரங்கள்கூட வைகுந்தம் சென்றதைக் கேட்டு அறிகிறோம்.
தவசிரேஷ்டர்களையோ, மகான்களையோ, ஆச்சார்யர்களையோ, சமயக்குறவர்களையோ, ஞானிகளையோ தீவினையால் சூழப்பட்ட ஒருவன் அணுகும்போது, அவ்வினை செயலிழந்துவிடுகின்றது. அழிந்தும் விடுகின்றது, கடைசியில் முக்தியும் கிடைக்கிறது.
பஜகோவிந்தம் இந்த உண்மையைத் தெளிவாக விளக்குகிறது. நல்லோர் உறவால் பற்றின்மை ஏற்படும், பற்றின்மை நீங்கினால் மதிமயக்கம் தெளிவுறும். அதனால், ஆத்ம சாட்சாத்காரம் புலனாகும். அதனால், ஜீவாத்மா முக்தியடையும்.
ஸத்ஸங்க த்வேநிஸ் ஸங்கத்வம்
நிஸ்ஸங்க த்வேநிர் மோஹத்வம்
நிர்மோஹா த்வேநி ஸ்சலத்தவம்
நிஸ்சலத் தவே ஜீவன்முக்தி…
ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்
காஞ்சிபுரம்
Leave a Reply