சத்சங்கம் பற்றி சில புரிதல்கள்
இதைச் சுருக்கமாக சொல்வதைவிட, விரிவாக ஆராயவேண்டும். ஏனெனில், இதுவே மூலம், இதைப் புரிதலே அனைத்திற்க்கும் அடிப்படை. ஆகவே, இதை இன்று முதல் வரும் தொடர்களில் அறிந்துகொள்வோம். பஜகோவிந்தம் 31-வது பாடலிலிருந்து துவங்குவோம்.
குருவின் அருளால்தான் ஞானம் கிடைக்கும், அதுவே மோட்சம் பெற ஒரேவழி. நம் மக்கள் வாழ்க்கையில் பல துன்பங்கள் அடைவதைக் காண்கிறோம். ஆனந்தம் என்பது ஒரு பொய்த் தோற்றமே. எல்லோருக்கும் ஒரு துன்பம் அமைந்தே இருக்கும். எல்லோரும் துன்பக் கலப்பில்லாத வாழ்க்கை கிடைக்கவேண்டும் என விரும்புகின்றனர்.
அதற்காக பல வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதன் பலனாக, கர்மவலையில் சிக்கி மீளமுடியாமல் கடைசியில் மரணத்தில் முடிவடைகின்றனர். மீண்டும் பிறவி… மரணம்… பிறவி… மரணம்…
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி அடரே சயனம்
என்கிறார் ஆதிசங்கரர். கரையில்லாததும், கடத்தற்கரியதுமான இந்த சம்சாரத்தில் மறுபடியும் பிறப்பு; மறுபடியும் இறப்பு; மறுபடியும் தாயின் வயிற்றில் கிடத்தல்; முராரியே கருணை கூர்ந்து காத்தருள்வாயாக. இவ்வாறு மாயையில் சிக்கிய நாம் உதைபந்தாக வாழ்கிறோம். பந்தின் ஒரு உதையில் மரணம், மறுஉதையில் ஜனனம், நாம் தாமரை இலையில் உள்ள நீர்போல் அல்லல்படுகிறோம்.
வியாதியாளர்களைக் காண்கிறோம், பிட்சை எடுபவர்களையும் காண்கிறோம், சுகமாக காரில் செல்பவர்களையும் காண்கிறோம். ஒருநாய் காரில் செல்கிறது, நல்ல உணவு உண்கிறது, வேறு சிலநாய் ஒருவேளை உணவுக்கும் துன்புறுகிறது. தத்தமர் உயர்வுதாழ்வுக்கு இறைவன் காரணமல்ல. தத்தம் வினைக்கு தாமே காரணகர்த்தர்கள் ஆவர்.
மனிதப்பிறவிகள் எண்ணில் அடங்கா. அருணகிரி வாக்கின்படி, ஏழுகடல் மணல் என்கிறார். காளமேகப் புலவர், திருமாலைப் பார்த்து உன்னிலும் நாம் அதிகம், ஓதக்கேள், உன் பிறவி பத்து, என் பிறவியோ எண்ணத் தொலையாதே. மதுரகவி ஆழ்வாரின் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எததைத் தின்று எங்கே கிடக்கும்” என்கிற வினாவுக்கு விடையாக, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என நம்மாழ்வார் பதிலளிக்கிறார்.
ஜீவாத்மா, உலக இன்பங்களில் ஆசைகொண்டு இறப்பு மற்றும் பிறப்புகளில் சிக்கிக்கொள்ளும், பரமாத்மாவிடம் வரத்து என்கிறார். திருவள்ளுவரோ “பிறவி பெருங்கடல்” எனக் குறிப்பிடுகிறார். சரி, எதனால் பிறவிகள் வருகின்றன? எல்லா பிறவிகளுக்கும், துன்பங்களுக்கும் காரணம் ஆசையே, இதுவே கவுதமபுத்தரின் வாக்கும் ஆகும்.
இதையே, “ஆசை அறுமின், ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்” என திருமூலரும் கூறுகிறார். ஆசை முதலில் உள்ளத்தைக் கெடுக்கிறது, பிறகு உடலையும் கெடுக்கிறது.
ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்
காஞ்சிபுரம்.
Leave a Reply