”விலை விற்கப்படும்” : ஒரு கதை சொல்லட்டுமா? : Episode-5

Share Button

ஒரு சிறிய நாட்டில் உள்ள அரசவையில் ஒரு தளபதி இருக்கிறார். அந்த தளபதிதான் அந்நாட்டின் அரசருக்கு அவசர ஆலோசனை வழங்குவது, எப்பொழுதும் உடன் இருப்பது என்று எல்லாமுமாக இருக்கிறார். அந்தத் தளபதிக்கு ஒரு மனச் சங்கடம் இருக்கிறது.

அது என்னவென்றால், “நான் நான் நானாக இருக்க முடியவில்லையே, நிறைய இடங்களில் என்னை விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதே” என்கிற மன அழுத்தம் அவருக்கு உள்ளது. இதனைப் பற்றி யாரிடமும் பேசுவதற்கான வாய்ப்பும் அவருக்கு இல்லை. ஏனென்றால், இவர் வகிக்கும் தளபதி பதவி மற்றவர்களை இவரிடம் நெருங்கிப் பழக அனுமதிப்பதில்லை.

மேலும் அரசருக்கு நெருக்கமாக இருப்பதனால் அவர் மேலுள்ள பயம், மரியாதை காரணங்களால் அந்தத் தளபதியைச் சுற்றி மனிதர்கள் கூட்டமே இல்லாத சூழ்நிலை உள்ளது. ஆகையால் யாரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ள முடியாது தனிமையில் சங்கடத்தை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அந்நாட்டிற்கு ஒரு துறவி வருகிறார்.

அந்தத் துறவியிடம் சென்று அந்நாட்டு மக்கள் தங்கள் குறைகளைக் கூறி தீர்வும் பெற்று வருகின்றனர். இது செவிவழிச் செய்தியாக அந்தத் தளபதிக்கும் வருகிறது. அவரும் அந்தத் துறவியை சென்று பார்த்து தன் மனச் சங்கடத்திற்கு ஒரு தீர்வு காண எண்ணினார். ஒருநாள் தளபதி அந்தத் துறவியைக் காண அவரின் இருப்பிடத்திற்குச் சென்றார்.

அத்துறவியிடம், “அய்யா, நான் அரசருக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் என்னால் என் மனதில் தோன்றுபவைகளை அவரிடம் வெளிப்படையாக பேச முடிவதில்லை. அப்படிப் பேசினால் அவர் ஒரு அரசர் என்பதனைக் காட்டுகிறார். அதேபோல் எனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமும், எனக்குச் சமமாக இருக்கும் தளபதிகளிடமும் பல சமயங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு நடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இதுவே எனக்குத் தீராத மன அழுத்தமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி, “நீ தளபதியாக இருக்கும் இந்த நிலையில் உனக்குப் பிடித்த விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?” என்றார். “தளபதியாக இருப்பதில் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் பயம் கலந்த மரியாதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

போருக்குச் செல்லும்போது அதில் வெற்றியோ தோல்வியோ அந்த இக்கட்டான சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து போரிடுவது எனக்கு மிக சிலிர்ப்பாக இருக்கும். அந்த உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்.” என்று தளபதி கூறினார். அதற்கு அந்த துறவி, “இங்கு அனைத்திற்கும் ஒரு விலை கொடுக்கப்பட வேண்டும். நீ தளபதியாக இருப்பதில் நீ மிகவும் விரும்புபவைகளை அடைவதற்கு, உனக்குப் பிடிக்காத சிலவற்றை ஏற்றுக்கொள்வதை விலையாகக் கொடுத்தே ஆகவேண்டும்.” என்றார்.

நடைமுறை உணராது, தற்போது பெரும்பாலானோர் whatsapp மற்றும் facebook-ல் “நீ நீயாக இரு, யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே” போன்ற status – கள் இடுகின்றனர். நமக்குத் தேவைப்படும் உறவுகள், நமக்கு வேலை அல்லது தொழில், அதன் மூலம் வருமானம், வசதிகள், கௌரவம், மற்றும் இன்னபிற அனைத்தும் இந்த சமூகத்திலிருந்து தேவைப்படுகிறது.

அதற்கு விலையாக இந்த சமூகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் விலை என்னவென்றால்…உங்களுக்கு விருப்பம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலைதான். உங்களைத் தவிர வேறு ஒரு மனிதர் இருந்தாலே நீங்கள் வேறு ஒரு உலகத்துடன் தொடர்பு கொள்வது போலத்தான். சமூகம் என்பது தனிமனிதக் கூட்டங்கள்தான். ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். எதிர்பார்ப்பது மனிதருடைய இயல்பாகி விட்டது. ஆகையால் அந்த விலையை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும்.

சுருக்கமாக… உங்களுக்கு இந்தச் சமுதாயம் மரியாதை தர வேண்டும் என நீங்கள் விரும்பினால் அந்த சமுதாயத்திற்கு நீங்கள் பதில் மரியாதையை நீங்கள் செலுத்தியே ஆகவேண்டும். இதை நீங்கள் விருப்பமுடன் செய்கிறீர்களா இல்லையா என்பது யாருக்கும் அக்கறை இல்லை என்பதனைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். இந்த சமுதாய விதி முதலாளிகள், பணியாளர்கள், மேல்மட்டவாதிகள், அடிமட்டவாதிகள் அனைவருக்கும் பொருந்தும்.

இதனைப் புரிந்துகொள்ளும்போது, “என்னால் நடிக்க முடியவில்லை, போலியாக இருக்க முடியவில்லை, நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்” எனும் நடைமுறைக்கு ஒவ்வாத புலம்பல்களும், உங்களின் மன அழுத்தமும் விட்டு ஒழியும். நீங்கள் எதிர்பார்க்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு விலையை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும் எனும் உண்மையும் புரியும். மேலும் உங்களைச் சுற்றியுள்ள, வேண்டிய உறவுகளைக் கையாளும் கலையும் உங்களுக்குக் கைகூடும். வாழ்த்துகள்.

கதை தொடரும்… 

………………………………………………………………………………………………………………………………………………………

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *