திருச்சிற்றம்பலம் : சினிமா விமர்சனம் !
திருச்சிற்றம்பலம் : சினிமா விமர்சனம் :-
வழக்கமான படம் போல் ஓபனிங் சாங் இல்லை. பஞ்ச் இல்லை. ஓவர் செண்டிமெண்ட் பேசி முகம் சுழிக்க வேண்டியதில்லை.
திடீர் சண்டை, திடீர் பாட்டு இல்லை. தெரிந்த கதை ஆனால் இரண்டு மணி நேரம் சுவாரஸ்யமாய் கதாபாத்திரங்களே கதையை கொண்டு போகும் ஃபீல். குட் மூவி தான் திருச்சிற்றம்பலம்.
ஏற்கனவே வந்த, பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும் போல் இருந்தாலும் ரசிக்கும் படியான திரைக்கதை அனைத்தையும் மறக்கச் செய்து விடுவது படத்தின் பெரும் பலம் திருச்சிற்றம்பலம்.
கதைக்களம் :-
Food delivery செய்யும் வேலை பார்க்கும் தனுஷ்.. தந்தையான காவல் அதிகாரி பிரகாஷ்ராஜின் அலட்சியத்தால் ஒரு சாலை விபத்தில் தாயையும் தங்கையும் இழக்கிறார். அந்த கோபத்தினால் தந்தையுடன் ஒரே வீட்டில் இருந்தாலும் பேசுவதில்லை.
அவரின் தந்தையான தாத்தா பாரதிராஜா தான் தூதுவர். மூவரும் இருக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை, கோபம், சந்தோசம் கலந்து செல்கிறது.
தன்னுடைய வீட்டின் கீழே குடியிருக்கும் ஐ.டி. வேலை பார்க்கும் நித்யா மேனன் தான் தனுஷ்க்கு ஒரே ஆறுதல். உணவு டெலிவரி செய்யும் இடத்தில் பார்க்கும் பள்ளித்தோழி ராஷிக்கண்ணாவை பார்த்து சொல்லாத தன் இளம்வயது காதலை சொல்கிறார். பல்பு.
அடுத்த இன்னிங்சில் ஆட்டத்தை தொடர நினைத்து ஊர் விஷேசத்தில் பார்க்கும் பவானி சங்கரிடம் மனதை பறிகொடுக்க அவரும் அண்ணானு சொல்லாத குறையாக சொல்ல… கண்களில் ஆடித்தள்ளுபடியில் கிடைத்த மிரட்சியுடன் ஊர் திரும்புகிறார்.
ஊர்த்திரும்பியதும் என்ன ஆனது. தனது தோழியிடம் தெரிவித்த காதல் இறுதியில் என்ன ஆனது. பேசாத அப்பாவிடம் பேசினாரா. என்பதே கதை…
ப்ளஸ் :-
படத்தின் பெரிய பலம் எங்கேயும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் நார்மலாக செல்லும் காட்சி அமைப்புகள் தான்.
தனுஷ், நித்யாமேனன் திரை முழுவதும் வந்தாலும், எங்கேயும் சலிப்பு இல்லை. பிரகாஷ்ராஜ் தான் ஒரு பிறவி நடிகன் என்பதை கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்.
பாரதிராஜாவுக்கு உண்மையான கம்பேக். அவர் நடிகன் என்பதை மெய்ப்பித்திருக்கும் படம். “இதெல்லாம் ஒரு கவிதையாடா”, ஹிருத்திக் ரோஷன் மாதிரி இல்ல, மகனையும் பேரனையும் பேச வைக்கும் காட்சி, காதலுக்கு விதை போடும் காட்சி என மனுசன் பின்னி எடுத்துருக்கிறார்.
இசையும் ஒளிப்பதிவும் இயக்குநருக்கு நல்ல பக்கபலம்.
ஷில்வா மாஸ்டருடன் சண்டையில் எங்கே பறக்க விடுவாரோனு பார்த்தா அதுவும் மிக இயல்பாய் இருக்கிறது.
“ஒரு சிலர் நம்ம வாழ்க்கைல திடீர்னு வருவாங்க, ஆனா அவங்க நம்ம வாழ்க்கைல எவ்ளோ பெரிய மாற்றங்கள் உருவாக்குவாங்கனு அப்போ தெரியாது நமக்கு”.
“வயசுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை வசனங்கள் ரசிக்கச் வைக்கின்றன.
எல்லாரும் சொல்வது போல் தாத்தா பேரனுடன் தண்ணி அடிப்பது… படத்தின் காட்சி ஓட்டத்தில் பெரும் குறையாய் தெரியவில்லை.
மைனஸ் :-
சிறு வயதில் இருந்தே பழகினாலும் காதலை சொல்ல வேண்டாம். ஒரு இடத்திலாவது தோனியிருக்கும். ஆர்வக் கோளாறுல அவ தம்பியே வந்து சொல்லியிருக்கலாம்.
நித்யாவின் பெற்றோர் அவ்வளவு ஃப்ரீயா பழக விடுவாங்களானு தெரியல.
சில குறைகள் இருந்தாலும் பெரிய குறையாய் தெரியவில்லை.
எல்லா நட்பிலும் சிறு காதல் இருக்குமென சொல்லுவார்கள். படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே இதுதான் நடக்கப் போகுதென தெரிந்தாலும்… இறுதிவரை அமர்ந்து ரசிக்க வைக்கிறது. ரசிக்கும்படியாக இருக்கிறது. பார்க்கலாம்.
– மணிகண்டபிரபு
Leave a Reply