மாணவர்கள் தீவிரவாதிகளும் அல்ல ஆசிரியர்கள் ஹிட்லர்களும் அல்ல!

Share Button

மாணவர்கள் தீவிரவாதிகளும் அல்ல ஆசிரியர்கள் ஹிட்லர்களும் அல்ல!

சமீபநாட்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டுகொண்டிருந்த மாணவர்களது நெறிபிறழ் நடத்தைகள் இன்றைக்கு தினந்தோறும் காணொலிக் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

கொரோனா கால இடைவெளியில் கற்றலை மட்டுமல்ல, நிறையக் கட்டுப்பாடுகளையும் மாணவர்கள் இழந்து நிற்கின்றார்கள்.

எந்த மாணவரும் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. அவர்கள் கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு வகுப்பறைக்குள் வந்திருக்கும் மாணவருக்கும், ஆசிரியருக்குமான இடைவெளியைக் குறைப்பதற்குத் தேவையான அத்தனை வழிமுறைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும்.

மாணவர்கள் எவரும் தீவிரவாதிகள் அல்ல, வகுப்பறையில் அவர்கள் செய்யும் நெறிபிறழ் நடத்தைகளைச் சரியாகக் கையாளவில்லை என்றால், வரும் நாட்களில் அவை, வகுப்பறை வன்முறைகளாக திசை மாறக்கூடும்.

ஆசிரியர்களின் கண்டிப்பைத் தண்டிப்பாகக் காட்டும் ஊடகங்களின் மனநிலையில் பெருத்த மாற்றம் தேவை. எந்த ஆசிரியரும் மாணவருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் செய்யும்
குற்றங்களுக்கு மட்டுமே எதிரானவர்கள்.

தன் குழந்தையின் குற்றங்களை வெறுக்கும் தாயும், தந்தையுமே, நல்ல பெற்றோராக இருக்க முடியும். அதனைப் போல தனது மாணவனின் தவறுகளைத் திருத்த நினைக்கும் ஆசிரியர்களே நல்ல ஆசிரியராக இருக்க முடியும்.

இல்லம் தேடிக் கல்வி வழங்க நினைக்கும் அரசு, ஏன் பள்ளி தேடி வரும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நடத்தையில் மாற்றமே கல்வி என்பது உண்மையானால், ஆசிரியர்களை சுதந்திரமாகக் கற்பித்தலை நிகழ்த்த என்ன தேவையோ அது அத்தனையும் அரசு செய்ய வேண்டும்.
இல்லையேல் மாணவரது நடத்தையில் மட்டுமல்ல, ஆசிரியர்களது நடத்தையிலும் ஏமாற்றமே மிஞ்சும்.

பிரச்சினைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருநதால் தீர்வுகள் பற்றி யார் பேசுவது?

தீர்வு -1

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பதன் அடிப்படையில் இதனை ஆய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

தங்களது குழந்தைகளுக்காக அனைத்துப் பெற்றோர்களுமே உழைக்கின்றார்கள். அவர்களது முன்னேற்த்திற்காக ஆசைப்படுகின்றார்கள்.

ஆனால் அவர்களுடைய வளர்ச்சியின் மீதான அக்கறை என்பது அவர்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக மட்டும் இருக்கின்றது. அவர்களைக் கண்காணிக்கத் தவறிவிடுகின்றனர்.
அவர்கள் திசைமாறுவதை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.

காரணம் முன்பெல்லாம் ஆசிரியர்களை பெற்றோர்கள் அடிக்கடி சந்திக்கும் வழக்கம் இருந்தது.
பெற்றோர் சந்திப்புக் கூட்டம் என்பதோ, தேர்வு முடிந்தததும் மாணவர் முன்னேற்றம் குறித்தோ கலந்துரையாடும் வழக்கம் இருந்தது.

அதன்மூலம் மாணாக்கத்களது நடத்தை , கல்வி சார்ந்த பிரச்சினைகள் ஆராயப்பட்டன. தீர்வுகள் உடனுக்குடன் கிடைத்தன.

ஆனால் இன்றைக்கு அந்த வழக்கங்கள் கரைந்துபோய் விட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பதே ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான முதன்மையான அமைப்பு. அதனை உயிர்ப்பிக்காத வரை, இந்த சம்பவங்கள் நீண்டுகொண்டே இருக்கும்.

தீர்வு – 2

மாணவர்களது கற்றல் சுதந்திரம் என்னும் பெயரில் ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரத்திற்கு கைவிலங்கிட்டு, மகிழ்ச்சியான மனநிலையில் ஆசிரியர்களைக் கற்பிக்கும் பணியை சரிவர ஆற்றவிடாமல் கல்விமுறை தடுக்கிறது.

கற்பித்தலுக்காக மட்டும் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டுமே தவிர, பிற பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது.

தீர்வு – 3

சின்னத்திரை, வண்ணத்திரை என இரண்டும் போட்டி, போட்டுக்கொண்டு நெறிபிறழ் நடத்தை உடையவர்களையே நாயகர்களாகக் காட்டுகின்றன.

ஆசிரியர்களைக் கேலி செய்தல், பள்ளியில் காதல் செய்தல், போதைப் பொருள்களைப் பயன்படுத்தல் இவை எல்லாம் பள்ளிப்பருவத்தின் ஓர் அங்கமெனக் காட்டுவதும், அது
படைப்பாளியின் படைப்புரிமை என்பதும் வணிகத்திற்காக சிறிதும் அக்கறையற்ற ஊடகங்களின் போக்கு முற்றிலுமாக மாற வேண்டும். அவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

தீர்வு – 4

பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் கட்டாயம் நடைபெற வேண்டும். அங்குதான் கீழ்ப்படிதல், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல், விட்டுக்கொடுத்தல், குழு மனப்பான்மை என அத்தனை நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் இன்றைக்கு விளையாட்டுப் பாடவேளைகள் என்பது அடுத்த பாடவேளைகளுக்கு விட்டுக்கொடுக்கும் பாடவேளைகளாக மாறிவிட்டன. மதிப்பெண்கள் அதிகரித்து விட்டன.
மதிப்பான எண்ணங்கள் குறைந்து விட்டன.

விளையாட்டு வகுப்புகளின் மூலம் மாணவர்களது மனவெழுச்சியில் சமநிலை ஏற்படும் என்கிற அறிவியலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தீர்வு- 5

இன்றைக்கு மத, இன, சாதி ரீதியிலான குழுக்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டன.
அவை பல இடங்களில் ஆசிரியர்கள் வடிவிலும் நுழைந்திருக்கின்றன.

சாதி,மத அடிப்படையில் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுவது, மாணவர்களிடம் அதனை ஊக்குவிப்பது, சில குறிப்பிட்ட தலைவர்களை மட்டும் பள்ளிகளில் கொண்டாடுவது என
மாணவப் பருவத்தில் நஞ்சு வளர்க்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களையும் அப்புறப்படுத்த வேண்டி இருக்கிறது.

அத்தோடு கல்வியோடு நேரடித்தொடர்பு இல்லாத நபர்கள் கல்வி ஆர்வலர்கள் என்னும் பெயரில் பள்ளிகளுக்குள் நுழைந்து, மாணவ, மாணவியரைத் தவறாக வழிநடத்துவதையும்,
தனித்திருக்கும் பெண் ஆசிரியர்களைத் தடம் மாற்றுவதையும் தடுத்திட வழிகாண வேண்டும்.

தீர்வு- 6

நன்றாகச் செயல்படும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல், ஊடக வெளிச்சத்திற்காக மட்டுமே செயல்படுகின்ற ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு மட்டும் அங்கீகாரம் கொடுக்கப்படும்பொழுது, சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் சோர்ந்து போய்விடுகின்றன.

அவர்களின் சோர்வு மாணவர்களின் மீதான அக்கறையைக் குறைத்து விடுகின்றது. களத்தில் உழைப்பவர்களைக் கண்டுபிடித்து பாராட்ட வேண்டியது அவசியம்.

தீர்வு- 7

ஆசிரியரோ, மாணவரோ தவறு செய்தால் குறைந்தபட்ச தண்டனையை உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அதுவே மற்றவர்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்தி, தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பைக் கொடுக்கும்.

அதேபோல ஆசிரியர்கள் மீதான பொய்யான புகார் எனில், அந்தப் புகார் அளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்.

தீர்வு- 8

பெண் ஆசிரியர்கள், மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களில் எவர் ஈடுபட்டாலும்
அவர்கள்மீது தயவின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளும், ஆசிரியர்களும் சில இடங்களில் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது என்பது தொடர்ந்துகொண்டே வருவது கல்வித்துறையின் மீதான நல்லெண்ணத்தைச் சிதைத்துவிடும்.

தீர்வு- 9

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் குறைதீர் பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இக்குழு மாதம் ஒருமுறை மாணவர்களைச் சந்தித்து உரையாட வேண்டும். மாணவர்கள், தங்களது பிரச்சினைகளை , தேவைகளைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்.

மாணவர் குறைதீர்குழு, மாவட்ட நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பில் இருத்தல் அவசியம்.

தீர்வு- 10

பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்கவே மாட்டோம் என்று வைத்திருந்த அலைபேசியை கட்டாய கற்றல் உபகரணமாக மாற்றிவிட்டோம்.

அதன் மூலம் இணையத்தில் இருக்கும் அத்தனை வக்கிரங்களும் மாணவர்களிடத்தில் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றன.

அலைபேசி பயன்பாட்டுக்கு பள்ளியில் தடை செய்ய வேண்டும். இயலாது எனில் கற்றலுக்காக மட்டுமே பயன்படத்தக்க வகையில் அனைத்து மாணவர்களுக்கும் கையடக்க கணினி (டாப்லெட்) வழங்கிவிட்டு, தொழில்நுட்பத்தை மாணவர்களிடம் வழங்கத்தொடங்க வேண்டும்.
இல்லையேல் விளைவுகள் இன்னும் மோசமாகச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

எந்த உபகரணமும் கற்பித்தலுக்கு உதவலாமே தவிர, அவை ஆசிரியராக முடியாது.
தொழில்நுட்பங்கள் உணவில் உப்பாகத்தான் இருக்குமே தவிர, ஆனால் ஒருபொழுதும் உப்பு
உணவாகாது.

இப்பொழுது உப்பை உணவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றோமோ என்னும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு மாற்று தொழில்நுட்பம் இல்லை என்பதை உணர்தல் அவசியம்.

மேற்கண்ட தீர்வுகளை திறந்த மனதோடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும், உரியவைகளையும், உகந்தவைகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறையை நேசிக்கும் அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது.

சிகரம்சதிஷ்
எழுத்தாளர் – ஆசிரியர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *