10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி
சென்னை :-
10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி!
பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார் சேலம் RR தமிழ்ச்செல்வன்.
வறுமையின் காரணமாக பத்து வயதில் ஹோட்டலில் டீ கிளாஸ் கழுவிக்கொண்டிருந்த சிறுவன், ஹோட்டல் தொழிலே வேண்டாம், மூட்டை தூக்கியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று சென்னைக்கு ஓடிவருகிறான்.
ஹோட்டல் தொழிலே வேண்டாம் என்று ஒதுக்கிய, அந்த சிறுவனை நீ உழைக்கப் பிறந்தவனப்பா அதிலும் ஹோட்டல் தொழில்தான் உனக்கு சிறப்பாக இருக்குமப்பா என்று காலம் போட்ட கணக்கு தப்பவில்லை. இன்று அந்த தொழிலில் பேர் சொல்லும் பிள்ளையாக மட்டுமின்றி ஊர் சொல்லும் பிள்ளையாக உயர்ந்து நிற்கும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் நிறுவனர் ஆர். தமிழ்ச்செல்வன்தான் அச்சிறுவன்.
சென்னை முழுக்க 30-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வனின் அயராத உழைப்பும், அவர் பட்ட அவமானங்களும், துன்பங்களும் அவருடைய வரலாற்றுப் பக்கங்களில், காலமானது ‘வலி’ நிரம்பிய ‘மை’ கொண்டு, வலிமையாக எழுதி வைத்திருக்கிறது. அதை அறியாதோர் பலர்.
சேலம் ஆர்.ஆர்.பிரியாணி ஹோட்டல் குழுமத்தின் அதிபர் என்பதைத் தாண்டி, சென்னை ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கத் தலைவர், சமூக சேவகர், சினிமா நடிகர் என பன் முகங்களைக் கொண்டிருக்கிறார்.
விவசாய உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பவர் என்று மத்திய அரசின் விருதினைப் பெற இருக்கும் ஆர். தமிழ்ச்செல்வனை, ஒரு மழைக்கால மாலை நேரத்தில் சந்தித்தோம். வெளியே வானம் அதுநாள் வரை சேமித்து வைத்திருந்த நீரை எல்லாம் மழையாக பூமிக்கு அனுப்பிக்கொண்டிருக்க, எனது கேள்விக்கணைகளுக்கு, தமிழ்ச்செல்வனும் சேலத்துத் தமிழில் பதில் மழையாகப் பொழிந்தார்.
அந்த அனுபவ மழைப்பொழிவை அப்படியே அள்ளித்தருகிறேன். அதை உங்களின் விழிகளால் பருகி, நினைவில் இருத்தத் தயாராகிக்கொண்டு வாசிக்கத் தொடங்குங்கள்…
உங்களது பூர்வீகம் பற்றியும் உங்களுடைய பெற்றோர்களைப் பற்றியும் சொல்லுங்க?
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்து இருக்கும் ஆலச்சம்பாளையம் என்ற கிராமம்தான் எனது பூர்வீகம். அப்பா பெயர் ராஜு. அம்மா பெயர் பழனியம்மாள். குடும்பத்துக்கு மூத்த பிள்ளையாக 1971-ல் பிறந்தேன் நான். எனக்குப் பிறகு ஒரு தங்கை பிறந்தார். அப்பாவும், அம்மாவும் எங்க கிராமத்துல, கீத்துக்கொட்டகையில டீக்கடையும், இட்லி கடையும் போட்டு வியாபாரம் பண்ணுவாங்க. அப்போ ஒரு பரோட்டாவோட விலை 35 பைசாவா இருந்துச்சு.
விடிகாலையில வேலையை ஆரம்பிச்சாங்கன்னா ராத்திரி ஆயிடும் வேலையை முடிக்க. இப்படி போயிகிட்டிருந்த வாழ்க்கையில மரண தேவன் திடீர்னு என் தாயை எங்ககிட்ட இருந்து பறிச்சிகிட்டான். அப்போ எனக்கு நாலு வயசுதான் இருக்கும். அம்மா போன சோகத்துல அப்பா குடிக்கு அடிமையாகிட்டாரு.
எங்களோட பெரியம்மா வீட்டுலதான் நானும் என் தங்கச்சியும் வளர்ந்தோம். ஆலச்சம்பாளையம் கிராமத்துக்குப் பக்கத்துல இருக்குற நைனாம்பட்டி அரசுப்பள்ளியிலதான் படிக்க சேர்த்துவிட்டாங்க. நல்லா படிச்சேன். சிலேட்டு ஏன் வாங்கிட்டு வரலன்னு வாத்தியார் அடிச்சாரு.
சிலேட்டு வாங்க அப்போ காசில்ல. அந்தளவுக்கு வறுமை. எங்க பெரியம்மாவால, என்னை நாலாவது வரைக்கும்தான் படிக்க வைக்க முடிஞ்சுது. அவங்க வீட்லயும் வறுமை தாண்டவமாடினதால வேலைக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு.
ஒன்பது வயசுல என்ன வேலைக்கு போனீங்க?
அந்த வயசுல என்ன வேலை கிடைக்கும். சின்னப் பையன் நான். ஊருக்குள்ள ஒரு டீக்கடை இருக்கும். அதுல டீ கிளாஸ் கழுவுற வேலை கிடைச்சது. டீ கிளாஸ் கழுவுனாதான் வயித்தைக் கழுவ முடியும். கிளாஸ் கழுவறதுக்கு உயரம் பத்தலைன்னு ஆற்றில் இருந்த கல் ஒன்றை எடுத்து மேடை போல வச்சி, அதில் ஏறி டீ கிளாஸ் கழுவ ஆரம்பிச்சேன்.
ஒரே ஊருங்கறதால என்னோட உறவுக்காரங்க, தெரிஞ்சவங்க எல்லோரும் டீ குடிக்க கடைக்கு வருவாங்க, அவர்கள் முன்னாடி வேலை செய்ய அவமானமாக இருந்தது. அவங்க வரும்போதெல்லாம் கடைக்குள்ள போய் ஒளிஞ்சிக்குவேன். எத்தனை நாளைக்குதான் ஒளிஞ்சிகிட்டிருக்கிறது. இது சரிப்பட்டுவராதுன்னு ஒரு முடிவெடுத்தேன்.
என்ன முடிவு எடுத்தீங்க?
சொந்த ஊர்ல இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். வெளிய எங்கயாச்சும் போய், ஹோட்டல் தொழிலில் இறங்காம, வேற வேலை எதாச்சும் செஞ்சு பொழச்சுக்கணும்ங்கற எண்ணம் மட்டும் இருந்தது. போற எடத்துல நம்மாளுங்க யாரும் இருக்கக் கூடாது. அப்படி ஒரு இடத்துக்குப் போயிடணும். அப்படி பாத்தாக்கா, சென்னைதான் நமக்கு சரியா இருக்கும்.
அங்க போய் எப்படியாச்சும் பொழைச்சுக்கலாம்னு சென்னைக்கு ரயிலேறலாமுன்னு முடிவு பண்ணேன். சென்னைக்கு போக காசு வேணுமே. அப்போ எங்க ஊர் தார் ரோட்டில் பதிந்து கிடந்த மாட்டு லாடங்களையெல்லாம் பொறுக்கி எடுத்துக்கொண்டுபோய் எடைக்கு போட்டேன் 18 ரூபாய் கிடச்சது. அதை எடுத்துகிட்டு ரயிலேறினேன்.
அந்த பணம் சென்னை வரை வருவதற்கு பத்தல. ஒரு டிடிஆர் என்னோட கதையை கேட்டுட்டு அவரே சென்னைக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பி வச்சாரு. அப்போ எனக்கு வயசு 10 இருக்கும். வந்தாரை வரவேற்கும் சென்னை என்னையும் வரவேற்றுச்சு. வரவேற்ற விதமே வேறமாதிரி இருந்துச்சு.
சென்னையில் உங்க ஆரம்பகால கட்ட வாழ்க்கை எப்படி இருந்தது?
சென்னை சென்ட்ரல்ல வந்து இறங்கும்போது பயங்கர பசி. வெளியவந்தபோது பசியில் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். முகம் தெரியாத யாரோ ஒருவர் என்னை தாங்கிப்பிடிச்சு, ஜவ்வரிசி பாயாசத்துல, தேங்காப்பூ போட்டு ஒரு கண்ணாடி டம்ளர்ல வாங்கிக்கொடுத்தார்.
அதைக் குடிச்சபிறகுதான் எனக்கு தெம்பே வந்துச்சு. பசியோடு வந்த என்னை, இனிப்பு கொடுத்து வரவேற்றது சென்னை. யாருப்பா நீ என்று அவர் என்னை கேட்டார். என் கதையை முழுக்க சொன்னேன். சங்கர் கபேன்னு புதுசா ஒரு ஓட்டல் திறந்திருக்காங்க. அங்க உனக்கு வேலை வாங்கித்தரேன் வா என்றார்.
ஹோட்டல் வேலை வேணாமுங்க. மூட்டை தூக்கற வேலைல சேர்த்து விடுங்க என்றேன். கொத்தவால் சாவடியில் மூட்டை தூக்கும் வேலைக்கு சேர்த்துவிட்டார். அவர் யார் எங்கே இருக்கிறார் என்று இன்று வரை தெரியல. ஆனாலும் அவரை நன்றியோடு நினைச்சி பாத்துக்குறேன்.
சின்னப்பையனால எவ்வளவு தூக்கமுடியும். ஆனாலும் மூட்டை தூக்கினேன். அதில் கிடைத்த கூலி, வயித்த நிரப்புவதற்கே பத்தல. இரவுல தூங்க முடியாது. பயங்கரமா கொசு கடிக்கும். கோணிப்பையை போத்திகிட்டு தூங்குவேன்.
தங்கச்சியை கல்யாணம் செஞ்சி கொடுக்கணும். பெரியம்மாவை பாத்துக்கணும்ங்கற எண்ணம் மட்டும் மனதில் கனன்று கொண்டே இருந்தது. கொஞ்சநாள் அப்படியே இருந்துட்டு, இது சரிப்பட்டுவராது. ஏதாவது ஓட்டலில் வேலை பார்த்தால் மூன்று வேளை உணவு வயிறார சாப்பிடக் கிடைக்கும் என நினைத்து வேலை தேடினேன்.
போரூரில் துர்க்கா பவன் ஓட்டலில் தட்டு கழுவும் வேலை கிடைச்சது. அந்தக் காலம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ஹோட்டல் என்பதால் மூன்றுவேளையும் கஸ்டமர்கள் வருவாங்க. சாப்பிடுவாங்க. அதனால பாத்திரம் விழுந்துகிட்டே இருக்கும். நாள் முழுக்க பாத்திரம் கழுவிக்கிட்டே இருக்கணும்.
அப்படி நாள் முழுக்க செய்துகொண்டே இருந்ததால் கையெல்லாம் புண்ணாகி, கையிலிருந்த நகமெல்லாம் கொட்டிடுச்சி. கால்ல சேத்துப்புண் வந்துடிச்சி. சாப்பிடணும்னு உக்காந்தோம்னா கையில் ஏதாவது பேப்பரைச் சுத்திகிட்டுத்தான் சாப்பிடவே முடியும்.
அப்படி எல்லாம் கஷ்டப்பட்டபிறகு, அதே ஹோட்டலில் சர்வரானேன். அடுத்த பத்து ஆண்டுகளில் சென்னையில் பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்துவிட்டேன். அப்படி வேலை செய்யும்போது என்னுடன் வேலை செய்த செந்தில் என்பவர் நண்பராகிறார். எத்தனை காலத்துக்குத்தான் சர்வரா இருக்கிறது.
நாமளே ஓட்டல் நடத்தினா என்னன்னு செந்தில்கிட்ட ஒருமுறை சொன்னேன். பணத்துக்கு எங்க போறது என்று கேட்டான். நம்மகிட்ட இருக்கிற கையிருப்பை வைச்சி செய்வோம் என்றேன்.
எங்கே ஹோட்டல் தொடங்குனீங்க?
சர்வராக வேலை பார்த்தபோது கிடைத்த சம்பளம், டிப்ஸ் இவற்றை சேமித்து, பல்லாவரத்தில் ஒருவரிடம் சீட்டு போட்டிருந்தேன். செந்திலிடம் ஒரு 8 ஆயிரமும் என்னிடம் ஒரு 11 ஆயிரமும் இருந்தது. அதை முதலீடாக வைத்து 1992-ல், முதன் முறையாக கூடுவாஞ்சேரியில், தள்ளுவண்டியில் எங்களது ஹோட்டலை ஆரம்பிச்சோம்.
அப்போ ஒரு தள்ளுவண்டியின் விலை 2000 ரூபாய். புரசைவாக்கம் அபிராமி தியேட்டர் பின்புறத்தில் அதை வாங்கிகொண்டு, ஒரு இரவு முழுக்க அங்கிருந்து கூடுவாஞ்சேரி வரை தள்ளிக்கொண்டே வந்தேன். அப்படி செய்ததால் 300 ரூபாய் மிச்சமானது.
எங்களின் தள்ளு வண்டி ஹோட்டலில் இட்லி, தோசை, பரோட்டா, வறுகறின்னு எல்லா அயிட்டமும் இருக்கும். கொடுக்கற உணவை சுத்தமாகவும், சுவையாகவும், கொஞ்சம் தாராளமாகவும் கொடுக்கறதுதான் எனது பழக்கம்.
அதனால அங்கிருந்த எல்லா உழைக்கும் மக்களும் என் தள்ளுவண்டி கடைலதான் சாப்பிடுவாங்க. என் கை பக்குவத்துக்கு அடிமையாகி முன்கூட்டியே காத்திருப்பாங்க. அன்று தொடங்கிய அந்த ஓட்டம்தான் இது.
என்னுடன் இணைந்து தொழில் செய்த நண்பர் செந்தில் திருமணத்திற்கு பிறகு விலகி மதுரைக்கு சென்று சொந்தமாக பெயிண்ட கடை வைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பிறகு தனித்து நின்று போராடி பல்வேறு வலிகள், வேதனைகள், ஏமாற்றங்கள், துரோகங்கள் எல்லாத்தையும் தாண்டி இன்று சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடையின் நிறுவனர் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.
இட்லி கடை நடத்திய அனுபவம் பற்றி சொல்லுங்க?
இட்லி கடை போடறதுன்னா சும்மா இல்லீங்க. முதநாளே அதுக்கு அரிசி, பருப்பு ஊறப்போட்டு ஆட்டிவைக்கணும். விடிகாலையிலயே எந்திருச்சி அதுக்கு சாம்பார் வைக்கணும், சட்னி வைக்கணும். வடை போடணும். கறிக்குழம்பு வைக்கணும். இட்லி ஊத்தணும். தோசை ஊத்தணும். கடையில நான் தோசை சுடுவது, இட்லி அவிப்பது, கல்லாவை பார்ப்பது என பரபரவென வேலை செஞ்சிகிட்டே இருப்பேன்.
ஒரு ஆளால தள்ளுவண்டிகடை நடத்துறது சிரமம். ரெண்டுபேராச்சும் வேணும். நண்பன் செந்தில் சப்ளை வேலை பாத்துக்குவான். நாள் முழுக்க இதில் உழைப்பை அதிகம் செலுத்த வேண்டும். ராத்திரி தூங்கறதுக்கே மணி 12 ஆயிடும். காலைல சீக்கிரமா எந்திரிக்கணும்.
இது மட்டுமில்லாம மாமுல் தொல்லைகள், ரவுடியிஸத் தொல்லைகளால் என் நண்பன் செந்தில் நமக்கு இது சரிப்பட்டு வராதுன்னு சொல்லி ஊருக்கு போயிட்டார். இப்போ அவர் மதுரையில் பெயிண்ட் கம்பெனி நடத்திவருகிறார்.
தனி ஒரு ஆளா எப்படி சமாளிச்சீங்க? யார் துணைக்கு வந்தா?
நான் ஒரு ஆள் எப்படி சமாளிப்பது, அப்படி இருந்த காலகட்டத்துலதான் என் மனைவி அமுதாவை சந்திக்கிறேன். அவங்க காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்து எல்லா வேலையையும் முடிச்சிட்டு 7 மணிக்கெல்லாம் வேலைக்கு போயிடுவாங்க. அழகான பொண்ணா பாக்கல. அன்பா கவனிச்சிக்கணும், உழைப்பாளியா இருக்குணும்னு முடிவுல இருந்தேன்.
அதுக்கு பொருத்தமா அமுதா இருந்தாங்க. அவங்க பின்னாடியே போய்கிட்டிருந்தபோது, டேய் என்ன என் பின்னாடியே சுத்திகிட்டிருக்க என்று மிரட்டினாங்க. உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமுன்னுதாங்க சுத்தறேன்னு சொன்னேன். டேய் உனக்கு மீசையே இன்னும் முளைக்கலையே என்றார். எல்லாம் முளைக்குமுங்க.
50 ஆயிரம் ரூபாய் சீட்டு போட்டு வச்சிருக்கேன். நல்லா பாத்துக்குவேன். யாருகிட்ட பேசணும்னு சொல்லுங்க. வந்து பேசறேன்னு சொன்னேன். அவங்களுக்கு என் மேல நம்பிக்கையே வரலை. அவங்க வீட்ல பேசினதுல பொண்ணு வீட்ல திருப்தியாகிட்டாங்க. பொண்ணு அப்புறமாதான் ஒத்துகிட்டாங்க. இந்த பிரச்சினை முடியறதுக்குள்ளயே அடுத்த பிரச்சினை வந்துச்சி.
நான் சீட்டு போட்டது ஒரு ரவுடி குடும்பத்துகிட்ட. அண்ணன், தம்பிகளை பார்த்தா பயங்கரமா இருப்பானுங்க.
பையன் நல்லா ஒழுக்கமா இருக்கான். சிக்கனமாவும் பொறுப்பாவும் இருக்கிறான். 50 ஆயிரம் ரூபா சீட்டு போடற அளவுக்கு உழைப்பாளியாவும் இருக்கிறான்.
இவனுக்கு நம்ம தங்கச்சியை கட்டிகொடுத்துடணும்ங்கற எண்ணத்துல இருந்திருக்கானுங்க. இது நமக்கு தெரியல. என் கல்யாணத்துக்குப் பிறகு போய் சீட்டுப்பணத்தை கேட்டா, என் பொண்ணை ஏமாத்திப்புட்ட நீ பணமும் இல்ல ஒண்ணும் இல்லன்னு மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
நான் எங்கே உங்க பொண்ணை ஏமாத்தினேன். என் பணத்தை கொடுங்கன்னு அழுது புரண்டேன். 20 ஆயிரம் கொடுத்தாங்க. மீதிய அவங்க தரவே இல்ல. துணைக்கு வந்தவங்க இல்ல அமுதா. துணைவியா வந்தவங்க, தாய்க்கு தாயாவும், தாராத்துக்கு தாரமாவும் இருந்து என்னை பாத்துகிறவங்க. நாங்க ரெண்டு பேரும் பட்ட கஷ்டத்துக்கு அளவே கிடையாது.
தாம்பரம் ரங்கநாத புரத்துல வாடகைக்கு வீடு கேட்டா, ஓட்டல் கடை வச்சிருக்கான். தண்ணி அதிகமா செலவாகும்னு வீடே தரமாட்டாங்க. அப்படி இருந்தும் ஒரு ஆளு வீடு கொடுத்தாரு. வீட்டுக்குள்ள மொட்டைக் கிணறு. ஆறு மாசம் தினம் தினம் அந்த கிணத்துக்குள்ள இறங்கி நானே தோண்டித் தோண்டி ஊத்தெடுக்க வச்சேன். என் மனைவி கால நேரம் பாக்கம என்னோட தோள்கொடுத்து நின்னாங்க. அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு தள்ளுவண்டி கடையை நடத்திகிட்டிருந்தேன்.
இட்லி கடையிலருந்து பிரியாணி கடைக்கு மாறியது ஏன்?
செந்தில் போன பிறகு ராமலிங்கம் என்ற மற்றொரு நண்பன் என்னோடு இணைந்து கொண்டான். கடையை நடத்த ஆரம்பிச்சேன். இட்லி கடைக்கு அதிக உடல் உழைப்பு போடவேண்டியதாக இருந்தது. இப்படியே இருந்த நிலமை என்னாகுறது? மாத்துவோம்னு முடிவு பண்ணி பிரியாணிக்கு மாறுறேன்.
பிரியாணி செய்யறதுல என்ன ஒரு சௌரியம் (வசதின்)னா, பிரியாணியிலேயே கறி வந்துடுது, முட்டை வந்துடுது. அதுக்கு நீங்க வெங்காய பச்சடி ஒன்னு கட்டி கொடுத்தா போதும்.
இதுலயே வாடிக்கையாளருக்கு எல்லா சத்தும் கிடைச்சுடுது. ருசியும் கிடைச்சிடுது. கறியும் கிடைச்சுடுது. பார்சல் கட்டுற வேலையும் கம்மி. அதனாலதான் பிரியாணி வியாபாரத்துக்கு மாறினேன். இன்று சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை சுவைக்கு இணையில்லைன்னு வாடிக்கையாளர்கள் சொல்லும்படி கடைகளை நடத்திகிட்டிருக்கேன்.
இட்லி கடை வைச்சிருந்த உங்களுக்கு பிரியாணி செய்யற வித்தை எப்படி வந்தது?
என்னோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த ராமலிங்கத்துக்கு ஒரு பீரை வாங்கிக்கொடுத்து, நெசப்பாக்கத்தில் தள்ளு வண்டி கடை வைத்திருக்கும் ஜமல் பாய் கூட்டிக்கொண்டு போய்விட்டார். மனசு நொந்து போயிட்டேன். பாய்கிட்ட நேரே போனேன். ஏன் இப்படி பண்ணுனீங்கன்னு கேட்டேன்.
இப்போதான் புதுசா கடையை ஆரம்பிச்சேன். அனுபவம் தெரிஞ்ச ஆள் வேணும்னுதான் ராமலிங்கத்த கூட்டிகிட்டு வந்துட்டேன்னு சொன்னார். நானும் உங்க கூட வேலை செய்யறேன் பாய். பத்துநாள் இருந்து தொழில் எப்படி பண்ணனும்னு சொல்லிக்கொடுத்துட்டு போறேன்னு சொல்லி அவர் கூடவே இருந்தேன்.
அவரோட உறவுக்காரர் குரானா பாய்னு ஒருத்தர் செங்கல்பட்லருந்து இவர் கடையில பிரியாணி செய்யறதுக்கு வந்தார். அவர் பிரியாணி செஞ்சார்னா அந்த இடமே மணக்கும். சுவையும் அற்புதமாக இருக்கும். முத நாள் அவர் செஞ்சதை அவர் கூடவே இருந்து பார்த்தேன். அவருக்கு நூறு ரூபாய் சம்பளம் போட்டு கொடுத்தார் ஜமால் பாய். சொந்தகாரன்னுகூட பாக்காம என்ன கூலிக்காரன்னு நினைச்சுட்டியான்னு அவரு மறுநாள்ல இருந்து கடைக்கு வரல.
அப்புறம் என்ன பண்றதுன்னு நானே பிரியாணி சமைச்சேன். குரானா பாய் செஞ்சதை மனசுல வச்சிகிட்டு ரெண்டுநாள் சுமாரா செஞ்சேன். வாடிக்கையாளர்கள் கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது. அதன் நுணுக்கங்களை அனுபவத்தில் உணர்ந்து கொண்டு அதை பிடிச்சிகிட்டேன். ஜமால் பாய்க்கு சொன்னபடி செஞ்சிகொடுத்துட்டு, மறுபடி என்னோட கடைக்கு வந்துட்டேன்.
உங்க பிரியாணிக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் செஞ்சீங்க? எப்படி வாடிக்கையாளர்களை கவர்ந்தீங்க?
இட்லிக்கு பதிலா பிரியாணி கடை போடப்போறேன். அப்போ எல்லாம் சம்பா அரிசிதான் பிரியாணிக்கு போடுவாங்க. பாஸ்மதி அரிசி போடமாட்டாங்க. 5 ஸ்டார் ஹோட்டல்லதான் சமைப்பாங்க. சம்பா அரிசி அப்போ கிலோ 5 ரூபாய். அந்த சமயத்துல இரட்டைமான் ரக பாஸ்மதி அரிசி கிலோ ரூ. 12.50. அதை பயன்படுத்தினேன். பிரியாணிக்கு மசாலா பொருட்கள் ரொம்ப முக்கியம்.
ஏலக்காய், மிளகு, பட்டை, லவங்கம் எல்லாம் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விகிதத்துல போடணும். விறகு அடுப்புலதான் சமைக்கணும். தீயை எப்படி கூட்டணும் குறைக்கணும்னு தெரிஞ்சி வச்சிருக்கணும். தள்ளுவண்டி கடையில முதன் முதலில் பாஸ்மதி அரிசியில் பிரியாணி போட்ட முதல் ஆள் நான்தான். பாஸ்மதி அரிசி வெந்து வரும்போது வாசனை தரும்.
அதனோடு பதமாய் வெந்த கறி, அளவாய் சேர்க்கப்பட்ட மசாலா எல்லாம் சேர்ந்துச்சுன்னா, அந்த வாசம் ஆளையே தூக்கும். அந்த பக்குவம் எனக்கு இருந்தது. ருசி பிரம்மாதமா இருக்கும். மசாலா கொடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. ருசி முதன்மையாகவும், கொடுக்கற சாப்பாட்டை அதிகமாகவும் கொடுத்தேன். மனசும் நிரம்ப, வயிறும் நிரம்ப சாப்பிட்டவங்க எல்லோரும் என்னோட வாடிக்கையாளர்களா மாறிட்டாங்க.
இதுல என்ன ஒரு கலாட்டா நடந்துச்சான்னா, டபுள் டீர் பாஸ்மதி ரைஸ் சரியான பதத்துல வெந்துச்சுன்னா ஒன்றிலிருந்து ஒன்றரை இன்ச் நீளத்திற்கு சோற்று பருக்கை இருக்கும்.
ஒன்றோடு ஒன்று ஒட்டாது. இது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு, சேமியாவாக தெரிய, என்னிடம் சண்டைக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. சத்தியமா இது பாஸ்மதி அரிசிங்கன்னு சொன்னாகூட ஒத்துக்க மாட்டாங்க. ஏய் சேமியால பிரியாணி செஞ்சிபோட்டுட்டு எங்களை ஏமாத்தப் பாக்கறியா. ருசி நல்லா இருக்குதேன்னு உன்னை அடிக்காம விட்டுட்டுப் போறோம்னு சொன்னவங்க நிறைய பேரு.
அதன்பிறகு, இந்த அரிசியையும், அரிசி சாக்கையும் எப்போதும் கடையில வச்சிக்குவேன். யார் கேட்டாலும் இதைக் காட்டுவேன். அதன்பிறகுதான் நம்புவாங்க.
சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை எப்ப ஆரம்பிச்சீங்க? கடைக்கு ஏன் அந்த பெயரை வச்சீங்க?
எனது கடை பிரியாணியின் சுவை பிடித்துப்போகவே நிறைய பேர் தேடிவர ஆரம்பித்தார்கள். எம்.எல்.ஏ, அரசியல் பிரமுகர்கள் என நிறைய விஐபிக்கள் எங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். ரோட்டில் நின்று கொண்டு சாப்பிட அவர்களுக்கு கூச்சமாக இருப்பதாகக் கூறி அவர்கள்தான் கடைபோடும்படி என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
ஓர் இடத்தில் சீட்டு போட்டு பணத்தைச் சேர்த்து என்னுடைய முதல் கடையை, 2002 ஆம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் தொடங்கினேன். தரம், சுவை, நிறைவான உணவு. இதுதான் என் கடையோட தாரக மந்திரம். சேலம் என்பது நான் பிறந்த மாவட்டத்தின் பெயர். ஆர் என்பது எனது அப்பா பெயரின் முதல் எழுத்து. அடுத்த ஆர் என்பது, எனது நண்பன் ராமலிங்கம் அப்பா பெயரின் முதல் எழுத்து.
இதை வைத்துதான் எங்களது பிரியாணி கடை பெயரைத் தொடங்கினேன். இப்போது ராமலிங்கம் வேறொரு பெயரில் பிரியாணி கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். நான் தனியாக சென்னை முழுக்க 30 கடைகளை நடத்தி வருகிறேன்.
உங்கள் பிரியாணிக்கு ரசிகராக இருக்கும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் அனுபவத்தைச் சொல்லுங்க?
ஹோட்டல் மட்டுமல்ல, கல்யாண ஆர்டர், நிறுவனங்களில் விழா ஆர்டர் என எல்லாத்தையும் செஞ்சி கொடுப்பேன். ஒரு முறை இயக்குநர் பாரதிராஜா வான்கோழி பிரியாணி கேட்டாங்கன்னு செஞ்சி எடுத்துகிட்டுப் போனேன். அவர் நமது பிரியாணியின் ரசிகர்.
அவருடைய அலுவலகத்துக்குப் போனா, அங்கே கவிஞர் வைரமுத்து பாட்டு எழுதிகிட்டு இருந்தார். பாக்ஸில் போட்டு எடுத்துகிட்டு அவரை தாண்டி உள்ளே போய் கொடுத்துட்டு வந்தேன்.அவருக்கும் ஒரு பாக்ஸ் வைத்தேன். அவர் பாடல் எழுதுவதில் மும்முரமாக இருந்தார். உள்ளே இருந்தவர்கள் பிரியாணியை பிரித்து சாப்பிடவே, வாசம் அவரது மூக்கை துளைக்க ஆரம்பிச்சிடுச்சி. என்னப்பா இது இவ்வளவு மணமா இருக்கே என்று கேட்டார்.
நான் செஞ்ச பிரியாணிதாங்க அது. உங்களுக்கும் வச்சிருக்கேன் பாருங்கன்னு சொன்னேன். சாப்பிட்டு முடிச்சிட்டு சொன்னார். தமிழ்ச்செல்வன் என்ன மாயம் செய்தீர்கள். நீங்கள் செய்த பிரியாணியை சாப்பிட்ட எனது நாக்கு, ஆண் மயில் தோகை விரித்தாடுவது போல உள்ளே நடனமாடிக்கொண்டிருக்கிறது. வெட்கத்தை விட்டு கேட்கிறேன்.
இன்னும் இரண்டு பாக்ஸ் கிடைக்குமா என்றார். நாலாகவே எடுத்துகிட்டு போங்கன்னு கொடுத்து அனுப்பினேன். அவர் நம்ம பிரியாணிக்கு என்றும் ரசிகர்.
உங்கள் வாரிசுகள் பற்றி சொல்லுங்க? எதிர்காலத் திட்டம் என்ன?
ஒரு பையன் ஒரு பொண்ணு. பையனுக்கு 14 வயது இருக்கும்போது இறந்துட்டான்.பொண்ணு மட்டும்தான் தமிழ்ச்செல்வின்னு பேரு. கடை நிர்வாகத்தை அவர்தான் பாத்துக்கறார். 50 ஏக்கர் நிலத்துல கோழி, ஆடு பண்ணை வைக்க இருக்கிறேன்.
எங்களுக்கான உணவுப் பொருட்களை நாங்களே உற்பத்தி பண்ணலாமுன்னு திட்டிமிட்டிருக்கேன். உலகம் முழுக்க சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடைகளை திறக்கணும். ஹோட்டல் தொழில் செய்ய முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு ஒரு இன்ஸ்ட்டிடியூட் தொடங்கணும். சினிமாக்களில் நடித்துக்கொண்டும் இருக்கிறேன். தனியே சேனல் ஒன்றை தொடங்குங்கள் என்றும் ஆலோசனை சொல்கிறார்கள். எல்லாம் நடக்கும் என நம்புகிறேன்.
இந்த தொழிலுக்கு வர விரும்புபவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்வீங்க?
எந்த தொழிலாக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம் வேணும். உணவுத் தொழில்ல நேர்மையும், மனசாட்சியும் இருக்கணும். சாப்பிட வரவன் நம்ம ஆளு. நம்ம வீட்டு ஆளுன்னு நினைச்சு சமைக்கணும். அப்படி நினைச்சி சமைச்சா உணவுல கலப்படம் இருக்காது. உணவு விஷமாக மாறாது. வாடிக்கையாளர்கள்தான் நமது சொத்து என்று நினைக்கணும்.
நம்மோடு உழைக்கும் தொழிலாளிகளுக்கு வேண்டியதை நிறைவாக செய்யணும். தோல்வி வரும்போது துவண்டுவிடாமல், அதில் இருக்கும் பாடத்தைக் கற்றுக்கொண்டு தொழிலில் முன்னேறனும்.
ஹோட்டல் தொழில் குறித்து யார் ஆலோசனைகள் கேட்டாலும் சொல்லித் தர தயாராகவே இருக்கிறேன். நன்றி. வணக்கம்.
சந்திப்பு: மோ.கணேசன்
Leave a Reply