வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள்
சென்னை :-
வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் :
இவ்வாண்டு பெய்யும் தொடர் மழையால் சென்னையில் சூழ்ந்துள்ள நீர் மற்றும் மக்கள் படும் துயரம் என்பது கடந்த வெள்ளப்பெருக்கு போன்று இல்லை. இனி ஒவ்வொரு ஆண்டும் மழை அதிகமாகலாம், அது இயற்கை.
இதே மழை கிராமங்களில் பெய்யும்போது வயல்வெளிகளில் நீர் நிரம்பும். ஒருசில இடங்களில் சாலைகளில் சில மணி நேரம் நீர் வரத்து இருக்கும் சரியாகிவிடும். ஆனால், சென்னையில் அதுபோன்று இப்போது இல்லை.
செயற்கையாக குளங்களை, ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நகரம். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள நகரத்தை செயற்கையாக மட்டுமே தீர்வு காண முடியும். இயற்கையான தீர்வு இல்லை.
என்ன செய்யலாம்?
1. நீர்வளத்துறை நிபுணர்கள், சமூக ஆற்வளர்கள், பொறியாளர்கள் குழுவை உரிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்திக்கொண்டு, ஹெலிகாப்டர், கூகுள் உள்ளிட்ட வசதிகளுடன் சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ந்து நீர் தேங்கும் தனித்துவமான காரணங்கள், ஒவ்வொரு பதுதிக்குமான வழிமுறைகளை ஆராய்ந்து கட்டிடங்களை அப்புறப்படுத்துதல், ராட்சச குழாய் அமைத்தல் , ராட்சச கிணறுகள் அமைத்து தோண்டி நீரை விடுதல் என்று பல்வேறு உத்திகளை ஆராயலாம்.
2. ஒவ்வொரு மழையும் ஏற்படுத்தும் பொருளாதார சேதம் கணக்கிலடங்காதது. எனவே, இதை முதலில் ஆய்வு செய்வதற்கு, திட்டமிடுவதற்கு இந்த மழை நேரத்தை சரியாக அரசு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
3. கூடுவாஞ்சேரியில் தேங்கும் நீருக்கும், செம்மஞ்சேரியில் மற்றும் அசோக் நகரில் தேங்கும் நீருக்கும் தீர்வு வெவ்வேறாக இருக்கும். அவைகளை அந்த பகுதி அனுபவம் உள்ளவர்களை சந்தித்து தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்து தீர்வுகளை மழைக்காலத்திலேயே ஆவணப்படுத்திவிடுவது முதல் தேவை.
4. போதிய நிதி ஒதுக்கி அடுத்த ஓரிரு ஆண்டுக்குள் சென்னையில் இந்த ஆண்டு பெய்யும் மழை அளவிற்கு எதிர்காலத்தில் பெய்தாலும் பெரும் சேதம், நீர் தேங்குதல் இல்லாத சூழலை ஏற்படுத்த சரியாக திட்டமிட்டால் இதை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியம்.
5. அரசின் எந்தவித சாலை உள்ளிட்ட கட்டுமான பணிகளையும் அனுபவமில்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பொறியியல், கட்டுமானம் பின்புலமுள்ள , வடிகால் அமைக்கும் திறனுடைய, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அறிந்த L & T போன்ற பெரும் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்குதல் அல்லது தமிழ்நாடு பொதுப்பணித்துறையே இன்றைய சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க ஏதுவாக தயார்படுத்திக்கொள்ளுதல் அவசியம்.
120 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் போன்ற நகரத்தில் மேலே ஒரு நகரமும் கீழே போக்குவரத்தும், நீர்வழிச் சாலைகளும், நியூயார்க் – நியூஜெர்சி போக்குவரத்துக்கு ஹட்சன் ஆற்றில் நீருக்கு கீழே ஓடும் தொடர்வண்டியும், மேலே படகுப் போக்குவரத்தும் என்று திட்டமிட்ட தலைவர்களின் தொலைநோக்கு சிந்தனையை அதில் பயணிக்கும்போதெல்லாம் எண்ணி வியந்திருக்கிறேன்.
புதிதாக உருவான OMR சாலையில் world Trade Center க்கு எதிரில் வடிகால் இல்லாமல் சாதாரண மழைக்கும் சாலையில் குளம்போல் தேங்கும் நீரை என்ன செய்வது என்று தெரியாமல், சாலையை ஒருவழி சாலையாக்கி திண்டாடும் நிலையை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
யார் பொறுப்பு ?
நமக்கு இன்றைய தேவை, தொலைநோக்கு சிந்தனை கொண்ட அறிவியலை உள்ளடக்கிய தொழில்நுட்பம் அறிந்த படித்தவர்கள் இணைந்து தொலைநோக்கு திட்டமிடுதல். இன்றைய உடனடி சிக்கல்களுக்கான தீர்வுகள் மட்டுமல்ல.
சென்னையில், தான் உழைத்து சேர்த்த பொருளாதாரத்தில் வீடு கட்ட ஆசைப்படுபவர்கள், ஆபத்துக்கு உதவ உங்கள் கிராமங்களில் ஒரு வீட்டை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
– ச.பார்த்தசாரதி
Leave a Reply