வாசிப்பை நேசிப்போம், புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள்
வாசிப்பை நேசிப்போம்
இன்றைய நவீன யுகத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது!
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் எவை என்று கேட்டால் புத்தகங்களே என்று அடித்துச் சொல்லலாம்.
‘போதும் என்று நொந்துபோய் புதுவாழ்க்கையைத் தேடுகிறீர்களா, ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள்’ என்கிறார் இங்கர்சால்.
அம்பேத்கர் அவர்கள் லண்டன் சென்றிருந்த போது, ‘எங்கே தங்க விரும்புகிறீர்கள்’ என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது… ‘எது நூலகத்துக்கு அருகில் உள்ளது’ எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.
தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்றவர் – மகாத்மா காந்தி அவர்கள்.
‘உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்கான பயிற்சி புத்தக வாசிப்பு’ என்கிறார் சிக்மண்ட் பிராய்டு.
துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.
ஏன் வாசிக்க வேண்டும்?
புத்தகங்கள் என்பவை வெறும் எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பு அல்ல. அது, தலைமுறைகளின் வரலாற்றை பதிவு செய்யும் பொக்கிஷங்கள். வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்காலத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல உதவும் கருவிகள். புத்தகங்கள் மனிதனை உருவாகின்றன.
புத்தகங்கள் மனிதர்களை உறக்கத்தில் இருந்து விழிப்படையச் செய்கின்றன. மாபெரும் புரட்சிகளுக்கு புத்தகங்கள் தான் காரணமாக இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது போரைப் பார்வையிடச் சென்ற இந்தாலிய அதிபர் முசோலினியின் கையில் குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் மயக்க மருந்து இல்லை.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் முசோலினி, ”நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள். என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. நான் அதை வாசிக்கிறேன். நீங்கள் சிகிச்சையை துவக்குங்கள்; வாசிக்கும் போது எனக்கு வலி தெரியாது,” என்றாராம்.
தற்காலத்தில், இணையத்தின் அபார வளர்ச்சியால் புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், தன்னம்பிக்கை வளரும் என்பதே அறிஞர்களின் கருத்து. இன்று பெரும்பாலானோர் சரியான தூக்கமின்மையால், மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இவற்றிற்கு அரிய மருந்து புத்தகங்கள் தான் என்றால் மிகையில்லை.மனதை ஒருமுகப்படுத்த புத்தக வாசிப்பை விட அருமருந்து வேறொன்றுமில்லை எனலாம். புத்தக வாசிப்பு, தனிமை துயர் தீர்க்கும் ஓர் மாமருந்து. புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. தொலைக்காட்சி சீரியல்கள், செல்போன் போன்றவற்றைப் பார்த்து உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்ளாமல், நம் இளைய தலைமுறை சீரிய சிந்தனையும், தெளிந்த நல் அறிவும் கொண்டதாக வளர, நம்மால் இயன்ற அளவு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி, அறிவார்ந்த புத்தகங்களை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்ய வேண்டும்.
நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது நல்ல புத்தகங்களைத் தான். புத்தகங்கள்தான் சான்றோர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் கருவியாக உள்ளது. மனிதர்களை நல்வழிப்படுத்த புத்தகங்கள் சிறந்த வழிகாட்டியாகவும், நண்பனாகவும் திகழ்கிறது. அதனால் தான் ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். ‘எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே தான் உள்ளன’, என்றார் வால்ட் டிசினி.
இன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வழி கற்றல் என்ற நிலையில் வீட்டுக்கொரு நூலகம் என்பதையோ, புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பதையோ, இன்றைய தலைமுறையினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
மேலும், இன்றைய வாழ்க்கை முறையில் நமது குழந்தைகளுக்கு புத்தகங்கள் என்றால் அவை பாடப்புத்தகங்கள் மட்டும் தான் என்ற சூழல் உள்ளது. எனவே நம் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பின் மகத்துவத்தை எடுத்துரைப்போம். புத்தகம் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத கூடு எனலாம். ஆகவே, வீடு தோறும் ஒரு சிறிய நூலகத்தை அமைக்க குழந்தைகளுக்கு நாம் வழிகாட்டலாம்.
அது முடியாதவர்கள் அருகில் உள்ள நூலகங்களுக்கு அவர்களைச் அழைத்துச் சென்று புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யலாம். இப்பூமியில் மனிதர்களாய் பிறந்த நாம் எப்படியும் பொழுதைக் கழிக்கலாம். நாளைய வரலாறு நம் வரலாற்றைச் சொல்ல வேண்டுமானால், இன்றைய பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். அந்த பயனுள்ள வழியை வகுப்பதே வாசிப்புதான். இப்பூமியில் வசிப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
ஆனால் வாசிப்பவர்கள் பெயர் காலம் காலமாக நிற்கும். எனவே வாசிப்பை நேசிப்போம். சுவாசிப்போம். மற்றவர்களுக்கு கொடுக்கும் பரிசுகளில் மிகச் சிறந்த பரிசு புத்தகங்கள் தான். சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களைத் தன்னகத்தே தாங்கியுள்ள எல்லையற்ற சமுத்திரங்கள். ஆகவே, புத்தகங்களைக் கொண்டாடுவோம்.
– முனைவர். சுடர்க்கொடி கண்ணன்
Leave a Reply