பிளாஸ்டிக் இல்லா உலகை உருவாக்குவோம், பள்ளி மாணவர்கள் வீதிகளில் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு

Share Button

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம், பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய நடுநிலைப் பள்ளி மாணவர்கள். தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு, நாடகங்கள் மூலம் வீதிகளில் சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

வில்லுப்பாட்டு வழியாக விழிப்புணர்வு 

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் வில்லுப்பாட்டு வழியாக விளக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது.

மேலும், கழிவுநீர் செல்லும் பாதைகளிலும் இதன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் மழைநீர், பூமியில் கசிந்து நிலத்தடியினை அடையாமல் போவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் பாதிக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும் போது, கொசு உற்பத்தியாகி, அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. மேலும், மழைநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படவும் காரணமாகிவிடுகிறது. மண் வளமும் பாதிக்கப்படுகிறது. இதனை வில்லுப்பாட்டு வழியாக மக்களிடம் தெளிவாக எடுத்து விளக்கப்பட்டது.

வீதி நாடகம் வழியாக பொது மக்களிடம் விளக்கப்பட்ட விஷயங்கள் : 

தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது, அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது. உணவு பொருட்களுடன் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலை ஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகிறது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம். இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட் கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது. எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது.

மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ் டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு தடை செய்துள்ளது  என்கிற தகவல்கள் வீதி நாடகம் வழியாக விளக்கி சொல்லப்பட்டது.

பாடல்கள் வழியாக விளக்கப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்புவிழிப்புணர்வு 

தூக்கு சட்டி தூக்கினால் கேவலமா ?

ஒரு காலத்தில் கடைகளுக்கு செல்வோர் கையில் துணிப்பை, சில்வர் பாத்திரங்கள் இருக்கும். பலசரக்கு பொருட்களை காகிதத்தில் கட்டி கடைக்காரர்கள் கொடுப்பர். பாலிதீன் பை பயன்பாடு அரிதிலும் அரிது. மழைக்கு தலை நனையாமல் காப்பதற்காக ‘மழைக் காகிதம்’ என்ற அளவில்தான் அதை பயன்படுத்தினோம். ஆனால் இன்றோ… பிறப்பு முதல் இறப்பு வரை பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் ஆக்கிரமித்து விட்டன. கடைகளுக்கு வெறுங்கையுடன் சென்றால் போதும் ஏழெட்டு பாலிதீன் பைகளில் வீட்டுக்கு தேவையான பொருட்களை அள்ளி வந்து விடலாம்.

இது உணர்த்துவது ‘யாருக்கும் பொறுப்பு இல்லை’ என்பதைத்தான். பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களால் தற்போதே பல கொடுமைகளை நாம் அனுபவிக்கிறோம். ‘அடுத்த தலைமுறை என்ன செய்யும்?’ என்ற பொறுப்புணர்வு புதைந்து போய்விட்டது.கடைக்கு செல்லும் போது துணிப்பை, ‘துாக்குச் சட்டி’ எடுத்து செல்வோரை கேலி பேசும் ‘கலி காலம்’ இது. ‘பாலிதீன், பிளாஸ்டிக் ஆக்கிரமிப்புக்கு எப்படி  விடிவுகாலம் வரவைக்கலாம்  என்பதை ஆடல், பாடல் வழியாக வீதிகளில் சென்று மக்களிடம் எடுத்து சொல்லப்பட்டது. 

பிளாஸ்டிக் ஷீட், டைனிங் டேபிளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் பிளேட், கப், டம்ளர், தெர்மோகூல் கப், ஸ்டிரா, கேரி பேக், கொடி, பாலிபுரோபிலின் பேக் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்ப.ட்டுள்ளன . மக்களுக்கு இதுகுறித்து பாடல்கள் வழியாக வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத துணிப்பைகள், மூங்கில் கூடைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு நாடகங்கள் வாயிலாக விளக்கப்பட்டது. இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் கூறினார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *