என்னதான் சொல்லுங்க இந்த ‘‘புதுவரவு’‘ மாதிரி வராதுங்க!

Share Button

என்னதான் சொல்லுங்க இந்த ‘‘புதுவரவு’‘ மாதிரி வராதுங்க!

என் சமையல் அறையில் திடீரென ஒரு புதுவரவு. இந்த புது வரவை நினைக்கும் பொழுது என் மனதில் ஒலிக்கும் பாடல் “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே” என்பதுதான். என்னுடைய கணவர் தன் பிறந்தநாள் பரிசாக எனக்கு அளித்த இந்த புதுவரவின் விலை என்னவோ
குறைவுதான், ஆனால் அது என் நீண்ட நாள் கனவும் கூட. கனவுக்குதான் விலையெல்லாம் தெரியாதே? மனதிற்கு கனவுகாண மட்டும்தானே தெரியும். இருப்பினும் அந்தக் கனவு நனவாகி கண் முன்னே மலர்ந்து புதுவரவாய் நிற்கிறது.

திடீரென முளைத்துள்ள இந்த புதுவரவு எப்படியெல்லாம் என்னை  மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது என்று பார்ப்பதற்கு முன்பு, அந்த புதுவரவுக்குச் சொந்தமான ஒரு முன்கதையைச் சொல்லிவிடுகிறேன். தொழிலதிபரான என் கணவருக்கு  உதவி செய்யும் பொடுட்டு, கணிதப் பேராசிரியையான நான், என் பணியை சுமார் 3 வருடங்களுக்கு முன்பு கைவிடவேண்டிய  ஒரு சூழ்நிலை உண்டானது. நான் என்
பேராசிரியர் பணியில் இருந்தபோது எனக்கு எப்போதுமே கணிதம் பற்றிய சிந்தனை தான் ஓடிக்கொண்டிருந்தது.

தினமும் வகைப்படுத்துதல், தொகைப்படுத்துதல் மற்றும் Real Numbers, Random Process, Engineering Mathematics என்று கணிதமே வாழ்க்கையாக போய்க்கொண்ருந்தது. அதனாலேயே என்னவோ, எப்போதும் நான் ஆசைப்பட்ட ‘அந்த’ ஒன்றைப் பற்றி  நினைக்க நேரம் கூடி வாய்க்கவே இல்லை. எனினும் சில சமயங்களில் ‘அதை’ எப்படியேனும் மீண்டும் வாங்க வேண்டும்  என்று மனதில் தோன்றிக்கொண்டே
இருக்கும். பிறகென்ன? நமக்கிருக்கும் வேலை பளு எதற்கும் இடம் கொடுக்கவில்லை. அதை நொண்டிசாக்காகவும் சொல்லிக்கொள்ள மனமில்லை.

வீட்டில் அதிகாலை வேளையில் சுப்ரபாதம் , கந்தர்சஸ்டி, செய்திகள் என்றுதொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு தொடங்கும் நாள், மாலையில் மகளின் வீட்டுப்பாடம், கற்பித்தல், குடும்பத்தினருக்கு இரவு உணவு தயாரிப்பது – இப்படியாக சுழற்சிமுறையில் போய்க்கொண்டு இருந்தது வாழ்க்கைச் சக்கரம்.

இந்த நிலையில்தான் கடந்த 3 வருடங்களாக அவருடைய தொழிலுக்கு உதவி புரிவது ,கிடைக்கும் நேரத்தில் நிறைய சில புத்தகங்களை  வாசிப்பது என்றிருந்தேன். அதிலும்  பி.என்.பரசுராமன் எழுதிய  “சும்மாவா  சொன்னாங்க பெரியவங்க”, சசிகலா பாலசுப்ரமணியம் எழுதிய  “எங்க ஊர் சொன்னது சிறு சிறு கதைகள்” போன்றவற்றில் அலாதி இன்பம் கண்டேன். அவ்வப்போது கட்டுரை  எழுதுவதில் பிரியம் கொண்டேன்.

இத்தனை பரபரப்பான உலகில் 15 வருடங்களாக ஓடிக்கொண்டு இருந்ததால் மறந்து போன எந்த சின்னஞ்சிறு சந்தோஷங்கள் பற்றி சிந்திப்பதற்கும்  செயல் படுத்துவதற்கும் கொஞ்சம் தாமதம்தான் ஆனது.  சரி. விஷயத்துக்கு வருவோம். சிறு வயதிலிருந்தே இசை மற்றும் பரதக்கலை மீதான என் தீரா காதல்தான், நான் பள்ளிமுடிந்து வீட்டுக்கு வந்தவுடனேயே ரேடியோவிடம் என்னை அழைத்துச் சென்றது. சாயுங்காம் 5 மணி முதல் 5.30 வரை ஒலிக்கும் அந்த 80-களின் மெல்லிய பாடல்கள் தொலைக்காட்சி அதிகம் அறியப்படாத அந்த காலத்திலும் எங்களுக்கு அமிர்தமாய் நெஞ்சில் இனித்தன.

“காற்றினிலே வரும் கீதம்”, “ சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை”, “கண்ணன்  ஒரு கைக்குழந்தை, கண்கள்  சொல்லும்  பூங்கவிதை” என்று கேட்கத் தொடங்கினால் கரைந்துதான் போகவேண்டும் அந்த ராகங்களின் மீட்டலில். அதை அள்ளித் தந்த அந்த ரேடியோவை அணைத்துக்கொண்டு உறங்கிய பொழுதுகளை மீண்டும் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில்தான் இத்தனை வருடம் கழித்து என் சமையலறைக்குள் புகுந்துள்ளது அந்த புதுவரவு. அப்படி என்னதான் அந்த புது வரவு என்று புரிந்திருக்கும் அல்லவா? ஆம், அது என் அன்புக்கணவரின் ஆசைப்பரிசாக கிடைத்த வானொலி ரேடியோ தாங்க! 

குழந்தையின் கையில் புதிதாக ஒரு பொம்மையை பரிசாய்க் கொடுத்தால், அது எப்படி எங்கு சென்றாலும் கையில் பிடித்துக்கொண்டே போகுமோ, தூங்கும் பொழுதுகூட அருகில் வைத்து அணைத்துக்கொண்டே உறங்குமோ, அப்படித்தான் நானும் அளவுகடந்த மகிழ்ச்சியில் மிதக்கிறேன்.

ஆண்ராய்டு போன்களில் பாடல் கேட்பதற்காக, அத்தனை அப்ளிகேஷன்கள் அணிவகுத்து நிற்கும் இந்த காலத்தில்போய், ஒரு பாடல் கேட்பதற்கு போய் காற்றின் அலைவரிசையில் கடந்து உருளும் ஒரு சேனலை கஷ்டப்பட்டு டியூன் செய்து போராடிக்கொண்டிருக்க வேண்டுமா? அவ்வளவு அதர பழசான மனநிலையா என்றுகூட நினைக்கலாம். இது அதுவல்ல. என்ன சொல்லுங்க, வானொலி ரேடியோ மாதிரி வாரதுங்க. நாள் முழுவதும் இனிமையான பாடல்கள் இடையே சுட சுட செய்திகள் , ஜோக்குகள், கவிதைகள், கருத்துகள் கேட்பது, கலாய்ப்பது, இரவின் மடியில் லயிக்க வைக்கும் நிகழ்ச்சிகளும் பாடல்களும் என வானொலியில் கிடைக்கும் நிதானமான பரவசத்தை அனுபவிக்க கொடுப்பனை வெண்டும் என்றுதான் சொல்வேன்.

ஒன்றை காத்திருந்து அனுபவிக்கும்போது, அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதன் மதிப்பை உணர்த்தும். அப்படித்தான் இந்த வானொலியில் பாடல் கேட்பதெல்லாம். ஆம், இனிமேல் அதிகாலை 5 முதல் 5.30 மணிவரை இனிய  இசையை  ஒலிக்கவிட்டபடி என்  சமையல் அறையில், மெல்லிய ஆடல் அசைவுடன், நான் சமைக்கும் என் சமையலில் ஆறு சுவை இருக்கப்போவதில்லை.

இசைக் கதம்பங்களின் சுவையையும் சேர்ந்து எழுசுவையாக மாற்றப்போகிறது இந்த புதுவரவு!

– லலிதாமணி கஜேந்திரன்,
பேராசிரியர்.
கோவை.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………

இதைப்படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் இதுபோன்ற சுவாரஸ்யமான கருத்துக்கள் புதுவரவாக தோன்றினால் எங்களுக்கு எழுதி puthuvaravunews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்களின் படைப்புகள் புதுவரவில் வெளியாகும்.

– புதுவரவு (ஆசிரியர் குழு)

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *