எட்டிவிடும் தூரம்தான் : ஊக்கமது கைவிடேல் : Episode-2
ல்டேவிகை துமகக்ஊ. திருப்பிப் படிக்கவைக்கும் இந்தமுறை எதற்கு? புரிந்துகொள்ள முயற்சி செய்வதுதான் ஊக்கம் என்பதனால். அப்படியெனில் ஊக்கத்தின் அவசியம் யாது? ஏன் தேவை? ஏனெனில், இவ்வுலகம் பல்வேறுபட்ட குணங்களால் ஆனது. குணங்கள் என்பது பொருள்களின் தன்மையைக் குறிக்கும் விளக்கம். அப்பொருள்கள் நிலையான மற்றும் நிலையற்ற என்ற இருவகையில் அடங்கும். வள்ளுவரை வேதநாயகனாகக் கொண்டதினால், அவரின்வாக்குப்படி…
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்-குறள் 592
எனும் குறளில், ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை எனக் கூற இயலாது என்கிறார். நாம் அனைவரும் எப்போதும் ஒருவித அக்கறையுடேனே நமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்த அக்கறையானது யார்மேல், எதன்மேல் என்பது பொதுவாக மாறுபடுமேயாயின், உண்மையாதெனில், நாம் நம்மில்தான் அக்கறை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மேல் அக்கறை என்பது உண்மையாயின், நம் எழுச்சியை, நம் வெற்றியை, நம் தன்னம்பிக்கையை நம்மைத் தவிர வேறு யார் திறக்கமுடியும்? சற்று திரும்பிப் பார்க்கலாம்… ஒரு மலரும் நினைவை… ஒருகதையை. ராபர்ட்ப்ருஸ் என்கிற மன்னன் போரில் பலமுறை தோற்று தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பகைவருக்கு அஞ்சி ஓடி ஒளிந்துகொண்டிருந்தபோது, சிலந்தியினால் கற்றபாடம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒருநாள் சிலந்தியின் செயல் அந்த அரசனின் கவனத்தை ஈர்த்தது.
அந்தச் சிலந்தி, தனக்கான வலையைப் பின்ன கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தது. பலமுறை அந்தவலை அறுந்தது, ஒருமுறை இந்தச் சிலந்தி கூட கீழே விழுந்துவிட்டது. இந்த நிகழ்வு பலமுறை நடந்தாலும், இறுதியில் அந்தச் சிலந்தி தனக்கான வலையைப் பின்னி முடித்துவிட்டது. வலைபின்னும் சிலந்தி சொல்லித் தந்த பாடம் இவன் உள்ளத்தில் அடைந்து கிடந்த தன்னம்பிக்கையைத் தட்டித் திறந்துவிட்டது. படைதிரட்டி, தான் தோற்ற மன்னனிடம் மீண்டும் போர் செய்து வெற்றிபெற்றான்.
படித்து மறந்தது இந்தக் கதையை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும்தான். ஏன் தொலைத்தோம்? எவ்வாறு தொலைக்கப்பட்டது? இதைப் புரிந்துகொள்ள, நமக்கான எதிரி நமக்குள்தான் என்பதை உணர, ஊக்கம்தேவை, இல்லையென்றால் நாம் தற்போது வகுத்துக்கொண்ட எல்லைக்குள்ளேதான் செயல்படுவோம். இந்தத் தன்னம்பிக்கை என்பது, வாழ்க்கை என்னும் நேர்செங்குத்து கோட்டில் மேலேறுவதெற்கு உதவும் ஒரு ஏணி. எங்கு செல்ல இந்த ஏணி மேல் ஏறவேண்டும் எனும் கேள்விக்கு, இலக்கும், திட்டமிடுதலும் மிகவும் அவசியம்என்பதே பதில்.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின் – குறள் 542
விளக்கம் :
தான் அடையக் கருதியதை இடைவிடாமல் ஊக்கத்துடன் மறதியின்றி நினைக்ககூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும். பதில் ஆராய்வும் மற்றும் இன்னும் சில தவறவிட்ட தன்னம்பிக்கைக் கதைகளுடனும்…
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
(Founder Of PuraAbhiNavam Trust)
Leave a Reply