கேள்வி – பதில் : என் குழந்தை என் எதிர்பார்ப்பின் படி வளர ஒரு பெற்றோராக நான் என்ன செய்ய வேண்டும்?
கேள்வி : என் குழந்தை என் எதிர்பார்ப்பின் படி வளர ஒரு பெற்றோராக நான் என்ன செய்ய வேண்டும்?
- கே. பி. சித்ரா சாமந்தி, பெற்றோர்
கேள்வி : உங்கள் எதிர்பார்ப்பின்படி உங்கள் குழந்தை வளரவேண்டும் என ஏன் எதிர்பார்கிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் அப்படித்தான் உங்கள் பெற்றோரிடம் வளர்ந்தீர்கள் என்றால் இதுபோன்ற ஓர் மனநிலை வருவது சகஜம்தான். உங்கள் குழந்தை வளர்வதர்க்குக் அச்சாரம் நீங்கள்தான் என்றும். அவர்கள் எதிர்காலமும் நீங்கள்தான் எனும் கற்பனை மனநிலையை முதலில் களையுங்கள். பெற்றோர்தான் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனும் கண்ணோட்டத்தையும் துடைத்தெறியுங்கள். உண்மையில்குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருகிறது.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
ஒரு தாய்க்கு பாலூட்டக் கற்றுக்கொடுப்பதிலிருந்து தந்தைக்கு வாழ்க்கையின் வேகத்தைப்
புரியவைப்பதிலிருந்து பெரும்பாலும் அனைத்தும் குழந்தைகள் மூலமாகவே பெற்றோர்க்குக்
கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். ஆழமாகப் பார்த்தால் இதில் உள்ள உண்மை புரியும். மேலும் நீங்கள் ஒரு பழக்கத்தை உங்கள் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பதாக இருந்தால், நீங்கள் முதலில் அதனைப் பழகியிருக்க வேண்டும். பொய் சொல்லாதே என்று உங்கள் குழந்தைக்குச் சொல்லப்படும் முன்பு நீங்கள் எந்நேரத்திலும் அதனைச் செய்யாதிருக்க முடியுமா என்று ஆழ்ந்துபார்த்தல் வேண்டும். நீங்கள் கற்றுக்கொடுப்பதற்கு மாறாக நீங்களே நடக்கும்பட்சத்தில் குழந்தை குழம்புகிறது.
இவ்வகையானக் கற்றுகொடுத்தல் சாப்பிடும் விஷயம், உடலைக் கெடுத்துக்கொள்ளும் போதை விஷயம், குடும்பப் பழக்கவழக்கங்கள், சமூக அணுகுமுறைகள் மற்றும் அனைத்திலும் ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். முரண்பாட்டை ஒழுக்க நெறிகளோடு கற்றுக்கொடுக்கும் ஒரு குழப்பமான மனநிலையினை மட்டுமே அக்கறை எனும் பேரில் நீங்கள் உங்கள் குழந்தைக்குக்
கற்றுக்கொடுக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு குழந்தைக்குப் பெற்றோராக நீங்கள் இருக்கும் வயதில் நிச்சயமாக நிறைய அனுபவங்கள் உங்களைச் செதுக்கியிருக்கும். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து சொல்வதற்கில்லை. ஆனால் உங்கள் அனுபவம் உங்கள் குழந்தையின் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதிக்குப் பயன்படுமே தவிர அவர்களின் மனம் சார்ந்த வாழ்க்கை அனுபவத்திற்கு உங்களின் அனுபவம் மற்றும் அதன் மூலம் நீங்கள் உருவாக்கியிருக்கும் எதிர்பார்ப்பு ஆகியவைகள் பெரிதளவில் ஒத்துபோகாது.
இது தலைமுறை இடைவெளி அல்ல…மாறாக ஒவ்வொரு தனி மனித மனத்துக்குண்டான தனித்தன்மை. இதனைப் புரிந்துகொள்ளும் பட்சத்தில் உங்கள் குழந்தைகளின் தனித்துவம் மட்டுமல்ல சக மனிதனின் தனித்துவத்திலும்கூட நீங்களும் உங்கள் எதிர்பார்ப்பும் தலையிடுவதைத் தவிர்ப்பீர்கள்.
கேள்வி – பதில் தொடரும்…
………………………………………………..
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
திருமிகு.ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply