தூத்துக்குடியில் குளத்தை சுற்றி நடைபயிற்சி தளத்துடன் புதிய பூங்கா: மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி:-

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர்நகர் பகுதியிலுள்ள ஸ்டெம் பூங்காவின் பின்புறம் நடைபெற்று வரும் குளத்துடன் கூடிய நடைபயிற்சி பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மழை நீர் அதிகம் தேங்கும் பள்ளமான இடங்களை ஆய்வு செய்து, அந்த இடத்தில் குளம், குட்டைகள் அமைத்து நீரினை சேகரிக்கவும், அதனை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வாக்கிங் ட்ராக் மற்றும் எழில் கொஞ்சும் பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு இடம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்க கூடிய பகுதியாகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வந்தது. அந்த இடத்தில் மழைநீரை தேக்கி வைத்து குளம் ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த ஆண்டு 21.7.2025 அன்று ஆணை வழங்கப்பட்டு 306 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பணிகளை 12 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைவாக உடனடியாக முடிக்க வேண்டும். மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். அதிக மின் விளக்குகள் பொருத்த வேண்டும். உடனடியாக கேட் அமைக்கவும், பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.











