ரயிலுக்கு நேரமாச்சு…
ஆதவன் மேற்கில் சிவப்பு நிற கம்பளத்தை இருளிற்குள் சுருட்டிக் கொண்டிருந்தான்..
டிராபிக்கில் சிக்கி.. மீண்டு..
ஒருவழியாக.. செகந்திராபாத் ரயில் நிலையத்தின் கார் பார்க்கிங்கில் வேகமாக நுழைந்து நின்றது மதனின் கார்..
ஏங்க மெதுவா.. நிறுத்துங்க என்றாள் வீணா.. பெரியப்பா.. பின்சீட்டில்
என்ன மாப்ள.. ஒன்னுமில்லையே என்றார்..சற்றே பதட்டத்துடன்..
இறங்கும் பொழுது தான் கவனித்தாள்..
இடப்புறம் ஓரத்தில்..தரையோடு.. தரையாக.. அழுக்காய்.. மெலிந்த தேகமுடைய ஒரு பெண் குப்புற படுத்திருந்தாள்..
என்னங்க நல்ல வேளை.. அங்க நிறுத்தல.. பாருங்க எப்படி கிடக்கா என்றாள் வீணா.. ரயிலுக்கு நேரமாகி விட்டதால் மடமடவென.. லக்கேஜ்கள
எடுத்துண்டு உள்ளே வந்தனர்..
நல்ல படியாக வழி அனுப்பிட்டு
திரும்பி வந்து காரில் ஏற முற்படும் பொழுது தான் கவனித்தாள்..
அந்தப் பெண் கிடந்த இடத்தில்.. ஒரு பெரிய கார் நின்றுக் கொண்டிருந்தது..
அருகில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்..
ஐய்யய்யோ.. ஒருத்தி கீழே கிடந்தாளே.. இருக்காளாயென பதட்டத்துடன்
இருட்டான இடத்தில் கீழே குனிந்து பார்த்ததில்.. குப்பென வியர்த்து விட்டது..
எந்தச் சலனமும் இல்லாமல் அப்படியே கிடந்தாள்.. அவள் கால்கள் மட்டுமே தெரிந்தது..
பேசிக் கொண்டிருப்பவர்களிடம்
இது உங்கள் காரா.. கீழ ஒருத்தி கிடக்கா பார்க்கலயா என்றாள் வீணா..
அடடா.. கவனிக்கலயே மா என்றவாரே..
கீழே குனிந்து பார்த்துவிட்டு மெதுவாக
காரை பின்னால் எடுத்தார்..
நல்ல வேளை தலையில் சக்கரம் படவில்லை.. இரு சக்கரங்களுக்கிடையில் இருந்தாள்..
நேரமாச்சு.. டிராபிக் அதிகமாயிடும்.. வான்னு.. மதன் அவசரப்படுத்த..
வேறு வழியில்லாமல் காரில் ஏறினாள்..
கார் பார்க்கிங்கில் பணம் வாங்குபவனிடம்.. ஏங்க அங்க ஒருத்தி
நினைவில்லாம படுத்திருக்கிறாள்..வெளிச்சம் குறைவாயிருக்கு.. வண்டிகள் வந்து நிக்குது ..என்னன்னு கொஞ்சம் பாருங்க என்றாள் வீணா..
தினம் இதே பொழப்பா போச்சு..
இங்க வந்து படுத்து என் உயிரை வாங்குதுங்க என்றான் படுஅலட்சியமாக..
வண்டி அதற்குள் டிராபிக்கில் மாட்டிக் கொண்டிருந்தது..
வீணா மனசெல்லாம் அந்தப் பெண்ணை
நினைத்தே இருந்தது.. யாரிவள்.. ஏன் இங்கு கிடக்கிறாள்..
அவள் உயிருடன் தான் இருக்கிறாளா..
பார்க்கிங் ஊழியர் சென்று பார்ப்பாரா..
எத்தனை கேட்பாரற்ற அநாதைகள்
வீதிகளில்.. திரும்பி பார்க்க நேரமில்லாத மனிதக் கூட்டத்தில் அவளும் கரைந்திருந்தாள்..
கார் நிறுத்த பணம் வாங்குபவர்கள்..
இரயில் நிலையங்கள்.. பேருந்து நிலையங்களில்.. இருளில் விழுந்து கிடப்பவர்களை
கவனிக்க வேண்டாமா..?!
மனம் கனத்தது..
……………………………………
சாரதா க. சந்தோஷ்
ஐதராபாத்
#ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் அங்கீகாரமாக நினைக்கிறேன்..
என்னுடைய #ரயிலுக்கு நேரமாச்சு
கதையை படித்த புதுவரவு ஆசிரியர்
புதுவரவு ரமேஷ்.. தாமாகவே முன்வந்து
தமது இணைய தளத்தில் பதிவிட்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..
நன்றி திரு. ரமேஷ் அவர்களே..