பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-1

Share Button

மயிலிறகு
(1)

“ஓ …..ம்ம்ம் . .ம்ம்ம்”

கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டாள் மீரா.

அதிகாலைச் சுத்தமான காற்று நுரையீரல் எங்கும் பரவியது. உள்ளே சென்ற காற்றை நிறுத்தி, உடல் முழுவதும் பரவச் செய்தாள். லேசான மழை ஜில்லிப்புடன் காற்று உடலுக்குள் இருந்த சூட்டை குளிரச் செய்தது.

அதிகாலை நேரம் உற்சாகமாய் இருந்தது. சுற்றிலும் பரவி இருந்த லேசான சாம்பல் நிறத்தை தெரு விளக்குகளின் வெளிச்சம் விரட்டி அடித்தது. பனியின் ஜில்லிப்பு, உடலின் வெப்பத்தை குளிரச் செய்தது.

உடல் சூட்டை காற்று நீக்கி விடும். மனதுக்குள் கொந்தளிக்கும் எரிமலையின் கொதிப்பை யார்
அடக்க முடியும்? மீராவின் உள்ளே கேள்வி எழுந்தது. தலையை குலுக்கிக் கொண்டாள்.

புத்தியை திசை திருப்பு. வேண்டாத, கடந்து போன விஷயங்களை நினைப்பதில் பயன் இல்லை.
சுற்றிலும் சுயநல மனிதர்கள். புரிந்து கொள்ளாதவர்களோடு போரிடுவதில் எந்த லாபமும் இல்லை.

அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது. தன்னுடைய வார்த்தைகள் எந்த அளவுக்கு காயப் படுத்தும் என்று தெரிந்தும் அமிலத்தை வீசுபவர்கள் முன்பு அமைதியாக இருப்பதே மிகச் சரியான போர்முறை.

மிகச் சிறந்த பதில் மௌனம் என்று அவளுக்குக் காலம் போதித்திருந்தது. இந்த அமைதியும்
சுகம்தான். கண்மூடி மனதை அடக்க, அடங்கக் காத்திருந்தாள். அது குதிரையாய் எட்டிப் பாய்ந்தது.

அடங்கி ஒரு நிமிஷம் நின்றது. மீண்டும் துள்ளிக் குதித்தது. அதை அப்படியே விட்டுக் கண் மூடி அமர்ந்திருந்தாள்.

தெரு இன்னும் விழிக்கவில்லை. லேசான தெரு விளக்கின் ஒளியில் சாம்பல் நிறத்தில் சோம்பல் காத்தது.

மழைக் காற்று உடலைத் தழுவிச் செல்ல, எதிர் வீட்டில் மாடி லைட் எரிந்தது. மீரா தான் உள்ளே
செல்ல வேண்டிய நேரம் என்று உணர்ந்தாள்.

எப்போதும் காலையில் அவள் முகத்தைப் பார்ப்பதை அனைவரும் தவிர்ப்பார்கள். அவர்களின் முகச் சுளிப்பைக் கண்டு தன் மனமும் சுருங்குவதை மீராவும் விரும்ப மாட்டாள். எனவே எழுந்து உள்ளே வந்தாள்.

“எம்மா, எதிர் வீட்டில் எழுந்துட்டாங்களா?”- தாத்தா.

“அவர் இப்போ எழுந்தாத்தான் தோட்டத்துக்குப் போய், பால் கறந்து எடுத்துட்டு வர முடியும்”

மீரா பதில் சொல்லவில்லை. தினமும் தாத்தா சொல்வதுதான்.

“நான் குளிச்சுட்டு கோவிலுக்குப் போய்ட்டு வந்துடறேன் தாத்தா.”
“எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளியப் போறே?”
“பணம் சேர்த்து, முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யற வரை”
“பணம் எப்படிச் சேரும்?”
“வேலைக்குப் போய்”
“யார் வேலை தரேன்றாங்க.”

சரியான கேள்வி. ஆனாலும் இன்னும் மீரா மனிதர்களை நம்பினாள். சூழ்நிலைதான் எல்லோரையும் சுயநலம் உள்ளவர்களாக மாற்றுகிறது.

ஒரு கட்டத்தில் அவர்களையும் அறியாமல் மனிதத் தன்மை வெளிப்பட்டு விடும். நம்பிக்கைதான் அனைத்திற்கும் மூலதனம்.

ஆனால் மீராவைப் பார்க்கும் போதெல்லாம் தாத்தா மனது விட்டு விடுவார்.
அதற்காகவே அவரை விட்டு சற்று விலகியே இருப்பாள்.

எந்த நேரத்திலும் மனதைச் சோர்வடைய விடக் கூடாது என்று நினைப்பவள் மீரா. இந்த மூன்று வருடமாக பெற்றோர் போய், அவளுக்கும் ஒரு கொடூரம் நடந்த பிறகு, பாரம் சுமக்க வேண்டுமோ என்று உறவுகள் விலகிய போது, நான் இருக்கேன் என்று நின்றவர் தாத்தாதான்.

பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். எனவே எந்தப் பணமும் கிடைக்கவில்லை.
தாத்தாவும் வீடு புரோக்கர். இந்த வீடு சொந்தம்தான். மீரா டியூஷன் எடுக்கிறாள்.

அதில் வரும் வருமானம்தான். இதில் பிளாஸ்டிக் சர்ஜரி மாயாஜாலம்தான். ஆனாலும் மேஜிக் நடக்கும் என்று நம்பினாள் மீரா.

அதற்கு எதிர்மறையாகப் பேசும் மனிதர்களிடமிருந்து விலகியே இருப்பாள் மீரா. எனவே தாத்தா
சொல்லுக்கு மறுமொழி பேசாமல் குளித்து கோவிலுக்குக் கிளம்பினாள்.

ஊரின் நடுவில் மிகப் பழமையான சிவன் கோவில். ஆயிரம் வருடங்கள் பழமை என்பார்கள்.
அவளின் சித்தி பையன் சீனுதான் பூஜை.

அவனுக்கும் சொரியாசிஸ் வியாதி என்பதால் அவனையும், இந்த வேஷதாரி மனிதர்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

சீனு கோவிலைத் திறந்திருந்தான்.

“வந்துட்டியா. தண்ணீர் எடுத்துட்டு வந்தா ஈசனை குளிப்பாட்டி விடலாம். பூ பறிச்சு வந்துட்டா,
மாலை கட்டிடலாம்.”

“டன்.”- மீரா சன்னதி வாசலில் நின்று ஈசனைப் பார்த்தாள். மிகப் பிரும்மாண்டமான லிங்கம்.
அப்படியே மனதை ஈர்த்தது.

“உன்கிட்ட நான் என்ன கேட்பது. எதிரில் நிக்கறேன். என் மன வேதனைகளைத் தீர்த்து, எனக்கு எது நல்லதோ, அதைச் செய்”- ஒரு சல்யூட் வைத்தாள். மடமடவென்று தண்ணீர் இறைத்து, வள்ளி பறித்து வைத்திருந்த பூ மாலை கட்டி முடியும்போது விடிந்திருந்தது. இரண்டொருவர் வர ஆரம்பித்திருந்தனர்.

அவர்கள் கண்ணில் படாதவாறு சன்னதி கதவின் பின் நின்றாள்.

“சம்பந்தர் தேவாரம் பாடேன் மீரா.”- சீனு.

“நல்வெணெய் விழுதுபெய்து ஆடுதிர் நாள்தொறும் நெல்வெணெய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்தொறும் சொல்வணம் இடுவது சொல்லே.”

“அட, அட, டேய் ஓடுடா. நம்ம கோவில் கிணத்துலேர்ந்து பொற்குடம் வருதா பாரு. தங்கக்
காசுகளை அள்ளிட்டு வாங்க.”- ராமசேஷூ குரல் கிண்டலுடன் ஒலித்தது.

“ஏன், வராதா? நம்பிக்கையுடன் பாடினா கண்டிப்பா வரும்”- தமிழாசிரியர்.

“ஆஹா, நம்ம மீரா பாடினா கண்டிப்பா வரும்.” ராமசேஷூ குரலில் கிண்டல். “ஆனா அவ முகத்தைக் காட்டக் கூடாது.

ஈசன் பயந்து யாருக்குமே பொற்காசுகள் தர மாட்டார்.”

“இது தப்பு ராமு.” தமிழாசிரியர் கண்டித்தார். “ஒருவருடைய தோற்றத்தைக் கிண்டல் செய்யக்
கூடாது. இது அவளா ஏத்துகிட்டது இல்லை.

அவளும் பொற்சிலை மாதிரி இருந்தவதான்.”

“ம்ம்”- உறுமலுடன் நகர்ந்தார் ராமசேஷு

“அவன் சொல்றதை மனசுல வச்சுக்காதே மீரா.”- தமிழாசிரியர்.

“இல்லை சார். நிறையக் கேட்டு அலுத்துப் போச்சு. என் புலம்பலைக் கேட்டு இறைவனுக்கும்
அலுத்துப் போச்சு போல.”

“அப்படிச் சொல்லாதே மீரா. எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் உண்டு. எண்ணங்களே வாழ்க்கை.

நிச்சயம் நல்லது நடக்கும்னு நம்பு. அது எல்லையற்ற வலிமை படைத்தது. நாம என்ன நினைக்கிறோமோ, அதுவாகவே நம்மை மாற்றும்.”

“நீ என்னவாகனும்னு நினைக்கிரே?”- சீனு.
“அவ என்ன நினைப்பா? மீண்டும் அழகா மாறணும்னுதான்.”- ராமசேஷு.
“இல்லை சார்.”- கடினமான குரலில் மறுத்தாள் மீரா.

“என் மனசைப் பூரா அன்பால நிரப்பு. எக்காரணம் கொண்டும் என் செயலோ, பேச்சோ யார்
மனதையும் புண்படுத்தக் கூடாது. இதான் என் விருப்பம். கருணைங்கறதை விட்டு நான் எப்பவும் விலகக் கூடாது.

அது இல்லாமதான் என் உருவம் இப்படி மாறிப் போச்சு.” மீராவின் பதிலில் ராமசேஷுவின் முகம்
மாறியது.

“ஏண்டா இன்னைக்கு எதுவும் பிரசாதம் இல்லையா?”- சீனுவிடம் கேட்டபடி நகர்ந்தார்.
“கிருஷ்ணன் மண்ணைத் தின்னான். உங்களுக்கும் மண்ணுல கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,
தாளிச்சு, வெங்காயம் போட்டு வறுத்துத் தரவா?”- சீனு.

“கொழுப்புடா உங்களுக்கு.”
“ஒரே சொத்து அதுதான்.”- சீனு சிரித்தான். அவர் முகம் சுருங்க நகர்ந்தார்.
“என்ன சீனு?- மீரா.
“பின்ன என்ன? எப்பவும் யாரையானும் நக்கல், நையாண்டி செய்யறதே பொழைப்பா இருக்கு
இவருக்கு.”

“விடு சீனு. அவர் சொல்றதுனால நாம குறைஞ்சு போயிட மாட்டோம். நீ வேணா பாரு. அவமானப் படுத்தினவங்க அத்தனை பெரும் மீராகிட்ட வந்து மண்டியிடற காலம் வரும்.

பிரபஞ்ச சக்தி ஒரு பக்கமே சுத்தாது. இப்போ நமக்கு அமைதியும், பொறுமையும் மட்டும்தான் முக்கியம்.”- தமிழாசிரியரின் வார்த்தைகள் மனதுக்குள் புது வெளிச்சம் பாய்ச்சியது.

“நன்றி சார்.”
“மீரா நீ என்ன படிச்சிருக்கே?”
“பி.எஸ்.சி கம்ப்யூடர் சயின்ஸ் சார்.”

“வெரி குட். எனக்குத் தெரிந்த ஒரு இடத்துல வேலைக்கு ஆள் கேட்டாங்க. உன் பெயர்
சொன்னேன். இன்னைக்கு வரச் சொன்னாங்க. போறியா?”

“கண்டிப்பா சார்.”
“என்ன வேலைன்னு கேட்க மாட்டியா?”
“தவறான இடத்துக்கு நீங்க என்னை அனுப்ப மாட்டீங்க”

நெகிழ்வுடன் ஆசிரியர் அவள் தலையைத் தடவிக் கொடுத்தார்.

“மனிதர்கள் மேல் நீ வச்சிருக்கிற நம்பிக்கையே உனக்கு நன்மைகளைக் கொண்டு வரும் மீரா. இது உனக்குப் பிடித்த வேலைதான். சரோஜம்னு ஒரு ஈ மேகசீன்.

அதுல வேலை. அங்க போனா உனக்கு என்ன வேலை, எந்த மாதிரின்னு புரியும். அது பல்சுவை மகசீன்.”

“எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் சார் படிக்கிறது.”
“போம்மா. கடவுள் அருளால் உனக்கு இந்த வேலை கிடைக்கும்.”
“அவர் வாழ்த்து பலித்தது. இந்த வேலை அவள் வாழ்வின் போக்கையே மாற்றியது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

3 responses to “பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-1”

 1. இளவல் ஹரிஹரன் says:

  நல்ல தொடக்கம். பிளாஸ்டிக் சர்ஜரி, சொரியாஸிஸ், சரோஜம் இ மேகசின் என எதிர் பார்ப்பைக் கூட்டுகிறது. மயிலிறகு மனதை வருடட்டும்.

  இளவல் ஹரிஹரன்

 2. ரிஷபன் says:

  மீராவின் வாழ்வில் நல்லதொரு திருப்பம் வரப் போகிறதா..
  காத்திருப்போம்

 3. மரு. வெங்கட்ராமன் says:

  ரொம்ப பிடிச்ச விஷயம் படிக்கிறது ….அருமையாக நாயகியின் எண்ண ஓட்டங்களை அறிய வைத்து விட்டார்.

 4. மரு. வெங்கட்ராமன் says:

  ரொம்ப பிடிச்ச விஷயம் படிக்கிறது ….அருமையாக நாயகியின் எண்ண ஓட்டங்களை அறிய வைத்து விட்டார்.. தொடரை படிக்க ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *