திருவைகுண்டம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரவணன் வெற்றி!

திருவைகுண்டம் தொகுதியில் தவெக வேட்பாளர் அன்னை ஜி.சரவணன் 1186 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தவெக சார்பில் அன்னை ஜி.சரவணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ், அதிமுக, தவெக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தவெக வேட்பாளர் சரவணன் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இருவரும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தனர். எஸ்.பி.சண்முகநாதன் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடைசி 2 சுற்றுகளில் தவெக வேட்பாளர் சரவணன் கூடுதல் வாக்குகளை பெற்றார்.
இறுதியில் தவெக வேட்பாளர் சரவணன் 58,814 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் 57,628 வாக்குகள் பெற்று 2வது இடம் பெற்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் 41,277 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரம் 13,153 வாக்குகளும் பெற்றனர்.
நோட்டாவிற்கு 579 வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தவெக வேட்பாளர் சரவணன் 1186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.










