கரூர் கொடூரம்: கவர்னர் தயாரிக்கும் பகீர் ரிப்போர்ட்!

Share Button

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டுமே கரூருக்கு தங்கள் குழுவினரை அனுப்பி ஆய்வு செய்திருக்கின்றன.

கரூர் சம்பவம் நடந்த அன்று இரவு 9.54 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,  “கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.”  என்று பதிவிட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது என்று தவெக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவிலும், ‘5 மாவட்டங்களில் எந்த பிரச்சினையும் ஏற்படாதபோது கரூரில் மட்டும் ஏன் இப்படி ஏற்பட்டது? கரூர் மக்கள் கடவுள் போல இறங்கி வந்து உண்மையைச் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்,.  இதில் சிபிஐ விசாரணை வேண்டும் தவெகவும் கூறியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும்  ஆளுங்கட்சிக்கு ஒரு  பாதுகாப்பு, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பாதுகாப்பு என மாநில அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்தின் முழு பொறுப்பும் ஸ்டாலின் அரசுடையதுதான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பத் தயாராகி வருகிறார் என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.

கரூர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில்  10 ஆயிரம் பேர் வருவார்கள் என  விஜய் தரப்பில் போலீசிடம் கூறப்பட்டிருந்தாலும், அதை விட அதிகமாக வருவார்கள் என்று முன்கூட்டியே  உளவுத்துறை போலீஸ் கணிக்கத் தவறியதா?  அல்லது  அதிக கூட்டம் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கேற்ற வகையில் பாதுகாப்பை அதிகரிக்காமல் விட்டார்களா?

விஜய் மீது என்னென்ன தவறுகள் உள்ளன?  உயிரிழப்புக்குப் பிறகு தவெக மாவட்ட நிர்வாகிகள் முதல் மாநில நிர்வாகிகள் வரை வழக்குப் பதிவு செய்த மாநில அரசு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

இரவோடு இரவாக அனைத்து உடல்களும் அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதா? அதற்குண்டான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா?

என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநர் தயாரித்து வருகிறார்.  ஆளுநர் ஆர்.என்.ரவி உளவுத்துறை போலீஸாக இருந்தவர். சிக்கலான நெருக்கடியான பல சம்பவங்களை தனது சர்வீசில் எதிர்கொண்டவர். அந்த வகையில் தனது  அனுபவத்தின் அடிப்படையிலும் அவர் பல்வேறு கேள்விகளை கரூர் சம்பவத்தில் கேட்டு அது தொடர்பாக அறிக்கை தயாரிக்கிறார். விரைவில் உள்துறை அமைச்ச்கத்துக்கு ஆளுநர் அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் மத்திய அரசும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  என்கிறார்கள். ஆளுநர் மாளிகை வட்டாரங்களில்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *