பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-2

Share Button

மயிலிறகு
(2)

மீரா படி ஏறாமல் நிதானித்தாள்.

ஓரமாய் ஒதுங்கி நின்றாலும் எதிரில் வந்தவர்கள் திடுக்கிட்டு நின்று பின் அவளைக்
கடந்து போனார்கள்.

வழக்கமாய் நடப்பதுதான். என்றாலும் வழக்கம் போல் மனது சங்கடப் பட்டது.
ஆனால் தவிர்க்க முடியாத விஷயங்களை நினைத்து உன் மனது அமைதியைக்
கெடுத்துக்காதே என்று தாத்தா அடிக்கடி சொல்வதுதான் என்றாலும் இந்த மாதிரி நேரங்களை எதிர் கொள்ள முடிவதில்லை.

தமிழாசிரியரின் கடிதத்துடன் சரோஜம் ஈ மேகசீன் அலுவலகத்திற்கு மீரா வந்திருந்தாள். இரண்டாவது மாடியில் அலுவலகம் இருந்தது. மிகப்பெரிய காம்ப்ளெக்ஸ். அதன் கீழே பெரிய மால்.

மாடியில் அலுவலகம் இருந்தது. லிப்ட் முடிந்தவரை மீரா பயன்படுத்துவதில்லை. படி ஏறுவதன் மூலம் கால்களுக்கு உறுதி. அதுவும் ஒரு உடற்பயிற்சி என்பார் தாத்தா. வெளியில் வாக்கிங் போவதில்லை.

எதிரில் வருபவர்களுக்கு ஒரு அசௌகர்யம், மனக் கலக்கம் என்று அதைத் தவிர்த்து விடுவாள் மீரா. மெதுவாகப் படி ஏறினாள். சுற்றிச் சுற்றி மூன்று திருப்பங்கள் ஏறிய பிறகு ஒரு
கண்ணாடிக் கதவின் மேல் சரோஜம் ஈ மேகசீன் என்று பெயர்ப் பலகை.

கண்ணாடி வழியே ரிசப்ஷனில் ஒரு பெண் அமர்ந்திருப்பது தெரிந்தது. உள்ளே நுழைந்து அவளிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

“உட்காருங்க. சார் ஒரு முக்கியமான காலில் இருக்கார்.”- என்றவளின் முகத்தில் ஒரு
சங்கடம் தெரிந்தது. மீரா புன்னகையுடன் அவள் காட்டிய சேரில் அமர்ந்தால்.

“இந்த உலகைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொள்.”- மீண்டும் தாத்தா.
ஹால் சுவர் ஐவரி கலரில் இருந்தது. பெரிதாக இரண்டு ஜன்னல் சூரிய வெளிச்சத்தை
அள்ளி வீசியது.

அருகருகே இரண்டு அறைகள். ஒன்றின் மேல் ஜெகதீசன் என்ற பெயர்ப் பலகை. மற்றொன்றில் ஒரு இளைஞன் அமர்ந்து சிஸ்டத்தில் எதோ செய்து கொடிருந்தான்.

மீரா தன் துப்பட்டாவினால் பாதி முகத்தை மறைத்துக் கொண்டாள். வலது பக்கம்தான்
அதிகம் கருகி, வலது கண் பாதி மூடியிருந்தது. காது வெந்து போனதால் அங்கு வெறும் சதை
மட்டும்தான் இருந்தது.

ஆரம்பத்தில் ஆபரேஷன் செய்த டாக்டர் காதில் ஒரு சின்ன ஓட்டை மட்டும் இருக்கட்டும். அப்போதுதான் சப்தம் கேட்கும் என்றிருந்தார்.

ஆனாலும் வலது காதில் சன்னமாகத்தான் கேட்கும். எல்லோரையும் இடது பக்கம்தான்
பேசச் சொல்வாள். இங்கு ஜெகதீசனிடம் எப்படிப் பேசுவது? இந்தக் குறைகள் அறிந்து
வேலை கொடுப்பாரா? என்று லேசாகக் கவலை எழுந்தது.

ஜெகதீசன் இயல்பாக இருந்தார். முழு நாற்காலியையும் ஆக்கிரமித்த ஆகிருதியான
உடல் வாகு. முன்தலை முழுதுமாக வழுக்கை. விகடன் தாத்தா போலிருந்தார்.

வணக்கம் சொன்னவளை அமரச் சொன்ன இடம் மிகச் சரியாக அவளின் இடது பக்கம்.
ஜெகதீசனின் வலது பக்கம். அப்பாடா என்று இருந்தது.

மென்மையாகப் பேசினார். அவளின் முகம் பற்றிப் பேசவே இல்லை. பொதுவாக
அவளின் படிப்பு, ஆர்வம் பற்றிப் பேசினார். கேள்விகள் கேட்டார்.

‘சார், என் விபத்து பற்றி”- மீரா இழுத்தாள்.

“முடிஞ்சு போன விஷயம் எதுக்கும்மா? தமிழய்யா எல்லாம் சொல்லி இருக்கார்.”

“அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“நான் அவரிடம் கல்லூரியில் ஒரு வருடம் படித்தேன்.”

ஜெகதீசன் மென்மையாகப் பேசினார். தன் ஈ மேகசீன் பற்றி, தன் கனவு பற்றி, அதில்
வெளியிடும் விஷயங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.

அந்த மாத ஈ மேகசீனின் லேஅவுட் செய்யச் சொன்னார் மீராவை. அவள் இரண்டு
மணி நேரம் எடுத்து, சில மாதிரிகளை செய்து கொடுக்க, குட், குட் என்று பாராட்டினார்.

“சரி போய் வேலையைப் பாரு.”- என்றார்.

“இப்போதேவா?”- வியப்புடன் கேட்டாள் மீரா.

“இன்றே நமது நாள்.”

“அப்போ நாளை யாருக்கு?”

“நாளைன்னு இருக்கா?”

“என்ன சார்?”- திகைத்தாள் மீரா.

“எஸ், அடுத்த நொடி சாஸ்வதம் இல்லைங்கறப்போ நாளை என்பதே இல்லை. இந்த
நொடி நல்லது செய்து வாழ்ந்து விடு. அடுத்தடுத்த நொடி அற்புதமா வளரும்.”- ஜெகதீசனின்
புன்னகை மனத்தைக் கவர்ந்தது.

இங்கு, இவரின் மூலம் தன் வாழ்க்கை திருப்தியும், நிறைவுமாய் அமையும் என்ற
நம்பிக்கை மலர்ந்தது மனதில்

“என்ன? மனசுல நம்பிக்கை மலருதா?”

“ஆமாம் சார்.”

“”குட். இன்றைய என் கணக்கில் புண்ணியம் சேர்ந்தது. சரி ஒரு காபி குடிக்கலாமா?”

“இல்லை சார், நான் அதிகம் காபி குடிக்கறதில்லை.”

“அடடா, இந்தக் கெட்ட வழக்கம் எல்லாம் கூடாது. அடிக்கடி டீ, காபி வரும். லெமன்
ஜூஸ் வரும் குடிக்கணும். வடை வரும். சாப்பிடனும்.”

‘அப்போ லஞ்ச்?”

“அது ஒரு மணிக்கு.”

“மை காட். நான் சீக்கிரம் வெயிட் போட்டுடுவேன்.”

“போடு. நம்ம ஊழியர்கள் எல்லாம் கொழுக், மொழுக்னு இருக்கணும்.”

ஜெகதீசன் எழுந்தார். “சரி. நான் கிளம்பறேன். இனி இந்த நிறுவனத்தின் முழுப்
பொறுப்பும் நீதான். நான் என் வேலையைக் கவனிக்கிறேன்.”

மீரா திகைத்தாள். “நீங்க இல்லையா? நான் எப்படி?……..”

“அம்மாடி அடியேன் ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். இது என் மகனின்
பத்திரிகை. அவன் சுய முன்னேற்ற வகுப்புகள் நடத்தறான். நிறைய கல்லூரிகளுக்கு கிளாஸ்
எடுப்பான். டிரெய்னிங் தருவான். அவனின் மனத் திருப்திக்கு நடத்தறான் இந்த மேகசீனை.

அவன் வெளில போகறதால இதன் பொறுப்பை நம்பிக்கையான ஒருத்தர் கவனிப்புல
விடலாம்னு.”

மீரா இப்போது குழப்பத்தில் ஆழ்ந்தாள். தனக்கு என்ன தெரியும்? அவள் விசாரித்த
வரையில் சரோஜம் மிக வெற்றிகரமாக இயங்கும் ஒரு மேகசீன். பல்சுவை மாத இதழ். அதற்கு
தீனி போடும் சக்தி தனக்கு இருக்கிறதா?

“தீனி போட நிறைய இருக்காங்க. அதை ஒருங்கமைக்க வேண்டியது உன் வேலை.”

“ஒகே சார். உங்க பையன் செலக்ட் செய்து தருவதை நான் தொகுத்து லே அவுட்
செய்யணும். இல்லையா?”

“அதே, அதே. நீ லேஅவுட் செஞ்சாட்டு அதை ஆன்லைன்ல பப்ளிஷ் பன்றதுக்கு
டெக்னிகல் ஆட்கள் இருக்காங்க. உன் வேலை வரதுல செலக்ட் செய்து என் புள்ளைக்கு
படிச்சு காட்டி, பர்மிஷன் வாங்கணும்.”

‘ஏன் அவர் படிக்க மாட்டாரா?”

“மாட்டான்.”

“ஏன்?”

“ஏன்னா அவனுக்குக் கண் தெரியாது.”

சட்டென்று அமைதியானாள் மீரா. அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவள் விழிப்பதை ரசித்துப் பார்த்துச் சிரித்தார் ஜெகதீசன்.

“இப்போ புரியுதா? நான் ஏன் உன் அழகைப் பார்க்காம, உன் அறிவைச் சோதனை
செஞ்சேன்னு. பார்வை இல்லாதவனுக்கு அழகு முக்கியமில்லை. அன்பும், அறிவும்தான்
முக்கியம். அன்புதான் அறிவுன்னு உணர்ந்தவங்க அவங்க.”

மீராவுக்குத் தொண்டை அடைத்தது. உலகம்தான் எத்தனை வித்தியாசமான
மனிதர்களைத் தனக்குள் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இரக்கம் இல்லாமல் அழகை
அழிக்கிறது. மறு பக்கம் அழகு முக்கியமில்லை. அன்புதான் அவசியம். அதான் அழகு
என்கிறது.

மீராவும் அழகு பற்றிய கனவில் மிதந்தவள்தான். ஒரே மகளாய், அம்மாவின் கை
அலங்காரத்தில் ரோஜாப்பூவாய் மலர்ந்தவள்தான். ரோஜாப் பூவைப் பறிக்க ஆசைப்பட்டவன்
அது கிடைக்காது என்றவுடன் அதை அழிக்கத் துணிந்து விட்டான். அவனுக்கு என்ன!

தப்பித்து விட்டான். காலம் முழுக்க அழுவது, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப் படுவது
தான்தானே.

“கூல்” என்றார் ஜெகதீசன்.

“நடந்து போனதை நினைச்சுகிட்டே இருந்தால் நிம்மதிங்கறது இருக்காது. தியாகம்
செய்ய, நன்றி கூற, மன்னிக்க கற்றுக் கொள். அப்புறம் மகிழ்ச்சி, அமைதி எங்கேன்னு தேடி
ஓட வேண்டியதில்லை. நம்மைத் தேடி எல்லாமே வரும்.”

ஜெகதீசன் ஆதூரமான குரலில் கூறினார்.

“உன் முகம் இப்படி இருக்குன்னு நீ ஏன் வேதனைப் படறே? வெட்கப் பட வேண்டியது
இந்தச் சமூகம். அது ஒருநாள் உன்னிடம் கை ஏந்தும். போராடறதுன்னா அது வாழ்க்கை
இல்லை. நம் மனசோட போராடி ஜெயிக்கறது.

நம்ம மனசுல இருக்கற தாழ்வு மனப்பான்மை, சந்தேகம், தைரியமின்மை. தூக்கி எரி. துணிச்சலா நிமிர்ந்து நில். ஆசிட் ஊத்தினவன் வந்தா வாடா, உன்னை மன்னிக்கறேன்னு சொல்லு. அதுல அவன் கூனிக் குறுகிப் போவான்.

அதான் தண்டனை. அதை நீ தரனும்.”

மீராவின் கண்கள் கசிந்தது. தொண்டை அடைக்க, அவள் முகத்தைத் திருப்பிக்
கொண்டாள்.

“இங்க பாரு மீரா, எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் வாழ்க்கைல ரெண்டு விஷயத்தை
மட்டும் விட்றக் கூடாது. உண்மை, அன்பு. மூணாவதா நான் சொல்றது நேர்மை. இருந்து பார்.

அற்புதமான வாழ்வு உன்னைத் தேடி வரும்.”-ஜெகதீசன் இழுத்து மூச்சு விட்டார்.
“நிறையப் பேசிட்டேன். ஒரு காபி குடிக்கணும்”- என்றார்.

“நானும் குடிக்கறேன் சார்”- என்றாள் மீரா.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *