திருவண்ணாமலையில் உழவர்களுடன் மகிழ்வோம் பொங்கல் சிறப்பு நிகழ்வு!
திருவண்ணாமலை :-
திருவண்ணாமலையில் உழவர்களுடன் மகிழ்வோம் பொங்கல் சிறப்பு நிகழ்வு!
தமிழ்நாட்டில் இயங்கிவரும் நன்செய் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘உழவருடன் மகிழ்வோம்’ என்ற பொங்கல் சிறப்பு நிகழ்வு (ஜனவரி-07) திருவண்ணாமலை, செட்டித்தெரு ஜெயராமபிள்ளை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நன்செய் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் மு.ஆனந்தராஜின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்ட சுற்று வட்டாரத்தில் அமைந்திருக்கும் கிராமங்களான வாழவச்சனூர், வரகூர், காம்பட்டு (வரகூர்), இராயண்டபுரம், எறையூர், சாவல்பூண்டி, கோளாப்பாடி, சேத்துப்பட்டு, தத்தனூர், மேல்வில்லிவரம், நெடுங்குணம், தேவிகாபுரம், புஷ்பகிரி (சந்தவாசல்), ஏந்துவாம்பாடி, முனியந்தாங்கல் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த 200 ஆண், பெண் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய வேட்டி, சட்டை, சேலை மற்றும் மண்வெட்டி ஆகியன வழங்கிவைக்கப்பட்டது.
இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் நல்லெண்ணத்தில் நடத்தப்பட்ட இந்த பெருநிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை இளம் விவசாயிகளான இரா.ஜெகன் துரிஞ்சி குப்பம், சு.முகிலன் காட்டுக்காநல்லூர், இரா.இளமாறன் ரெட்டிப்பாளையம், ம.தரணி சோமந்தாங்கல் ஆகிய நான்கு பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது.
மண்வாசம் கலைக்குழுவினரின் பறையாட்டம், மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்சிகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இரா.பிரபாகரன், சென்னை உதவும் உள்ளங்கள் இரா.சந்தானம், ரிலக்ஸ் இந்தியா லிமிட்டெட் திருமதி. மு.கீதாலட்சுமி, இராணிப்பேட்டை, இந்து வித்யாலயா முதல்வர், திருமதி. உ. கிருத்தி நிவேதித்தா, முனைவர். சாயர் த.அரவிந்த்குமார், வேர்கள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திருமதி.க.நளினி, ரிலக்ஸ் இந்தியா லிமிட்டெட் திருமதி. பா.கோமதி சீனிவாசராகவன், திருவண்ணாமலை, ஸ்ரீ லட்சுமி HP கேஸ் ஏஜென்சி கோ.கஜேந்திரன் ஆகியோருடன் இலங்கை தமிழன் நாளிதழ், சென்னை தமிழன் தொலைக்காட்சி, புதிய வானம் வலைக்காட்சி ஆகியவற்றின் சார்பில் சர்வதேச ஊடகவியலாளர் மணி. ஸ்ரீகாந்தன் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக இராசயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களினால் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி, தானியங்களை கொண்டு தமிழர் பாரம்பரிய உணவுகளான கருப்பு கவுனி பாயசம், பல தானிய வடை, காளான் வாசனை சீரக சம்பா பிரியாணி, தங்கச் சம்பா வெள்ளை சாதம், மண் கட்டிய துவரை சாம்பார், கத்திரி மொச்சை காரக்குழம்பு, பொரியல், மோர், பாரம்பரிய ரசம், பாரம்பரிய அப்பளம், நெல்லிக்காய் ஊறுகாய், முடவாட்டுக் கிழங்கு சூப், அவல் புட்டு ஆகியன தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply