ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்ன?

Share Button
பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்._
செருப்புத் தொழிலாளி தினமும் தனது செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான்.
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தான். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.
விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார்.
அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். ”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்து இதே விசயத்தை சொல்லிவிட்டு வந்துவிடுங்கள்” என்று கூறி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.
அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.
நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ” *உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *