சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அறம் மருத்துவமனை சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சமூகத்தில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி கன்மலை டிரஸ்ட் இயக்குனர் திரு.எடிசன் அவர்கள் எடுத்துரைத்தார்.
மாணவர்களுக்கு இடையே போதைப்பொருள் பற்றியும் அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாணவர்களிடத்தில் எடுத்துரைக்கப்பட்டது. நமது நாட்டில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் பயன்பாடு இளம்பருவத்தினரிடம் அதிகரித்துக்கொண்டே உள்ளது.இளம்பருவத்தினர் தற்காலிகமாக ஏற்படும் போதைக்காகவும்,மேலும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதனுடைய பின்விளைவுகள் பற்றின புரிதல் அவர்களிடத்தில் காணப்படுவதில்லை.
பெரும்பாலும் 17-25 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் போதைப்பொருட்களை உபயோகம் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.இந்த போதைப்பொருட்கள் கல்லீரல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதித்து அகால மரணத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்தவை. அதுமட்டுமல்லாது இன்று மனித உயிருக்கு உலை வைக்கும் இருதயநோய், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட 10 கொடிய நோய்கள் வருவதற்கு போதை பொருட்கள் காரணமாக திகழ்கின்றன.
போதை பழக்கத்துக்கு அடிமையான இளவயதினர் ஏராளமானோர் தற்கொலை செய்து உயிரை மாய்ந்து இருக்கிறார்கள். ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிரை போதைப் பழக்கம் பறிக்கிறது. போதை பழக்கத்தால் உலகம் முழுவதும் குற்றங்கள், விபத்துகள், கலாசார சீரழிவுகள் அதிகரித்துவிட்டன.பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் போதை பொருள் பயன்படுத்துவதால் உளவியல்ரீதியாக ஏற்படும் விளைவுகளை பற்றி மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் எடுத்துரைத்து கலந்துரையாடினார்.
மேலும் அனுபவரீதியாகவும் சட்டரீதியாகவும் ஏற்படும் விளைவுகளை பற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திருமதி கவிசெல்வா எடுத்துரைத்து மாணவர்களிடத்தில் கலந்துரையாடினர். போதை பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
Leave a Reply