பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்த விவகாரத்தில் திமுக சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்பட இருந்தது.
மேலும் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் அனுமதிக்க இயலாது என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply