மனம் ஒரு போர்க்களம் : நான் மனம் பேசுகிறேன் : Episode-2
மனம் ஒரு போர்க்களம். போர்க்களத்தின் அடிப்படையே குழப்பமான சூழல். தாக்குதல், எதிர்ப்பு, அமைதி, நிம்மதி, பயம், ஆதரவு, துணை எங்கிருந்து எப்படி வரும் என்று கணிக்கமுடியாத தந்திரங்கள் நிறைந்த ஒரு சூழலே போர்க்களம். கிட்டத்தட்ட இதன் அனைத்து இயல்புகளையும் ஒருங்கே பெற்று, அவைகளனைத்தையும் வெளிச் சூழலுக்கு ஏற்ப ஒன்றை மறைத்து அதையே இன்னொன்றாக வெளிப்படுத்தி, அதன் விளைவுகளை ஏற்கமுடியாமல் இப்படியா அப்படியா எனும் குழப்பச் சூழலில் ஒருவரைத் தள்ளி தன்னை அடையாளம் காட்டாமல் சம்பந்தப்பட்டவர்க்கே சலிப்பை உருவாக்கும் மிகப்பெரியக் களமே மனம்.
ஓர் கணவன் தன் மனைவி பிள்ளைகளுடன் மலையருவிச் சுற்றுலா வந்திருந்தார். மற்றவர்களையும் தன் உடைமைகளையும் ஓரிடத்தில் விட்டுவிட்டு அவர் மட்டும் அருவியில் குளிக்கச் சென்றிந்துதார். அங்கு வந்திருந்த நிறைய குடும்பங்கள் கிட்டத்தட்ட இதே சூழ்நிலையில் இருந்தன. மலையின் மேலிருந்த குரங்குகளிலிருந்து ஒன்று திடிரென்று இறங்கிவந்து அவரின் உடைமைகள் இருக்கும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தது. இதனைப் பார்த்த அந்த மனிதர் தன உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு மிக வேகமாக ஓடி வந்தார். இதனைப் பார்த்த அக்குரங்கு மேலும் வேகமாகச் சென்று அவர் மனைவியின் அருகிலிருந்த பொட்டலம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு அம்மனிதர் வருவதற்குள் ஓடிச்சென்றது.
வேகமாக ஓடிவந்த அம்மனிதர் குரங்கைத் துரத்தமுடியாமல், வந்த வேகத்தில் கோவமாகத் திட்டிக்கொண்டே தன் மனைவியை பளீரென அவரின் முதுகிலும், கன்னத்திலும் அடித்தார். குரங்கின் சத்தம், அக்கணவரின் குரல், அம்மனைவியின் அழுகை அனைத்தும் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரும் பார்ப்பதை அறிந்த அக்கணவர் மேலும் தன் மனைவியையும் குழந்தைகளையும் சத்தமாகத் திட்டிக் கொண்டிருந்தார்.
இது எவ்வகையான வெளிப்பாடு? யாரோ ஒருவர் தனக்குச் சொந்தமானப் பொருளைத் தூக்கிகொள்கிறார்களே எனும் தவிப்பா? தன் சம்மதமில்லாமல் தன் பொருளை இழக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்கமுடியாத நிலையா? தான் ஓடிவந்தும் தடுக்கமுடியவில்லையே எனும் தோல்வியா? அனைவரும் பார்த்துவிட்டார்களே எனும் சமாளிப்பா? என் மனைவிதான் காரணம் எனும் மற்றவர்கள்மேல் பழிபோடும் குணமா? தான் முன்னேற்பாடாக இல்லை என்பதை ஏற்கமறுக்கும் மறுதலிப்பா? மனைவிக்கு முன் ஈரத்துடன் அவரசரமாக தடுக்கிவிழுந்து ஓடிவந்து நின்ற அவமானமா? குரங்கின் மேலுள்ள பயமா? இது எதுவுமே இல்லாது இதுவரை ஏற்பட்ட வெறும் பழக்கத்தின் காரணமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாரா?
எவ்வகையாக இருந்தாலும் ஒன்று நிச்சயம். பலவகையானப் போராட்டம் அவர் மனதில் ஏற்பட்டு அவைகள் அனைத்தையும் வெறுமனே வெளிபடுத்திவிட்டார்.
வெறும் பதட்டத்தின் வெளிப்பாடு ஒரு குழப்பமான சூழ்நிலையை மட்டுமே உருவாக்கும். பதட்டம் இல்லாமல் தன்னை வெளிபடுத்த மனம் பழக்கப் பட்டிருக்கவேண்டும். சூழ்நிலையை உணரும் தன்மை மனதில் நிலை பெற்றிருக்கவேண்டும். அதற்கு தன்னுடைய முந்தைய செயல்களை எடைபோட்டுப் பார்க்கும் பொறுமை இருக்கவேண்டும்.
இப்பொழுதும் நம் மனம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்துகொள்வதற்கு, மற்றவர்களைக் குறை சொல்வதற்கு, நம்மை நாமே பல காரணங்களுடன் சமாதானம் செய்துகொள்வதற்கு, அடுத்தடுத்து ஆசைப்படுவதற்கு, தினமும் குறிப்பட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு மற்றும் பல வகைகளில் நம்மை அறியாமலேயே மனம் பழக்கப்படுத்தப்பட்டிருகிறது.
பதட்டப்படாமல் யோசிப்பதற்கு மனம் கற்பனைகளிலிருந்து விடுவிக்கப் படவேண்டும்.
கற்பனை செய்யாமல் இருப்பதற்கு, யதார்த்தம் புரியவேண்டும். கற்பனை என்பது பலவிதமான, நம் கட்டுப்பாட்டில் இல்லாத, தொடர்பில்லாத அல்லது தொடர்புடைய எண்ணங்களின் போக்குவரத்தே ஆகும். இங்குதான் பல நூன்றாண்டுகளாக ஆன்மிகம் பலவகையான மதங்களின் மூலமாக உதவிபுரிகிறது. ஒரேயடியாக கற்பனையை விலக்குவதன் சிரமம் புரிந்துகொண்டுதான் மற்ற விஷயங்களிலிருந்து ஒரே விஷயத்தில் தன் கவனத்தை நிறுத்துவதற்காகத்தான் மந்திரங்கள், ஜபங்கள், பக்தி, சேவை, சரணாகதி மற்றும் இன்னபிற அனைத்துவகையான சடங்குகளும் ஏற்படுத்தப்பட்டன.
காலையில் வாக்கிங் போகும்போது மறக்காமல் மொபைல் போனுடன் ஹெட்செட் எடுத்துக்கொண்டு செல்வீர்கள். அதை காதில் மாட்டிகொண்டு விருப்பமான பாட்டை ஓடவிடுவீர்கள். உங்களைத் தொந்திரவு செய்வதற்கு யாருமில்லை, உடனே செய்யவேண்டிய வேலை எதுவுமில்லை…. பாட்டு ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் உங்களால் அந்தப் பாட்டை உள்வாங்கமுடியாது. ஏன்? உங்கள் மனம் தனக்குள் ஏதேதோ பேசிக்கொண்டே வரும்.
“இதபோல டெய்லி தவறாம வாக்கிங் வரணும்…ஒரே நாள் முடியுது, அடுத்த நாள் தவறிடுது.. பிக் பாஸ் பாக்கரதால நைட் சீக்கிரம் தூங்கமுடியல… நேத்து கமல்ஹாசன் நல்லா பேசினாரு இல்ல.. நல்லா கேள்வி கேட்டாரு..பாவம் வயசாயிடுச்சு அவருக்கு. நேத்து நைட் சரியா சாபிடல…அதான் சீக்கிரமே பசிக்குது. ஆபீஸ் ளையும் அவசர அவசரமா சாப்பிட வேண்டியிருக்கு… நேத்து அவங்களை அந்த வேலையை இன்னைக்கு முடிச்சிட்டு வரச் சொன்னேன்… என்னாசுனே தெரியல. இந்த மாசம் நிறைய செலவு. எனக்கு ஒரு ஷூ வாங்கணும். அவ வேற வாங்கனும்னு சொல்லியிருந்தா……..”
இதைப்போல ஏதேதோ வார்த்தைகள் தொடர்புடனும், தொடர்பில்லாமலும் மனதில் ஓடிக்கொண்டிருக்க, மொபைலில் ஒலிக்கும் பாட்டும் ஒரு பக்கம் காதின் மூலமாக மனதில் இறங்கிக்கொண்டிருக்க, எதையோ அனுபவிக்க வெளியில் வந்து, ஏதோ ஒரு சுமையாகவோ அல்லது சொல்லமுடியாத மனநிலையிலோ மீண்டும் வீட்டிற்கு வருவோம்.
கற்பனை வெறும் வார்த்தைகளாக மட்டும் வெளிப்படுவதில்லை. காட்சிகளாகவும் மனதில் ஓடும். உணர்வுகளாகவும் உணரப்படும்.
கற்பனை எப்பொழுதும் எதிர்காலத்திலோ அல்லது முடிந்த விஷயங்களைப் பற்றியோ, நடந்துமுடிந்த ஒரு செயல் இவ்வாறாக நடந்திருக்கலாமோ எனும் யோசனையிலோ, அவர் இப்படி பேசினால் நாம் இப்படி பதில் சொல்லவேண்டும் எனும் திட்டமிடலாகவோ, எப்போவோ எதிர்கொண்ட மகிழ்ச்சியை மீண்டும் நினைவுபடுத்தியோ, உங்கள் இயலாமையால் தவறவிட்ட செயலை திருத்தியமைக்கும் கற்பனையிலோ உங்கள் மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்று ஓரமாய் நின்று பார்பவருக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் யாரிடம் என்ன ஆயுதம் இருந்தது, என்ன உடுப்பு இருக்கிறது என்று தெளிவாகத் தெரியாது. உங்களுக்குப் புரியும்படி சொல்லவேண்டுமானால், அடிக்கடி கைகடிகாரத்தில் மணி பார்க்கும் நீங்கள் அக்கைகடிகாரத்தில் உள்ள முள்ளின் வடிவம், நிறம், நொடி முள் என்ன மணியைக் காட்டுகிறது என்பதைப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் ஒரு காட்சியை நீங்கள் பார்க்கும்போதே அதன் தொடர்பான பல கற்பனைகள், அல்லது வேறு ஏதோ சிந்தனைகள் உங்களைக் கவனப்படுத்தவிடாது அலைக்கழிக்கும்.
உங்கள் மனமும் ஒரு போர்களம்தான். ஏகப்பட்டத் திட்டமிடல்கள், யோசனைகள், கோவங்கள், ஆதங்கங்கள், வெறுப்புகள், பாசம், கடமைகள், சலிப்புகள், இயலாமைகள் வார்த்தைகளாகவும் காட்சிகளாகவும் அங்கும் இங்கும் போக்குவரத்து செய்துகொண்டிருக்கும். ஆனால் அந்த வார்த்தைகளும் காட்சிகளும் எங்கிருந்து வருகின்றன, அதனை எப்படி கையாளுவது என்பதைத் தெரிந்துகொள்ளும்போதுதான் நீங்கள் எஜமானனாகிறீர்கள். உங்கள் மனம் நீங்கள் சொல்லும்படிக் கேட்பதற்கான வாய்ப்பு உருவாகிறது.
நீங்கள் எஜமானனாக வேண்டுமானால் அதற்கென சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வது அவசியம். அம்முயற்சி ஒரு புரிதலாக இருக்கவேண்டும். அப்புரிதலும் உங்கள் மனம் மூலமாகவே நடக்கும்.
சிறிய தீ விபத்து நடக்கும்போது அதனைத் தணிப்பதற்கு தண்ணீரையோ, வேறு ஏதேனும் ரசாயனத்தையோ பயன்படுத்துவார்கள். அதுவே காட்டுத்தீயாக இருக்கும்பட்சத்தில் தீ படரும் திசையின் எதிர்திசையில் தீயை மூட்டி தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவர்.
உங்கள் மனதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவரும் வழியும் இதுதான். மனதை வைத்தே அதனைப் புரிந்துகொண்டு பிறகு அதனை உங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு சிறிய முயற்சி செய்து பாருங்கள். உங்கள் மனதில் யாருடைய உருவமாவது தோன்றும்போது அவர்களின் உடை, கைகடிகாரம், ஷூ அல்லது செருப்பு என்ன என்று பார்பதற்கு முயற்சி செய்து பாருங்கள். இவ்வகையான பார்க்கும் திறன்தான் உங்கள் மனதைப் பார்க்கும் யுக்தி.
மனதின் இயல்பு என்ன? நீங்கள் இதுவரை எதைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களோ அதுவே உங்கள் மனம். அதனை எப்படிப் பழக்கப் படுத்தியிருக்கிறீர்களோ அதுவே அதன் வெளிப்பாடு.
உங்கள் உடம்பை சோம்பல் முறிக்கும்போதோ, எங்கேனும் இடறி விழும்போதோ, பரிதாபத்தை வெளிபடுத்தும்போதோ “கிருஷ்ணா, ராமா, ஏசுவே, அப்பா, அம்மா” என்று இதுவரை எப்படி பழக்கப்பட்டு இருகிறீர்களோ அந்த வார்த்தையை மட்டுமே வெளிப்படுத்துவீர்கள். அவ்வாறு அந்த வார்த்தையைப் பயன்படுத்தும்போது அவர்களின் உருவம்கூட உங்கள் மனதில் தோன்றாது. வெறும் வார்த்தையாக மட்டுமே பழக்கத்தில் உச்சரிப்பீர்கள்.
மனம் ஒரு எந்திரம். எப்படி? அடுத்த பகுதியில் படிக்கலாம் காத்திருங்கள். “நான் மனம் பேசுகிறேன்”
…………………………….
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்