மனம் ஒரு எந்திரம் : நான் மனம் பேசுகிறேன் : Episode-3

Share Button

மனம் ஒரு எந்திரம்” எப்படினு பாக்கறதுக்கு முன்னாடி கற்பனை பத்தி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக கனவு மற்றும் கற்பனைங்கற வார்த்தைகள்  அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் ஒற்றுமையும் உள்ளது.

மனம் எப்பொழுதுமே யோசித்துக் கொண்டே இருக்கும். நீங்கள் தூங்கும்போது உங்களுடைய உடல் மற்றும் மனம் மேல் உங்கள் ஆளுமை மிகக் குறைவா இருக்கும். உடலுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொஞ்சமா திரும்பிப் படுப்பீர்கள் இல்லையா? அந்த நேரத்தில் உங்கள் உடல் மீது சிறிது கவனம் இருக்கும்.

நீங்கள் ஏதேனும் கனவு காணும்போது அப்போது கனவு ஓடிக்கொண்டிருக்குமே தவிர காலையில் எழுந்தவுடன் அது நினைவில் இருக்காது. இதற்குக் காரணமும் நீங்கள் தூங்கும்போது உங்கள் மனம் மேல் உள்ள ஆளுமையும் மிக மிகக் குறைவாகவே இருப்பதே ஆகும்.     நீங்கள் கவனிக்காமல் தூக்கத்தில் இருந்தால் கூட உங்கள் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். இதற்குப் பெயர்தான் கனவு.

 

நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது உங்கள் உடல் மற்றும் மனம் மேல் உங்கள் கவனம் மற்றும் ஆளுமையின் அளவு சிறிது துடிப்பாக இருக்கிறது. இருந்தாலும் அப்பொழுதும் உங்கள் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். விழித்துக் கொண்டிருக்கும்போது உங்கள் மனதில் எண்ணங்கள் ஓடுவது கற்பனை என்று அழைக்கப்படுகிறது.

உங்களின் இரண்டு நிலையிலும் மனம் வேலை செய்து கொண்டிருப்பதே ஒற்றுமை. நீங்கள் தூக்கத்தில் அதனைப் பொருட்படுத்துவதில்லை… விழித்துக் கொண்டிருக்கும்போது அதனை உங்களுடன் தொடர்புபடுத்தி உங்கள் செயல் அல்லது பேச்சின் மூலம் வெளிப்படுத்தி விடுகிறீர்கள் என்பதே வித்தியாசம்.

தூக்கத்திலும் விழித்துக் கொண்டிருக்கும்போதும் என்ன வகையான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம். நீங்கள் இதுவரை மனதில் சேகரித்து வைத்திருக்கும் கருத்துகள், தெரிந்த மனிதர்கள் மற்றும் அவர்கள் மேல் வைத்துள்ள் அபிமானங்கள், படித்த புத்தகங்கள் மற்றும் அதன் வார்த்தைகள், பார்த்தக் காட்சிகள், கேட்ட செய்திகள் மற்றும் வார்த்தைகள்,. நீங்கள் செய்யும் தொழில் மற்றும் அது சார்ந்த விஷயங்கள் மற்றும் இதுபோன்ற எண்ணங்கள் சுற்றிக்கொண்டிருக்கும். ஒன்றை கவனியுங்கள்…உங்களுக்கு ஏற்கனவேத் தெரிந்த, மனதில் பதிவான விஷயமாகத்தான் இருக்குமே தவிர உங்களுக்குத் தெரியாத மனிதர்கள், தெரியாத தொழில், படிக்காத புத்தகங்கள், பார்க்காத காட்சிகள், கேட்காத வார்த்தைகள் போன்ற உங்களுக்குத் தெரியாத எந்த எண்ணங்களும், காட்சிகளும் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்காது.

“ஏம்பா..Colours TV – னு ஒன்னு வருதே பாக்குறியா?” உங்களுக்குத் தெரிந்தவர் உங்களிடம் கேட்க, “அப்படியா? தெரியலேயே! எந்த நம்பர்?” என்று கேட்கும் பட்சத்தில் அதுவரை உங்கள் மனதில் அந்த சேனலின் கற்பனை அல்லது எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடாது. இதற்குப் பிறகு அச்சேனலை பார்த்துவிட்டீர்கள் என்றால் அது உங்கள் மனதில் பதியப்படும். அதற்குப் பிறகு இவ்விஷயம் நீங்கள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்து கனவிலோ அல்லது கற்பனையிலோ ஓடும்.

நீங்கள் இறந்தபிறகு உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாததனால் உங்கள் மனம் மரணம் பற்றி யோசிப்பது இல்லை. மரணத்தைப் பற்றி புத்தகங்கள் வாயிலாகவோ, மற்றவர்கள் சொல்லியோ கேட்டத் தகவல்கள் மட்டுமே பயம் போன்ற உணர்வை உங்களுக்குத் தரலாம். ஆனால் மரணத்தைப் பற்றி உங்கள் மனம் யோசிக்காது.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இதுவரை சேகரிக்காதத் தகவல்களை அல்லது விஷயங்களைப் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் கனவிலும் கற்பனையிலும் ஓடாது.

உங்களின் கனவில் ஏற்படும் எண்ணங்கள் உங்களைத் தவிர உடனிருப்பவரைப் பெரிதாகப் பாதிக்காது. கற்பனையில் ஏற்படும் எண்ணங்கள் உங்களின் வெளிப்பாடாக உடனிருப்பவரை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பெரிதும் பாதிப்பதனால் அக்கற்பனையை கையாளும் முறையைப் பற்றி பார்க்கலாம்.

உங்கள் நண்பர் ஒருவரை உங்களுக்குப் புதிதாக அறிமுகப்படுத்தும்போது அந்நபரைப் பற்றி எந்த கருத்துக்களும் உங்கள் மனதில் இல்லாததனால் (தெரியாததனால்) உங்கள் மனதில் இதுவரைப் பார்த்துப் பழகிய மனிதர்களைப் பற்றிய கருத்துக் கணிப்புகளை இந்தப் புதிய மனிதர்மேல் ஏற்றி, “அப்படிப்பட்டவரா?”, “இப்படி இருக்குமோ?” என்பதுபோன்ற எண்ண ஓட்டங்கள் இருக்கும்.

”அந்தப் புதிய மனிதர் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தால் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். இல்லையென்றாலும் பெரிதாக நஷ்டம் இல்லை” எனும் மனநிலையில் புதிய நபரின் அறிமுகம் பெற்றுக்கொள்வதே சரியாக இருக்கும். அல்லது எவ்விதமானக் கருத்தும் இல்லாமல் வெறுமனே அறிமுகம் செய்துகொள்வது மட்டுமே நூறு சதவிகிதம் சரியாக இருக்கும். ஆனால் இவ்விதமான அணுகுமுறை உணர்வில் உச்சநிலை அடைந்த ஞானிகளைத் தவிர சாதாரண மனநிலையில் உள்ளவர்களுக்குச் சாத்தியமில்லை.

நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் மேல் அதிகாரிக்கு நீங்கள் வணக்கம் சொல்லும்போது அவர் பதில் வணக்கம் சொல்லவில்லையென்றால் உடனே உங்கள் மனம், “இந்தாளுக்கு இனிமே மரியாதையே கொடுக்காக்கூடாது. நான் வணக்கம் சொல்றேன்…மதிக்காம போறான் பாரு.” என்று நினைக்கும். உண்மையில் அந்நபர் உண்மையிலேயே கவனிக்காமல் போயிருக்கலாம் அல்லது வேண்டும் என்றே பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் எனும் பரிசோதனை செய்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் கற்பனை இதுவரை எப்படி மனம் பழக்கபடுத்தப் பட்டிருகிறதோ அதனைத் தவிர வேறு எதையும் சிந்திக்க விடாது.

சாலையில் யாரோ இரண்டுபேர் உங்களைப் பார்த்து சிரிக்கும்போது உங்களுக்கு என்னவாகிறது? “அவர்கள் என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறார்கள்?, என் முகத்தில் ஏதேனும் ஒட்டிக்கொண்டிருகிறதா? புடவை எங்கேனும் விலகியிருக்கிறதா? இல்லையே!…எவ்வளவு திமிர் இவர்களுக்கு?” என்பன போன்று கற்பனைகள் உங்கள் மனதில் ஏற்படும். அவர்களின் சிரிப்புக்கு நீங்களாகவோ அல்லது உங்கள் பின்னாடி வரும் நபராகவோ அல்லது உங்களைச் சீண்டும் நோக்கத்திலோ அல்லது வேறு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கக்கூடும்.

“இந்த கனவு கற்பனை பற்றி தெரிஞ்சு இனிமே நான் என்ன பண்ணப் போறேன்? இத்தனை நாள் இப்படித்தானே போயிட்டு இருக்கு? இதுக்கு நான் இவ்வளவு மெனக்கெடனுமா?” உங்கள் மனதில் கேள்விகள் எழலாம்.

நீங்க ட்ரைன்ல வழக்கமாக சீசன் அட்டை கொண்டு செல்கிறீர்கள். ஒருநாள் அதனைக் கவனக்குறைவாக வீட்டில் வைத்துவிட்டு ட்ரெயினில் ஏறிவிட்டு, வண்டி கிளம்பும்போது நீங்கள் சீசன் அட்டை எடுத்துவராததை நீங்கள் கவனிக்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

“பரிசோதனை அதிகாரி வந்துவிடுவாரோ? ச்சே, இன்னிக்குனு பார்த்து வச்சுட்டு வந்துட்டேனே! என்ன பண்றது? கடவுளே, அதிகாரி வந்துடக் கூடாது.” அப்படின்னு ஏகப்பட்ட பய எண்ணங்கள் எழும். அன்று நிச்சயமாக நீங்கள் பயணம் செய்யும் ட்ரெயினில் பரிசோதனை செய்யப்படும். சரியாக உங்களிடம் டிக்கெட் அல்லது உங்களிடம் இல்லாதது ஏதேனும் கேட்கப்படும். இது எப்படி என்று யோசித்து இருக்கிறீர்களா?

உங்கள் பய எண்ணங்களே உணர்வுகளாக உருவெடுத்து உங்களைச் சுற்றி ஓர் அலையை ஏற்படுத்தும். அந்த அலைகளே உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும். இந்த உதாரணத்தில் மட்டுமல்ல, உங்களின் அனைத்து எண்ணங்களும் உணர்வுகளாக உருவெடுத்து உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு அதனை தெரியப்படுத்திவிடும்.

உங்கள் எண்ணங்களில் பெரும்பாலனவைகள் வெறும் கற்பனைகளாக மட்டுமே இருக்கின்றன எனும் உண்மை உங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் கற்பனைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள எண்ணக் கருத்துகளிலிருந்து எழும் பயம் மற்றும் அதன் விளைவான பதட்டமுமே ஆகும்.

இந்த உண்மையை நீங்கள் உணரும்போது உங்கள் மனம் கற்பனை செய்யும்போதும், பயம் ஏற்படும்போது, பதட்டம் ஏற்படும்போதும் அதனை நிர்வகிக்கக் கூடிய பக்குவம் ஏற்படும். அப்பக்குவம் உங்களின் வெளிப்பாடாக இருக்கும் மற்றும் உங்கலைச் சுற்றியுள்ளவர்களை நிர்வகிக்கும் பக்குவமும் ஏற்படும்.

பதற்றம் ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? அடுத்த பகுதியில் படிக்கலாம் காத்திருங்கள். “நான் மனம் பேசுகிறேன்”

……………………………………………..

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.