முதல்வராகிறார் விஜய்!

முதல்வராகிறார் விஜய்!
தமிழகத்தின் அடுத்த முதல்வராகிற திரு.விஜயின் வரலாறு காணாத, 59 வருடங்களாகத் தொடர்ந்த இரண்டு கழகங்களை ஒதுக்கி கண்டிருக்கும், மிகப் பெரிய வெற்றிக்கு முதலில் வாழ்த்துகள்.
மக்கள் நலனை மட்டும் சிந்திக்கும் பேசும் எந்தக் கட்சியையும் சாராத ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என்று பலர் உண்டு. அவர்களின் ஆலோசனைகள் உங்களுக்குத் தேவை.
ஊழலுக்கு எதிரான சிந்தனை உங்கள் ஒருவருக்கு மட்டும் இருந்தால் போதாது. உங்கள் அணியில் நின்று வென்றுள்ள அத்தனைப் பேருக்கும் தேவை. குறிப்பாக நீங்கள் நியமிக்கப் போகிற அமைச்சர்களுக்குத் தேவை. ஆகவே வென்றவர்களில் பாரபட்சமின்றி சீர்தூக்கிப் பார்த்து அமைச்சர்களை நியமியுங்கள்.
தொடர்ந்து சிஸ்டமேட்டிக்காக நடந்து வருகின்ற லஞ்சம் ஊழல் சங்கிலிகளை தைரியமாக அறுத்து விட முனையுங்கள்.
விஞ்ஞானப்பூர்வமான எளிமையான சிஸ்டத்தை எல்லாத் துறைகளிலும் கொண்டு வாருங்கள்.
மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதுமே சுதந்திரப் போராட்டங்களில் இறங்கிவிடவில்லை. முதலில் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்து பல மாநிலங்களின் மக்களைச் சந்தித்தார். இந்தியாவின் பண்பாடுகளை, பல வகை கலாச்சாரங்களை, மக்களின் தேவைகளை அனுபவப்பூர்வமாக கண்டுணர்ந்தார்.
தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்யுங்கள். நன்றி அறிவிப்புக்காக மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்தின் வளம், குறை, தேவை இவற்றை நேரடியாக மக்களையும், பல வகையான சமூக அமைப்புகளையும் சந்தித்து அறியுங்கள்.
உங்களுக்குக் கீழே இயங்கப் போகிற அதிகாரிகளும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரே ஒரு குடிமகன் கூட உங்களை எளிதாக அணுக முடிகிற வகையில் கெடுபிடிகள் இல்லாமல் எளிமையாக இருங்கள்.
பல குற்றங்களுக்கு உந்துதலாக இருப்பது மது மற்றும் போதைப் பொருள்கள் என்பது நீங்கள் அறியாததல்ல.
அவற்றை அறவே ஒழிக்க தீவிரம் காட்டுங்கள்.
மிகப் பெரிய வருமானத்தின் காரணமாகவே தடை செய்யாமல் அரசே மது வர்த்தகம் செய்யும் அவலமான சூழ்நிலையை மாற்றுங்கள். மாற்று வருமானத்திற்கு நூறு நல்ல வழிகள் உள்ளன. அரசின் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் கோடிகளில் கசியும் ஊழல் கோடிகளை ஒழித்தாலே கஜானா நிரம்பத் துவங்கும்.
நீங்கள் அறிவித்துள்ள பிரமாண்டமான வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் வரிசையாக நிறைவேற்ற புதிய கடன்களை வாங்காமல் திட்டமிடுங்கள்.
இரண்டு கழகங்களுக்கு மாற்றாக மக்கள் உங்களைத் தேர்வு செய்திருப்பது மிக அதிகமான அன்பு, பாசம், நம்பிக்கை இவற்றால்தான்.
அந்த நம்பிக்கையைக் காப்பற்றுவேன் என்று தினமும் வீட்டை விட்டுப் புறப்படும் முன்பு நீங்கள் மண்டியிட்டு வணங்கியதற்கு அருள் வழங்கிய உங்கள் ஏசுவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் புறப்படுங்கள்.
சொன்னதையெல்லாம் செயலில் காட்ட கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை மிகத் திறமையாகப் பயன்படுத்துவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் வாழ்த்துகள்.
– பட்டுக்கோட்டை பிரபாகர்











Leave a Reply