பிடித்த வேலை செய்பவர்கள் பாக்கியசாலிகள்; கிடைத்த வேலையைப் பிடித்துக் கொண்டு செய்பவர்கள் திறமைசாலிகள்!

Share Button

ஓம் குருவே சரணம்!

செய்யும் தொழிலே தெய்வம்; வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வேட்கை உண்டு.

எந்த நிலையில் பிறந்திருந்தாலும் ஒரு மனிதன் தன் திறத்தால், உழைப்பால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அப்படி அடைந்து காட்டியவர்களே சமூகத்திலும், வரலாற்றிலும் சிறந்த இடத்தைப் பெறுகிறார்கள்.

அப்படி அவர்களை முன்னேற்றியது அவர்கள் ஆற்றிய பணியே! ஏனென்றால், உத்தியோகமே பௌருஷ லக்ஷணமாய், சம்பாத்தியமே சமூக அந்தஸ்தாய் விளங்குகிறது.

அப்படி இருக்க இங்கு எல்லாருக்கும் தன் திறமைக்கு ஏற்ப, கல்விக்கு ஏற்ப, அதுவும் மனதிற்குப் பிடித்த வேலை வாய்ப்பது அரிது. பிடித்த வேலை செய்பவர்கள் பாக்கியசாலிகள். கிடைத்த வேலையைப் பிடித்துக் கொண்டு செய்பவர்கள் திறமைசாலிகள்.

எதைச் செய்தாலும் செம்மையாகச் செய்பவர்கள் அதை ஒற்றியே அடுத்த நிலைக்கு முன்னேறுகிறார்கள். அவ்வாறு நம்மை வளர்ப்பது நம் உழைப்பு அன்றோ? “தமிழால் பாரதி தகுதி பெற்றதும், பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்”, என்று பாரதிதாசனார் கூறுவது போல, உழைப்பால் நாம் உயர்வடைகிறோம், நம்மால் நம் தொழில் மேன்மை அடைகிறது.

பெயர்த் தலைப்பெழுத்தை (Name Initial) விட, நாம் செய்யும் தொழிலே அடைமொழியாக நின்று நம்மில் பலரைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிறது. ஏனெனில், தொழிலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.

வேலை, பணி, தொழில் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவற்றில் தொழில் எனும் சொல்லே பணியின் மேன்மையை விளக்குகிறது. ஏனென்றால், தொழு+இல் என்பதே தொழில் ஆகும் (இல் – தொழிற் பெயர் விகுதி).

கடவுளைத் தொழுது வழிபடுவதற்குச் சமமாகத் தொழிலில் நாம் செம்மையாகச் செயல்படுவது ஆகிறது. அதனால்தான், இறை மறுப்பாளர்கள் கூடக் கடமையைச் சிறப்பாகச் செய்தால் மேன்மை அடைகின்றனர்.

நம் ஊழ்வினைக்கு ஏற்ப நமக்கு வேலை வாய்ப்பை வழங்குபவர் கர்மகாரகன் சனி. பல பிறவிகளாய் நாம் செய்து சேர்த்துக் கொண்டு வந்த வினைகள் ஊழ்த்து நின்று நம் தொழிலாக அமைகிறது. அவ்வழி வந்த வினை ஆற்றுவதற்குத்தான் ஊழியம் என்று பெயர்.

அப்படி வினையாற்றுபவர்களே ஊழியர்கள் என்று ஆகின்றனர். நாத்திகராக இருந்தாலும் சரி, தன் ஊழியத்தைச் சரியாகச் செய்பவர்கள் சனி அவர்தம் ஊழைக் கரைத்து விடுகிறார். தம் ஊழியத்தைச் செய்யாதவரையும் சனி அவர்தம் ஊழைத் தன் வழியில் கரைய வைப்பார்.

அப்படி ஊழியம் சரியாகப் புரிந்து வினையைக் கரைத்தவர்களே கீதை கூறும் கர்ம யோகிகள் ஆவர். உலக மாந்தர் அனைவராலும் ஊழைக் கரைக்க உதவுவது கர்ம யோகமே! அவ்வாறன்றி ஊழல் செய்பவர்கள் தம் ஊழுக்கு அல்லாததைச் (ஊழ்+அல்) செய்து ஊழல்வாதிகள் ஆகின்றனர்.

இவர்கள் இழைத்த ஊழலுக்கு ஏற்ப நீதிமானாகிய சனி விரைய, ஜென்ம, பாத (ஏழரை), கண்டக, அஷ்டமமாக வந்து தன் கணக்கு வழக்கைப் பார்கிறார். அதனால் கசக்கிப் பிழிகிறார். ஊழியம் சரியாக ஆற்றாதவர்களைச் சுழியம் (zero) ஆக்குகிறார்.

கருமமே கண்ணானவர்கள் தான் செய்கின்ற தொழிலைத், தன் ஊழியத்தை மதித்து, முக்கியத்துவம் கொடுத்து, ஈடுபாட்டுடன் நேசித்துச் செய்கிறவர்களைச் சனி பாதிப்பு தருவதில்லை.

இந்த உலகத்தில் எல்லாரும்தான் பணியாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாரும் உயர்ந்த இடத்தைப் பெறுவது இல்லை. யார் திறம்படப் பணியாற்றுகிறார்களோ, அவர்களே உச்சத்தைத் தொடுகிறார்கள்.

அவர்கள் சனி வைக்கும் இத்தகைய சோதனைகளில் தன்னையும், தன் செயலையும் மெருகூட்டி மெருகூட்டிக் கொண்டு கைதேர்ந்து விடுகிறார்கள். இச்சோதனைகளில் வென்றவரைச் சனி உயர்த்தி விடுகிறார்.

அதனால்தான், “சனி கொடுக்க எவர் தடுப்பர்?” என்று வழங்கப்படுகிறது. புத்தர் கூற்றுப்படி ஒருவர் செய்த வினைகள் யாகத்தாலோ, ரத்த பலியாலோ, பூஜை புனஸ்காரத்தாலோ போவதில்லை.

அவை நம்மிடம் திரும்பி வந்தே தீரும். ஆனால், நாம் செய்யும் தொழிலோ ஊழைக் கரைக்கிறது. அவ்வழியாக வினையைக் கழிக்கத்தான் நாம் பிறவியே எடுத்திருக்கிறோம். அதனால் தொழில் தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

வள்ளுவப் பெருந்தகையும், “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்றுபவர்” என்று ஊழியத்தின் வலிமையைப் பறைசாற்றுகிறார். நம்முடைய ஊழ்வினையே நம் இன்ப துன்பத்தைத் தீர்மானிப்பது போல ஊழியமே நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது.

எனவே உங்களுக்கு ஆன்மீக ஞானம் பற்றித் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் ஊழியம் புரிந்தால் வாழ்வில் உயர்வது என்பது திண்ணம்.

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” – குறள்.

– ஞா ஹேமநாத்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *