விறகு வெட்டியும் கடவுளும்

Share Button

விறகு வெட்டியும் கடவுளும்!

ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான். கடவுளை வேண்டிக்கொள்வான். அதுக்குப்பிறகு காட்டிற்குச் செல்வான். விறகு வெட்டுவான். அதைக் கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.

ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான் .
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியைப் பார்த்தான். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. எதோ விபத்துல இழந்துவிட்டது போல் இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருந்தது.

அதை இவன் பார்த்தான் அப்பொழுது இவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. “இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை… அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும்?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது. அதைப் பார்த்த உடனே இவன் ஓடிப் போய் ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டான். அத்துடன் என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தான். அந்தப் புலி… ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்தது… அதைச் சாப்பிட்டது… சாப்பிட்டது போக மீதியை அப்படியே, அங்கேயே போட்டுட்டுப் போய்ட்டது.

புலி போனதுக்குப் பிறகு, கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து… மிச்சமிருந்ததை சாப்பிட்டது. திருப்தியாகவும் போய்ட்டது! இவ்வளவையும் மரத்திற்குப் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த நம்ம ஆசாமி யோசிக்க ஆரம்பிச்சான்.

“இரண்டு காலும் இல்லாத ஒரு வயதான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுகிறான். அப்படி இருக்கிறப்போ, தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்டிருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெய்யில்லையும் மழையிலையும் கஷ்டப்படனும்..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டணும்…?” என்றெல்லாம் யோசித்தான்.

அதற்குப் பிறகு அவன் காட்டுக்கே போகவில்லை. கோடலியை தூக்கி எறிந்தான். பேசாமல் ஒரு மூலையிலே உட்கார்ந்து விட்டான். அவ்வப்போது கோவிலுக்கு மட்டும் சென்று வருவான். “கடவுள் நம்மைக் காப்பாத்துவார்… அவர் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார்” – என்று அவன் நம்பினான், ஒரு நாள் கண்ணை முடிக்கொண்டு கோயில் மண்டபத்தில் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான்.

ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டே இருந்தது. சாப்பாடு மட்டும் வந்த பாடில்லே! இவன் பசியால வாடிப் போனான். உடம்பு இளைத்துப் போய்விட்டது. எலும்பும் தோலுமாக ஆகிவிட்டான். ஒரு நாள் ராத்திரி நேரம். கோயிலில் யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணைத் திறந்து கடவுளை பார்த்தான்.

“ஆண்டவா… என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா? காட்டில் அந்த நரிக்கு புலி மூலமாகச் சாப்பாடு போட்டாயே! அதைப் பார்த்து விட்டுத் தானே இங்கே வந்தேன். என்னை இப்படித் தவிக்க விட்டு விட்டாயே… இது நியாயமா ?” – என்று புலம்பினான்.

அப்போது கடவுள் மெதுவாகக் கண்ணை திறந்து சொன்னாராம் “முட்டாளே! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லை! புலி கிட்ட இருந்து!” என்றாராம். .

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *