தூத்துக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார்!

Share Button

தூத்துக்குடி:

தூத்துக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் கீதாஜீவன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தவெக சார்பில் ஸ்ரீநாத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் சென்னையில் வசித்து வந்தாலும் தவெக தலைவர் விஜயின் நெருங்கிய நண்பராகவும் நடிகராகவும் இருந்ததால் தவெகவினர் அவருக்காக உற்சாகமாக பணியாற்றினர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே அவர் முன்னணியில் இருந்து வந்தார். இறுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அமைச்சர் கீதாஜீவன் 62,805 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.

அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் 26,213 வாக்குகளும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் 11,752 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 853 வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.