கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் முன்னெடுப்பில் பெங்களூருவில் புத்தகத் திருவிழா
பெங்களூரு : கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தமிழ்ப் புத்தகத் திருவிழா. கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த புத்துகத் திருவிழாவிற்கு தமிழ் மக்களிடையே நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது.
கடந்த ஆண்டுகளைப்போலவே தொடர்ந்து இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருக்கக்கூடிய இந்த புத்தகத் திருவிழாவில் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
டிசம்பர் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிவாஜி நகர் அருகில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் இந்த புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைத்தார்.
இந்த புத்தகத் திருவிழாவானது வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தினமும் மாலை புத்தக வெளியீடு, பட்டிமன்றம், கருத்தரங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னட மண்ணில் தமிழ் நூல்களைக் காண்பது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நூற்றுக்கணக்கான வாசகர்கள் பெருமிதம் கொள்கின்றனர். அனைத்து நூல்களும் 10 % தள்ளுபடியில் கிடைக்கும் என கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் 35-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்றிருக்கின்றன. இந்தப் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்திலிருந்து ”முனைவு” பதிப்பகமும் பங்கேற்றுள்ளது. சென்னையில் இயங்கிவரும் முனைவு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.கா.சு. துரையரசு அவர்கள் கூறுகையில்…
புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கும்போது, உங்கள் பணத்தை நீங்கள் செலவு செய்வதில்லை. உங்கள் அறிவை பெருக்கிக்கொள்வதற்கு ஒரு சிறிய முதலீடு செய்கிறீர்கள் என்கிறார். மேலும் அவர் கூறுகையில் புத்தகக் கண்காட்சி நடக்கும் நாட்களில் 5 நாட்கள் விடுமுறை நாட்கள் உள்ளன. இந்த விடுமுறை நாட்களில் விற்பனை அமோகமாக இருக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
பெரும்பாலான வாசகர்கள் புத்தகத்தின் அட்டைப்படம் மற்றும் விலையை வைத்து புத்தகத்தை தேர்வு செய்கின்றனர். இந்த புத்தகம் நல்ல புத்தகம் பயனுள்ள புத்தகம் என்று மற்றவர்கள் பரிசீலனையின்படி தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டார் முனைவு பதிப்பக உரிமையாளர் கா.சு.துரையரசு அவர்கள்.
வரும் டிசம்பர் 25-ஆம் தேதி நடை பெறும் நூலரங்கம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைத்தலைவர் திரு.கு.பிச்சாண்டி கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பு ஆய்வாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் பெங்களூரு புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார். முனைவு பதிப்பக அரங்கிற்கு சென்று அதன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.கா.சு.துரையரசு அவர்களிடம் சிறிது நேரம் புத்தகங்களைப் பற்றி கேட்டறிந்து உரையாடினார்.
சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் அறிவியல் அரங்க நிகழ்ச்சிகளில் அறிவியலாளர்கள் திரு.மயில்சாமி அண்ணாதுரை மற்றும் திரு.வீரமுத்துவேல் ஆகியோர் சிறப்பிக்க உள்ளனர்.
தமிழர் மற்றும் கன்னடர் ஆகியோரின் நல்லுறைவை மேம்படுத்தும் வகையிலும், வாசகர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மீண்டும் மீண்டும் இடைவிடாமல் ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த புத்தகக் கண்காட்சி அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்த வேண்டும் எனவும் பலதரப்பினரிடமிருந்து வேண்டுகோள் வருவது மிகச் சிறப்பானதும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
தொடர்ந்து இடைவிடாமல் மூன்றாவது ஆண்டாக தமிழ்ப் புத்தகத் திருவிழாவை கர்நாடத் தமிழ்ப் பத்த்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் முனைப்புடன் முன்னெடுத்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. முத்துமணி நன்னன் அவர்கள் தலைமையேற்று தமிழ்ப் புத்தகத் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். அவருக்கு புதுவரவு செய்தி நிறுவனம் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளைபும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுவரவு ரமேஷ்பாபு
நிறுவனர் / ஆசிரியர்,
புதுவரவு மீடியா
Leave a Reply