நீரில் மின்னும் நட்சத்திரங்கள் (நட்சத்திரம் பேசியது) பாகம்-2
நட்சத்திரம் பேசியது : (பாகம்-2)
“எல்லோரும் நல்லா இருக்கீங்களா?” என நலம் விசாரித்தது நிலா. பறவைகள் ஒலி எழுப்பின. விலங்குகள் கத்தின. இது ‘ஆம்’ என்ற பதில்.
“கொஞ்சம் அமைதியா இருங்க?” என கத்தியது நட்சத்திரம். எல்லாம் அமைதி ஆகின.
“என்னால் நற்றத்தைப் பொறுக்க முடியலை! மூச்சு விட முடியலை. பாவம் , இந்த குளம்! ” என்றது நட்சத்திரம்.
இதுக்கு முன்பு அப்படி இல்லை. சிலநாட்களாகதான் இப்படி நாற்றமடிக்கிறது என ஆலமரம் கூறியது. ஒரே மாதத்தில் குளம் இப்படி ஆகிவிட்டது என ஆந்தை அலறியது.
குளம் கண்ணீர் பெருக்கெடுக்க நினைவுகளைப் பகிர்ந்தது.
ஆலங்குடி அழகிய கிராமம். கிராமத்தைச் சுற்றி வளமான வயல்வெளிகள். வயலெங்கும் குலை சாய்ந்து கிடக்கும் கதிர்கள். பசுமை வயல்களில் வெள்ளை நாரைகளின் கூட்டம்.
அவை ஒன்று சேர பறப்பது அழகு. வெண் மேகங்கள் தரை இறங்கி பறப்பது போல் தோன்றும். காண்பவர் கண்களுக்கு விருந்து.
சாலையின் இருபுறமும் மரங்கள். வேம்பு , புங்கை , பூவரசு , ரோஸ் வுட், அரச மரம், ஆலமரம் , புளிய மரம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். புளியமரத்தில் புளியங்காய்கள் காயத்துத் தொங்கும்.
அம்மரத்தில் பறவைகள் அமர்ந்து பறந்தால், கொத்தாய் காய்கள் கீழே விழும். அரசமரத்தின் பழங்களைத் தின்ன வௌவால்கள், கிளிகள், காகங்கள் என எண்ணற்ற பறவைகள் படையெடுத்து வரும். கொய்யா மரங்களில் பழங்களைக் கொறித்து தின்னும் அணில்கள்.
மரங்களின் ஊடே காட்டுப்பூச் செடிகள், கொடிகள். இப்படி எங்கும் பசுமை. இவை அனைத்தையும் பார்க்கப் பார்க்க அழகு.
கிராமத்தைச் சுற்றி மலைகள். மலையடிவாரத்தில் பழ தோட்டங்கள். மா, பிலா, கொய்யா, வாழை , சப்போட்டா, மாதுளை என பல வகைகள். ஓடை ஒரங்களில் உயர்ந்து வளர்ந்த தென்னந் தோப்புகள்.
மழைக்காலத்தில் வாய்க்கால்களில் கரைபுரண்டு ஓடும் மழை நீர். கால்வாய்களில் குதித்து , நீந்தி, துரத்தி கும்மாளமிடும் குழந்தைகள். அப்போது, குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிந்தோடும்.
மீன்பிடிக்க வருமே அப்படியொரு கூட்டம். மழைகாலத்தில் மட்டுமல்ல, கோடை காலத்திலும் படையெடுத்து வரும் பறவைகள். அதைக் காண வரும் ஆர்வலர்களின் கூட்டங்கள். இப்படி மக்கள் உயிர்ப்புடன் கிராமத்தை இயக்கினர்.
இயற்கை மக்களை இயக்கியது கிராமம் சிறந்த சுற்றுச் சூழல் மண்டலமாகத் திகழ்ந்தது.
எனது குளத்து நீரைதான் குடிப்பதற்குப் பயன்படுத்தினர். மற்ற குளங்களில் மீன்களை வளர்த்தனர். வரப்பு மேட்டில் மேயும் கோழிகள் கொழுத்து இருந்தன. ஆடுகள், மாடுகள், கன்றுகள் பண்ணையில் மகிழ்ந்து வளர்ந்தன.
மக்கள் கவலை இன்றி , சுகாதாரத்துடன் நலமாக வாழ்ந்தனர். இது போன்ற கிராமத்தைக் காண்பது அரிது.
பழையதை நினைத்து மகிழ்வதா? புதிய நிலைக் கண்டு அழுவதா? இளமை திரும்புமா? முதுமை உறுதியா? சாவு தவிர்க்க முடியுமா?
இப்படி குளம் புலம்பியது. அப்போது, மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளில் இரண்டு சோர்ந்து , உடல் நடுங்கி பொத்தென கீழே விழுந்தன. அவைகளால் பறக்கு முடியவில்லை.
இதைக் கண்ட மற்ற பறவைகள் ஊமை ஆகின. அவைகளின் விதவிதமான குரல்கள் எங்கே? பயத்தில் உறைந்து போகின.
எங்கும் மயான அமைதி. ஆம்! அந்த இரண்டு பறவைகள் சிறிது நேரத்திர் செத்து போகின. எப்போதும் கிரிச்சிடும் மற்ற பறவைகள் அமைதியாய் நடுங்கின.
நட்சத்திரம் பேசியது, “மனசு வருத்தமாக இருக்கிறது. வற்றாத ஓடையும் வற்றி வருகிறது. சாலைகளின் ஒரத்தில் உள்ள செடிகள், கொடிகள் கருகி கிடக்கின்றன. இங்குள்ள கோழிகள் முட்டை இடுகின்றன, அடைகாக்கின்றன.
ஆனால், குஞ்சு பொரிக்கவில்லை. ஆடுகள், மாடுகள் சிறுத்து மெலிந்து வருகின்றன. பறவைகள் வருகை குறைவாக உள்ளது. வண்டுகளை பார்க்க முடியவில்லை.
இதெல்லாம் எதனால்? மனிதர்கள் சொல்வது போல் கிராமத்தை முனி பிடித்து ஆட்டுகிறதா? முனி என்ற ஒன்று உண்டா? கிரகணத்தில் நடந்த தவறா? கிராமத்தின் வளர்ச்சி பிடிக்காமல் மாந்திரீகத்தால் கிராமத்தைக் கட்டிவிட்டனரா? மந்திரம் போட்டு விட்டனரா? பல ஊர்களுக்கு சென்று வரும் நிலவே ! உனக்குத் தெரிந்தவற்றை சொல்லு!”
நிலா சிரித்தது. நிலா கதைச் சொல்ல தயாரானது.
தொடரும்…
Leave a Reply