ஆசிரியர்களுக்கு தேவை மனநல மேலாண்மை!

Share Button

ஆசிரியர்களுக்கு தேவை மனநல மேலாண்மை!

கொரனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கிய நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர், பெற்றோர் , மாணவர் உட்பட பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆசிரியர்கள் , மாணவர்கள் மன இறுக்கம் தளர்வுற்றது. சக குழந்தைகளைக் கண்டதும் பட்டாம் பூச்சியாய் பறக்க ஆரம்பித்தனர். அவர்களின் குழந்தைமை வெளிப்பட, குதுகல மனநிலையில் தினமும் பள்ளிக்கு வந்தனர்.

அரசு ஒருநாள் விட்டு ஒருநாள் வரக் கூறி இருந்தாலும் , தினமும் வீட்டை விட்டு வெளியேறி மாணவ நண்பர்களுடன் தெருக்களில்,பேருந்து நிலையங்களில் என விரும்பிய இடங்களில் குழுமினர்.

ஆசிரியர்களும் அதேநிலையில் சக ஆசிரியர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் மனபாரத்தை இறக்கி வைத்தனர். அதேநேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒருவருடம் கற்றுத்தர வேண்டிய பாடத்தைக் குறைந்த நாட்களில் கற்றுத்தர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

பாடத்திட்டம் குறைக்கப்பட்டாலும், உயர் நிலை, மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் தேர்வு நெருக்கடியில் தொடர்ந்து குழந்தைகள் மீது பாடக்கருத்துகளைப் புகுத்தினர். அதற்கான அழுத்தத்தை உருவாக்கினர். மனப்பாடக் கற்றல் மேலோங்கியது.

ஆனால், ஆன்-லைன் கல்வி குழந்தைகளுக்கு விரல் நுனியில் தகவல்களைப் பெற பழக்கப்படுத்தி வைத்திருந்தது,; வைத்திருக்கிறது. ஆனால், அவர்களுக்குத் தேவை அறிவு திணிப்பையும் தாண்டிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கல்வியும், ஆசிரியர் உறவும்.

ஆசிரியர்களுக்கு தேர்ச்சி. தேர்வு நெருக்கடி. இரண்டிற்கு நடுவில் ஏற்படுத்திய விரிசலே, மாணவர்கள் கொதித்த மனநிலையை உருக்கியது. அதன் காரணமாக விரும்பத்தகாத நடத்தை மாற்றம் உடையவர்களாக காணப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியே பல இடங்களில் ஆசிரியர் மாணவர் உறவு சிக்கல்கள் வெளிப்பட தொடங்கின.

கொரோனா காலத்தின் கற்றல் இழப்பை சரி கட்ட தொடக்க நிலையில் இருந்து கல்லூரி வரை அரசு கல்வியாளர்களின் ஆலோசனைகளுடன் தொடர்ந்து முயற்சிக்கிறது. அதன் தொடர்ச்சியே இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்கள்.

தமிழக அரசின் ‘இல்லம் தேடிக் கல்வித் ’ திட்டத்தைச் செயல்படுத்த, மாணவர்கள் வருகையை உறுதி செய்ய குழந்தைகளின் வீடு நோக்கிச் செல்லும் போது பல பெற்றோர்கள், “ சார்! எல்.கே.ஜிக்கு படிக்கிற இவன் தம்பிக்கு/ தங்கச்சிக்கு தனியார் பள்ளியில் நிறைய பயிற்சித் தாள்கள் ( Google worksheet) தருகின்றார்கள். நீங்களும் தரலாமே!” எனக் கூறுவதைக் கேட்டேன்.

உயர்நீதி மன்றத்தின் வழிக்காட்டுதல்படி , ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த நிலையில் அதிகமான பயிற்சிதாள்கள் மற்றும் குறைவான விளையாட்டு நேரம் என மழலையர் பள்ளி குழந்தைகளின் வழக்கமான இந்த நாட்கள் வருத்தம் தருவனவாக உள்ளன.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எதையாவது கற்றுக் கொள்கிறதே என மகிழ்ச்சி அடைவதைக் காணும்போது வியந்தேன்..

அதேசமயம், மழலையர் பள்ளிகள் தங்களிடம் பயிலும் அனைத்து குழந்தைகளும் ஆண்டு இறுதிக்குள் எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை கர்சிவ் முறையில் எழுதக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டிருந்தன.

தங்களிடம் பயிலும் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டுமே! பெற்றோர்களும், குழந்தைகள் முன்பருவ பள்ளியிலே எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதன் அடிப்படையிலே தான் , அதேபோன்று ஒன்றாம் வகுப்புக்கும் அதிக பயிற்சித்தாள்கள், எழுத்து பயிற்சிகள் வழங்க கேட்கின்றனர். இந்த நிலை +2வரை தொடர்கிறது.

ஐந்து, ஆறு வயது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை போன்று மூன்று அல்லது நான்கு வயது குழந்தையின் எலும்பு வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. எல்லா குழந்தைகளிடமும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை எதிர்ப்பார்ப்பது தவறு.

சிறந்த உடல் இயக்க ( Motor skill) திறன்களை வளர்ப்பதற்கு களிமண் மற்றும் மணல் கொடுத்து கை விரல்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். பேப்பர் கிரஸ்சிங், பந்து எடுத்து எறிதல், பந்தை பிடித்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் இதற்கு உதவும்.

பள்ளி தொடங்கிய முதல் ஒன்றரை மாதம் இப்பயிற்சியை வழங்க வேண்டும். அதையெல்லாம் சாத்தியபடுத்த ஆசிரியர்கள். காந்தி கூறியது போன்று வீடும் பள்ளியும் ஒன்றுதான் என்ற சூழல் உருவாக்க வேண்டும்.

முதல் வகுப்பிற்கு வரும் குழந்தைகளுக்கு கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் என பாடதிட்டத்தை உருவாக்குவதன் வழியாக மகிழ்ச்சியாக, இயல்பாக , இயற்கையான முறையில் கற்றல் நடைபெறச் செய்யலாம்.

முறையான மன வள பயிற்சியின் அடிப்படையில் இச்செயல்பாடுகளை ஆசிரியர்கள் அமைத்துத் தருவார்கள். இந்தக் கொரோனா காலத்தில் அவை சாத்தியமல்லாத போது, எடுத்தவுடனே எழுத்து பயிற்சி தருவது எந்த விதத்தில் நியாயம்?

மாணவர்களின் அடித்தளம் வலுவாக இல்லாத போது எழுதுவதில் பிழையும், வாசிப்பதில் கடினத் தன்மையும் உருவாகலாம். இதனால், ’கற்றல் குறைபாடு’ உண்டாகி மாணவர்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளன.

ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் குழந்தை எல்லாவற்றையும் ஒரே வருடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என திணிப்பதில் தான் இப்பிழை ஏற்பட்டது்.

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியில் 85% க்கும் மேலானது 6 வயதிற்கு முன்பே திகழ்கிறது. ஆரம்ப கட்ட கவனிப்பு, தூண்டுதல் மூளை வளர்ச்சிக்கு முக்கியம்.

ஒரு குழந்தை இயற்கையான முறையில் படிக்கவும் எழுதவும் விரும்புகிறது. ஆசிரியர்கள் கற்றலைக் குழந்தைகள் விரும்பும் விதத்தில் முன்வைக்க வேண்டும். குழந்தைகள் வேடிக்கையான செயல்பாடுகள் மற்றும் உரையாடல் மூலம் நிறைய கற்றுக் கொள்கின்றார்கள்.

இதற்கு ஆசிரியர்கள் படைப்பாற்றல் தன்மையுடன் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும் அதற்கான நேரத்தை ஒதுக்கி, பொறுமையுடன் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இது ஆன் – லைன் வகுப்புகளில் சாத்தியம் அல்ல. ஆன் – லைன் வழியில் பெற்றோர் உதவியுடன் முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளை எழுத பயிற்சி அளிப்பதும், பயிற்சி தாள்களை செய்ய சொல்வதும் தவறான நடைமுறை.

இவ்வாறு குழந்தைகளின் மீது பணிகளைச் சுமத்துவது நீண்டகால நன்மையை தராது என்பதை பெற்றோர்களும் , ஆசிரியர்களும் உணரவேண்டும்.

இதேசிந்தனையுடன், தேர்வில் தோல்வியைத் தழுவி விடுவோம் என்ற பயத்தினால் மரணத்தை தேடிய மாணவர்களை நினைத்து பார்ப்போம்.

ஆரம்ப வகுப்புகளில் இருந்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பும், மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெற வேண்டும் என்ற முனைப்பும், சிறிய தோல்வியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையை உருவாக்கி விடுகின்றது.

நாம் மாணவர்களின் மீது ஆரம்ப வகுப்புகளில் இருந்தே படிப்படியாக மன அழுத்தத்தை உருவாக்கி வருகின்றோம் என்பதை உணர வேண்டும்.

அது மட்டுமின்றி நியூக்ளியர் குடும்பம், குழந்தைகளின் போட்டி மனப்பான்மையை குறைந்த்துள்ளது. விளையாடுவதற்கு உடன் எவரும் இல்லாத நிலையில் வெற்றி தோல்விகளைச் சந்திக்கும் வாய்ப்பு அற்றவர்களாக வளர்கின்றனர்.

பள்ளியிலும் விளையாட்டு என்பது அரிகி, படிப்பு என்பதே பிரதானமாக இருப்பதால் , வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ளும் தன்மை அற்றவர்களாக வளர்கின்றனர். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வழங்கவில்லை.

விளையாட்டு என்பது கையடக்க அலைபேசிக்குள் அடங்குவதுடன், நல்ல மனநிலையை. ஆரோக்கியமான உடல்நிலையை ஏற்படுத்தாமல், குரூர மனப்பான்மையையும், கோழைகளாகவும் குழந்தைகளை மாற்றியுள்ளது.

தொடர்ந்து விளையாடுவது மாணவர்களின் மனபோக்கை மாற்றுவதாகவும், மன அழுத்தம் தருவதாகவே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பொதுவாக இரண்டு காரணங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். 1. மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியுற்றதாலும் 2. 90 மதிப்பெண் பெற விரும்பிய மாணவர் 80 மதிப்பெண் என குறைவாக பெற்றதாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் சிநேகா, தற்கொலை தடுப்பு நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைவதால் 60% வரை தற்கொலை நடைபெறுகிறது என்கிறது அம்மையத்தின் ஆய்வு.

நமது தமிழ்நாடு அரசு மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் விதத்தில், 10வது , 12 வது வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனடி துணைத்தேர்வுகள் 2014 முதல் நடத்தி வருகிறது.

இதனால், 400-450 என இருந்த தேர்வினால் ஏற்படும் தற்கொலைகள் 200-300 அளவில் குறைந்துள்ளது. 2019ல் 215 என்ற அளவில் தற்கொலைகள் குறைந்துள்ளன என்பது கவனிக்க தக்கது. இதன் தொடர்சியாக ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்கள் இந்த உடனடி துணைத்தேர்வுகள் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

தேர்வில் ஏற்படும் தோல்வி மட்டும் தற்கொலைகளுக்கு காரணம் அல்ல. காதல் மற்றும் வீடிலுள்ள தனிப்பட்ட உறவு தொடர்பான பல காரணிகள் தற்கொலைக்கு காரணமாக இருக்கின்றன.

பாலியல் துஷ்பிரயோகம், தற்கொலைக்கான குடும்ப வரலாறு, பெற்றோரின் மரணம் அல்லது பொற்றாரின் பிரிவினை, பாகுபாடு போன்ற பிற ஆபத்தான காரணிகளும் தற்கொலைக்கான காரணிகள் ஆகும். தேர்வு அழுத்தம் என்பது படிபடியாக உருவாக்கப்படுகிறது.

அதன் தாங்கமுடியாத சுமை, பயத்தினை உருவாக்கி தற்கொலைக்கு மாணவனைத் தூண்டுகிறது என்பது மிக முக்கியமான விசயம்.

பாதுகாப்பான சுற்றுச்சூழல் தற்கொலை எண்ணத்தைக் கடக்க உதவும். ஆனால், எந்த ஆதரவும் கிடைக்கவில்லை எனில் இளைஞர்கள்/ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, பள்ளிகள் தோறும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இந்தியா அளவில் பயிற்சி பெற்ற மனநல மருத்துவர்கள் எண்ணிக்கை தோராயமாக நான்காயிரத்திற்குள்தான் இருக்கும் என்கின்றார் கல்கத்தாவை சேர்ந்த அரசு மனநல மருத்துவர் சுனில்குமார்.

ஆகவே, தமிழக அரசு, துவக்கப்பள்ளி இருந்து மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் குழந்தைகள் மனநல ஆலோசனைப் பயிற்சியை, சிறந்த மனநல மருத்துவர்கள் துணைக் கொண்டு அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் சிறந்த மனநல ஆலோசகர்களாக மாற வேண்டும் என்பதல்ல இதன் நோக்கம். ஆசிரியர்களை , மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களாக மாற வேண்டும் என்பதே.

உடல் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், பொருளாதார அழுத்தங்கள் குறித்து மாணவர்களிடம் பாதுகாப்பான முறையில் விவாதிக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

நடத்தையில் மாற்றம், மனநிலைமாற்றங்கள், தூக்கம் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை மாற்றுவது, பள்ளியை தவிர்ப்பது மற்றும் நோய்களுக்கு ஆளாவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இதுவே, இப்பயிற்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும், ஆலோசனை என்பது மாணவர்களுக்கு அட்வைஸ் தருவது அன்று. மாணவர்கள் நம்பிக்கையாக தங்கள் பிரச்சனைகளை ஆசிரியர்களிடம் கூறுவதாகும். அதனை காது கொடுத்து கேட்பது மட்டுமே ஆசிரியர்களின் வேலை.

ஆகவே, இப்பயிற்சி மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் நம்பிக்கைகுரியவர்களாகவும், பாதுகாப்பவர்களாகவும் மாறுவார்கள்.

ஆசிரியர்கள், உயர் தொடக்க நிலை (9,10,11,12 ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு நடத்தை மாற்றத்தை கண்டறியும் பயிற்சியை வழங்குவதன் மூலம், சக மாணவனிடத்தில் காணப்படும் பிரச்சனையை அடையாளம் காண செய்யலாம்.

அதன்மூலம் பிரச்சனை உள்ள மாணவனை அடையாளம் கண்டு, தகுந்த ஆலோசனை வழங்க இயலும். முடிந்தால், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் இப்பயிற்சியை வழங்கலாம். அதன்மூலம் , மாணவர்களுக்கு ஏற்படும் மனசுமையை உணர்த்தலாம்.

பெரும்பாலான இளைஞர்கள்/ மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடிப்பதற்கு முன் எச்சரிக்கை அடையாளத்தைக் காட்டுகிறார்கள். ஆகவே, யாராவது துன்பத்தை அனுபவிக்கிறார்களா என்பதை அடையாளம் காண்பது மிக முக்கியம்.

நிச்சயம் அது ஆசிரியர்களால் சாத்தியம். மாணவர்கள் வெட்கம் கொள்ளாமல் மற்றும் களங்கம் இல்லாமல் உதவியை தேடும் யோசனையை இயல்பாக்க ஆசிரியர்களை மனநல ஆலோசகர்களாக மாற்றுவதே சிறந்தது.

அதுவே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பானச் சுற்றுசூழலை உருவாக்கி, இயல்பாக குழந்தைகள் உதவியை நாடிவரும் வழியை உருவாக்கும். அது, ஒர் உயிரைக் காப்பாற்றும்.

தமிழக அரசு அதற்கானத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே அனைத்து ஆசிரியர்களின், கல்வியாளர்களின், மனநல மருத்துவர்களின் எதிர்ப்பார்ப்பு.

க.சரவணன், மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *