கற்றலும் கற்பித்தலும் : ஆசிரியரின் கற்பித்தல் அணுகுமுறை!

Share Button

புதுவரவு கல்வி

கற்றலும் கற்பித்தலும் – Learning and Teaching :

கற்றலும் கற்பித்தலும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. இரண்டு பக்கங்களுமே தனிச்சிறப்பு மிக்கவை. அவை இரண்டும் சிறப்பாக அமையும் போதுதான், அங்கே கல்வி முழுமையான வெற்றியை எட்டுகிறது.

கற்பித்தல் வழிமுறைகளில் எந்தெந்த வழிமுறைகள் சிறந்தவை என்பதை, தனது மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தெரிவு செய்து கையாளுதல் ஆசிரியரின் தலையாய கடமையாகும்.

அவர் தேர்ந்தெடுக்கும் கற்பித்தல் வழிமுறைகளில் எவை எவை மாணவர்களுக்கு கற்க எளிதாகவும், கற்றல் திறனை மேம்படுத்துவதாகவும் உள்ளதோ, அதைப் பின்பற்ற வேண்டும். கொரோனா தீநுண்மி காலத்தில் வகுப்பறைச் சூழலில் அல்லாது விருப்பட்ட இடங்களில் விருப்பட்ட நிலைகளில் அமர்ந்து கல்வி கற்கும் நிலையில் காலம் அவர்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்பறைகளில் எப்போதும் போல் இயல்பான கற்றல் கற்பித்தல் முறையைப் பின்பற்றும் போது, முன்புபோல் மாணாக்கர்களின் ஈடுபாடு வகுப்பறைச் சூழலில் கல்வி கற்றலில் இருக்குமா என்பது ஐயத்திற்குரியது தான்.

ஆதலால், மாணாக்கர்களிடையே கற்றலில் சுவாரசித்தையும் கவனத்தையும் கூட்டும் பொருட்டு, ஆசிரியர்கள் கற்பித்தல் முறையில் சில மாற்றங்களைச் செய்வது அவசியமாகிறது.
எனினும், இதுதான் சிறந்த கற்பித்தல் வழிமுறை என எதையும் குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. மாணாக்கர்களையும் சூழ்நிலைகளையும் பொறுத்தே இது தீர்மானமாகிறது.

ஆசிரியரின் கற்பித்தல் அணுகுமுறை

ஒரு பாடத்தை கற்கும் போது, அப்பாடத்தின் உட்கருத்து, பாட அலகின் தன்மை, மாணவர்களின் கற்கும் திறன், ஆசிரியரின் கற்பித்தல் அணுகுமுறை மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே, அங்கு, பாடத்தின் நோக்கம் நிறைவு பெறுகிறது.

வகுப்பறைக் கற்பித்தலில் பலவகை வழிமுறைகள் கையாளப்படுகின்றன. பாடங்களின் தன்மைக்கேற்ப பொருத்தமான சூழலில், உகந்த முறைகளில் கற்பிக்கும் போது, அங்கு கற்றல், கற்பித்தல் இரண்டுமே முழுமையடைகின்றன; வெற்றி பெறுகின்றன. சிறு குழந்தைகளுக்கான கற்பித்தல் வழிமுறைகள் என எடுத்துக் கொண்டால்…

* விளையாட்டு முறை
* கதை கூறும் முறை
* நடித்துக் காட்டுதல்
* மாதிரிகளைக் கொண்டு விளக்குதல் என பல வழிமுறைகளைக் குறிப்பிடலாம்.

இவ்வழிமுறைகள், குழந்தைகளுக்கு கற்றலில் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கூட்டுவதாக அமையும். கதை கூறுதல், நடித்துக் காட்டுதல் ஆகிய கற்பித்தல் வழிமுறைகளில், ஆசிரியர் தம்முடன் குழந்தைகளையும் இணைத்துக் கொள்வதன் மூலம், குழந்தைகளுடைய ஆர்வம் மிகுவதோடு, அவர்கள் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் விதைக்கிறது.

மேலும், அவர்களுக்குள் தன்னம்பிக்கை மிகுவதோடு கூச்சச் சுபாவத்தை நீக்கி, சிறுவயதிலேயே தலைமைப் பண்பையும் வளர்க்கிறது. வளர்ந்த குழந்தைகள் எனப் பார்க்கும் போது, ஏற்கனவே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பாடங்களின் தன்மைக்கேற்ப பயன்படுத்துவதுடன்…

* குழுக்களாக மாணவர்கள் கலந்துரையாடுதல்
* ஆசிரியருடன் கலந்துரையாடுதல்
* வகுப்பறை விவாதம்
* கேள்வி பதில் முறை
* மாதிரிகளைச் செய்தல்
* செய்முறைச் செயல்பாடுகள்
* களப்பணிகள்

என மேலும் கற்றலில் உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய பல வழிமுறைகளை ஆசிரியர் மாணவர்களிடையே புகுத்தலாம்.

குழுக்களாக இணைந்து மாணவர்கள் கலந்துரையாடும் போது, சம வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் தயக்கமின்றி ஒருவருக்கொருவர் உரையாடி, அவர்களுக்குள் உள்ள ஐயங்களை நிவர்த்தி செய்துகொள்வதுடன், புரியாத பகுதிகளை கண்டுணர்ந்து, ஆசிரியரிடம் தெளிவு பெற எளிய வாய்ப்பு அமைகிறது.

மேலும், இணைந்து செயல்படும் குணமும் ஒருவருக்கொருவர் உதவும் குணமும் மேலோங்குகிறது. இதனால், அங்கு கல்வியின் நோக்கம் முழுமைபெறுகிறது. ஆசிரியருடன் மாணவர்கள் கலந்துரையாடும் போதும், விவாதங்கள் நிகழ்த்தும் போதும், கேள்வி பதில் முறையிலும், களப்பணிகளிலும், ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி குறைவதோடு, ஓர் இணக்கமான, சுமூகமான சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் மாணவர்கள் அவர்களுக்குள் எழும் ஐயங்களை தயக்கமின்றி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, தெளிவு பெறும் வாய்ப்பு அமைகிறது. மேலும், கற்றுக் கொண்ட பாடம் பற்றிய மாணவர்கள் ஒவ்வொருவரின் மாறுபட்ட கருத்துகளையும், பார்வையின் புதிய கோணங்களையும் அனைவரும் அறிந்துகொள்ள முடிகிறது.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களும் உற்சாகமாகப் பங்கேற்று, தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்கின்றனர். மாதிரிகளைச் செய்வதன் மூலமும், களப்பணிகள் மூலமும், ஒன்றன் மீதான பிரிதொரு புதிய பரிமாணம் வெளிவருவதோடு, முழுமையாக ஒரு பொருளைப் பற்றி அறிந்து கொண்டு, புதிதாக ஒரு தொழிலையும் கற்றுக்கொள்கின்றனர்.

இவ்வகை கற்றல் வழிமுறைகள், மாணவர்கள் மனதில் உற்சாக வெள்ளத்தை நிறைப்பதோடு, எதையும் ஆராய்ச்சி நோக்குடன் அணுகும் மனப்பான்மையை வளர்க்கிறது. மேலும், இவ்வணுகுமுறை, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலி, இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

கல்வி என்பது வெறுமனே ஏட்டில் உள்ளவற்றை மனனம் செய்வதல்ல. அது, கண் போன்றது. கல்வி மூலம் பெறப்படும் நற்பண்புகளும் அறிவார்ந்த நடத்தைகளும் கண்ணில் நிறைந்திருக்கும் ஒளி போன்றவை.

ஆகவே, கல்வியானது ஒளிமிக்க கண்கள் போன்று அமைய வேண்டும். நல்லது, கெட்டது எவை என பகுத்துப் பிரித்துணரும் திறனையும், சுய முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு அடிகோலுவதாகவும், கற்றலும் கற்பித்தலும் மேன்மை கொண்டு அமைய வேண்டும். கல்வி தரும் நல்லொளியில், சமுதாயம் மேன்மைக் கண்டு வளர வேண்டும்.

……………………………………….

 

 

 

 

 

 

 

 

 

 

  • வானதி சந்திரசேகரன்
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *