”வகுப்பறை” : பல மாத காலமாக தன்னந்தனியாக தவித்துக் கொண்டிருக்கிறேன்
வகுப்பறை
ஒன்பது மாத காலமாக
தன்னந்தனியாக
தவித்துக் கொண்டிருக்கிறேன்
தனிமை மிகக் கொடுமை…
யாருடனும் பேசவில்லை
யாருடனும் பழகவில்லை
ஒரே இருட்டாய் உள்ளது
பகலிலும் இருள் சூழ்ந்து
கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன
சாளரங்கள் உறைந்து கிடக்கின்றன…
திறப்பதற்கு ஆட்கள் இல்லை
திறக்கவும் முடியவில்லை
சாளரத்தின் ஓரத்திலும் கதவின் அடியிலும்
வரும் காற்றைக் கொண்டு
தினமும் சுவாசித்து வருகிறேன்
என்னைக் கொண்டே எதிர்காலத்தைத்
தீர்மானித்தார்கள் தீர்க்கமாக
தற்பொழுது நான்
தனிமையில் இருக்கின்றேன்…
எப்பொழுது முடியும்
எனக்கு விடிவுகாலம் விடியும் என்று
எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கிறேன்…
வருடந்தோறும் புதிதுபுதிதாய்
முகம் காட்டும் புதுமுகங்கள் இல்லை
காலையில் புத்துணர்வாய்
வழிபாட்டுக்கூடம் அதுவும் இல்லை
மதியமாவது என்மடியில் அமர்ந்து
உணவு உண்பார்கள் அதுவும் இல்லை
மாலை நேரத்தில் மணி சப்தம்
மகிழ்ச்சியாய் கேட்டவுடன்
சிட்டாய் பறப்பார்கள்
மணி ஓசையும் கேட்பதே இல்லை
நீண்ட நாட்களாக கேட்கவும் இல்லை
அடுக்கி வைக்கப்பட்ட பலகை தவிர
கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை…
ஏடுகள் இல்லை குறிப்பும் இல்லை
எண்ணும் இல்லை எழுத்தும் இல்லை
பாடங்கள் இல்லை மனப்பாடமும் இல்லை
மொத்தத்தில் நான் நானாக இல்லை…
என்னில் அமர்பவர்கள் யாரும் இல்லை
என்னைக் கிறுக்கியவர்கள் யாரும் இல்லை
என்னில் எழுதியவர்கள் யாரும் இல்லை
என்னை எதிர்பார்த்தவர்கள்
எவரும் வரவில்லை…
இணையத்தின் வழியே
கற்கிறார்களாம் எனது
இதயத்தின் வழியே கற்க வரவில்லை
ஐயப்பாடுகளை எப்படிக்
கேட்கிறார்கள் என்ற
ஐயப்பாடே வந்து போகிறது எனக்கு
ஏதோ நோயாம் கொரானாவாம்
இருக்கும் வரை
என்னைத் திறப்பதில்லையாம்
அந்த நோய்க்கு நோய் வந்து சாகாதோ?
கண்களுக்கு அழும் வலிமையில்லை
கண்களில் நீர் வழிந்தபடியே
மாணவர்களை
ஆசிரியர்களை எதிர்நோக்கியபடி
வருத்தத்துடன் தனிமையில் வகுப்பறை…
– பொன். சண்முகசுந்தரம்
Excellent
Super congratulations ??
அருமை ஐயா