நூற்றுக்கணக்கான அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதி
திருச்சி :-
நூற்றுக்கணக்கான அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதி
மனிதம் போற்றும் மனிதநேயம் : பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், ஏதோ ஒரு காரணத்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அனைத்து நகரங்களிலும் வீடு வாசல் இன்றி இறுதி காலங்களில் ஆதரவற்றோராக அனாதைகளாக சாலையில் திரிந்து மக்களிடம் கையேந்தி ஜீவனம் நடத்தி கிடைத்த இடத்தில் உண்டு உறங்கி வருகிறார்கள்.
அவ்வாறு சாலையோரம் சுற்றித் திரிபவர்கள் ஆதரவற்றவர்களோ, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவோ, வெளிமாநிலத்தவர்களாகவோ இருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் உடல் நலக்குறைவாலோ விபத்து காரணமாகவோ, குடிப்பழக்கத்தாலோ இறந்து அனாதை பிணங்களாக பொது இடங்களில் கிடப்பார்கள்.
இவர்கள் இறப்பானது முதுமையடைதல், ஊட்டச்சத்து குறைபாடு, நோய், தற்கொலை, பட்டினி மற்றும் விபத்துக்கள் உள்ளிட்டவை பொதுவாக இறப்பிற்கு காரணங்களாகின்றன.
ஆதரவற்ற மனிதர்களின் இறப்பு பொதுவாக சோகமான அல்லது விரும்பத்தகாத நிகழ்வாகக் கருதப்படுகிறது, இறந்த நபரின் சமூக மற்றும் குடும்ப உறவுகளை தொடர முடியாமை போன்ற இழப்புகள் இதற்குக் காரணமாக அமைகின்றன.
இதைத்தவிர மரண பயம், துயரம், துக்கம், மனவலி உணர்வு , மனத்தளர்ச்சி, மன அழுத்தம், தனிமை போன்ற இயல்பற்ற நிகழ்வுகளும் இறந்தவருக்கு ஏற்படுகின்றன. இவ்வாறு ஆதரவற்று அனாதையாக இறந்தவர்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையத்திற்கு தகவல் அளிப்பார்கள்.
காவலர்கள் அனாதைப் பிணங்களை மீட்டெடுத்து அவர்கள் குறித்த தகவலை விசாரித்து பின்பு அனாதைப் பிணம் என அறிவிப்பார்கள். அனாதைப் பிணமாக இருப்பவர்கள் முன்பின் தெரியாத நபராகவும் விலாசம் அறியாதவராகவும் இருப்பார்கள்.
பின்பு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அரசு மருத்துவமனையில் பதிவு செய்வார்கள். மருத்துவ இருக்கை அதிகாரி ஒப்புதலுடன் காவல்துறையினர் மாநகராட்சி மூலமோ தொண்டு நிறுவனங்கள் மூலமோ நல்லடக்கம் செய்வார்கள்.
அவ்வாறு அனாதை பிணங்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளவர்களை எல்லா இறுதி சடங்குகளையும் செய்து நல்லடக்கம் செய்வதில் தன் வாழ்நாளை செலவிட்டு வருபவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர்.
யோகா ஆசிரியர் விஜயகுமார் நூறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அஞ்சல்தலை, நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர் ஆவார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை வழிகாட்டும் குழு உறுப்பினர், சாரண ஆசிரியர், என்ஜுஓ பெடரேசன் இணை செயலர் , திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்போர் கிளப் செயலர் என பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கின்றார்.
வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கீர்த்தனா விஜயகுமார் மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் தன்னலமற்ற சேவைக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
தன்னலமற்ற சேவையில், ஆதரவற்ற அனாதைப் பிணங்களை தம்பதி சகிதமாக நல்வடக்கம் செய்வார்கள். இதில் யாருக்கேனும் பணி இருப்பினும் கணவனோ அல்லது மனைவியோ ஒருவர் முன்னின்று இறுதி சடங்குகளை தனது சொந்த நிதியில் செய்வார்கள்.
அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து இறுதி சடங்கு செய்வது குறித்து தம்பதி சகிதமாக யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் பேசுகையில்…
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை 1995 ஆண்டு முதல் நடத்தி வருகிறோம். அறக்கட்டளை சார்பாக ஆராயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வைத்து இலவச நூலகம் அமைத்துள்ளோம். நூலகத்தில் நூல்களை படித்துவிட்டு செல்ல வேண்டும். 25 வருடங்களாக சாலையோரம் செல்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் உணவு, இலவச சட்ட ஆலோசனை மையம், தையல் பயிற்சி, மாணவர்களுக்கு காகித மடிப்புகலை பயிற்சி, யோகா தியான பயிற்சி என வழங்கி வருகிறோம்.
ஆண்டுதோறும் ஏழை எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் சாலையோரம் சுற்றித் திரிபவர்களுக்கும் ஆண்டுதோறும் இயன்றவரை அன்னதானம் வழங்கி வருகிறோம். இவ்வாறு நித்ய அன்னதானம் சேவையினை செய்து வருகையில் ஆதரவற்றவர்களுக்கு உதவலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அவ்வாறே ஆதரவற்ற அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணியினை தொடர்ந்து செய்து வருகிறோம். சேவை என்றால் பொறுமை சகிப்புத்தன்மை பொருளாதாரமும் இருக்க வேண்டும். எங்களது ஊதியத்தில் ஒரு பங்கினை சேவைக்காகவே செலவிட்டு வருகிறோம். உலகில் பிறக்கும் பொழுது மகிழ்ச்சியும் இறக்கும்பொழுது துக்கமும் இருப்பது மனித சமூகத்துக்கே உரியது.
ஆனால் உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் இன்றி ஆதரவற்று சாலையோரம் இறப்பது துரதிருஷ்டமானது. ஆதரவற்று பொது இடங்களில் இறப்பவர்கள் தகவல் அறிந்து காவலர்கள் வரும் வரை அனாதையாக சாலையிலேயே இருப்பார்கள். அவர்களை ஈ மொய்க்கும்.
அவர்களை மீட்டெடுத்து இறுதி சடங்கு செய்கின்றோம். யாரும் அனாதையாக இறக்கக்கூடாது. பொதுவாக ஆதரவற்றவாக இருப்பவர்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுடன் பிரிந்து வந்தவர்களாக இருப்பார்கள். தன்னுடைய பிள்ளைகளால் விரட்டி அடிக்கப்பட்டவராகவும் இருப்பார்கள்.
மக்கள் கொடுக்கும் உணவுகளை கொண்டு ஜீவனம் நடத்தி வருவார்கள். ஒருநாள் வயோதிகம் காரணமாகவோ, நோய்வாய்ப்பட்டோ இறப்பார்கள். அவ்வாறு இறப்பவர்கள் குறித்த தகவல் தினமும் தொலைபேசி அழைப்புகளாக வரும். வாரா வாரம் பல அனாதை பிணங்களைக் கூட அடக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
எந்த இடத்தில் அனாதை பிணங்கள் இருந்தாலும் மக்கள் எங்களை தொடர்பு கொண்டு தகவல் கூறுவார்கள். முறைப்படி காவல் துறையினர்க்கு தகவல் கொடுப்போம். காவல் துறையினர் விசாரணை நடத்துவார்கள். விசாரனை முடியும் வரை அரசு மருத்துவமனை அமரர் அறையில் பிரேதம் வைக்கப்பட்டு இருக்கும்.
காவல்துறையினரின் விசாரணை முடிந்ததும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நடத்தி வரும் எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிப்பார்கள். அனாதைப் பிணங்களாக நல்லடக்கம் செய்பவர்களில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று இறந்தவர்கள், விபத்தில் இறந்தவர்கள், மது அருந்தி இறந்தவர்கள் என பலர் உண்டு.
இதில் சிலர் மருத்துவமனையில் பெற்றோரை சேர்த்துவிட்டு கைவிட்டு சென்றவர்களும் உண்டு. அனாதை பிணங்கள் குறித்த தகவல் வந்தவுடன் இடுகாட்டு பணியாளர்களுக்கு தகவல் அளிப்போம். அவர்கள் குழிதோண்டி வைத்திருப்பார்கள்.
அனாதை பிணங்களை அடக்கம் செய்யும் போது அரசு மருத்துவமனை மருத்துவர் சிகிச்சை மற்றும் இறந்த தகவல் சான்று காவல் துறையினர் விசாரனை முதல் தகவல் அறிக்கை பெற்று அனாதை பிரேதங்களை காவலர்கள் தரும் தகவலின் அடிப்படையில் காவலர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்வோம்.
இறந்தவர் எந்த மதம், சாதியென்று தெரியாது. அவருடைய குடும்ப உறுப்பினர் இருந்தால் என்னவெல்லாம் செய்வார்களோ அதை நாங்கள் செய்கின்றோம். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ நண்பர்களை அழைத்து பிரார்த்தனை செய்து முறைப்படி அடக்கம் செய்கின்றோம்.
இப்பணி ஆத்மார்த்தமான பணி. இயன்றதை இயலாதவர்களுக்கு செய்து வருகிறோம் என்றனர். கொரோனா பெருந் தொற்று பேரிடர் காலங்களிலும் அனாதை பிரேதங்களை தொடர்ந்து நல்லடக்கம் செய்தோம் என்றனர்.
அனாதை பிரேதங்கள் நல்லடக்க உதவிக்கு
யோகா ஆசிரியர் விஜயகுமார்
வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்
அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை
14/44B, பிஷப் குளத் தெரு
புத்தூர், திருச்சி-620017
அலைபேசி எண் : 9842412247
Leave a Reply