பள்ளிப்படிப்பை விட்டு விலகிய மாணவியை, இடைநின்றிருப்பதை அறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்த அசத்தல் ஆசிரியை சசிகலா…
அவர் கூறியதிலிருந்து இனி…
எங்களிடம் 8ம் வகுப்பு பயின்று தற்போது +1 வகுப்பு சேர்ந்து பயில வேண்டிய மாணவியை சென்ற வாரம் சந்தித்தேன். பள்ளி சென்று சேராமல் இருப்பது தெரியவந்தது.அவள் மிக நன்றாக படிக்கக்கூடிய மாணவி. உயர்ந்த நிலைக்கு வருவார் என்று எண்ணி இருந்தவள் பள்ளிப்படிப்பை விட்டு விலகி, இடைநின்றிருப்பது அவளின் ஆசிரியையாக மிகுந்த வேதனை அளித்தது.
காரணம் கேட்டறிந்த போது குடும்பச் சூழல், வறுமை என்பதை அறிந்து கொண்டேன். எப்படியாகினும் அவள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவளிடம் நிறைய பேசினேன். பெற்றோரை அழைத்து வரும்படி கூறினேன். யாரும் உடன் இல்லை என்று கூறினாள். பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமலும், எப்போதாவது வந்து போவார்கள் என்ற நிலையிலும், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் 5 பேரை பராமரித்து காக்கும் நிலையிலும் அவள் இருக்கிறாள் என்பதறிந்து மனம் கனத்தது.
கிராமப்புறங்களில் குறிப்பாக கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பெற்றோர்களின் அறியாமை மற்றும் அலட்சியப் போக்கினால் பல பெண் குழந்தைகளின் வாழ்க்கை சீரற்று போகிறது. படிக்கின்ற வயதில் குடும்ப பாரம் சுமக்க வேண்டுமென்று இவர் மீது திணிக்கப்பட்டிருப்பது யார் செய்த குற்றம்??
அலைபேசி வழியாக பெற்றோரை அழைத்தேன். யாரும் வரவில்லை. அன்பிற்கினிய தோழர் திரு.ரங்கராஜன் ஸ்ரீதர் அவர்களைத் தொடர்புக் கொண்டேன். அவளின் கல்வி தேவையை பூர்த்தி செய்து தருவதாக ஏற்றுக் கொண்டதுடன் மாணவிக்கு தேவையான சீருடை, புத்தக பை, காலணி வாங்க உதவி செயதார்.
தொடர்ந்து புத்தக எழுத்துக்கள் சரிவர தெரியவில்லையென்றும், அடிக்கடி தலைவலி இருப்பதாகவும் அவர் கூறியதன் பேரில் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணம் என்று தெரிய வந்தது. இங்குள்ள பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு இருப்பதை அறிந்து தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலை உணவு திட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் அதிகாரிகளின் அனுமதி இன்றுவரை கிடைக்கவில்லை.
இன்று முதல் மாணவி மீண்டும் தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்திருப்பது மிகுந்த மகிழ்வை தருகிறது. ஏற்றிவிட ஏணி இருந்தும், இருபக்கமும் பிடித்துக் கொள்ள ஆளிருந்தும் நானெல்லாம் படித்தது விஷயமே இல்லை. வாழ்வதே போராட்டம் என்கிற நிலையில் இவளைப் போன்ற பிள்ளைகள் படித்து நல்ல நிலையை அடைவதுதான் சாதனை யாகும். முடியும்வரை கரம் கொடுப்போம்.
உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர் நண்பருக்கும், திரு.ரங்கராஜன் ஸ்ரீதர் ஐயா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார் ஆசிரியை சகிகலா.
Leave a Reply