கையசைக்கும் சூரியன் – கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன்
by
Web Team
·
Published
· Updated
கையசைக்கும் சூரியன்
……………………………………….
நீல வானத்தின் கீழ்
சிறகு விரியும் பயணத்தின்
முற்றுபெறாத சொல்லாடல்கள்
இன்னும் முனுமுனுக்கின்றன
…
பின்தொடரற்று
முகத்திரை கிழிந்தும்
கத்திக்கத்தி ஒய்கிறது
ஒரு ஆட்டுக்குட்டியும்
ஒரு குள்ள நரியும்
…
முரண்டு பிடித்தலன்றி
அதிர்வுகளற்ற மெளனத்தோடு
இயல்புதொலைந்து விடாமல்
தலைமைத்துவத்தில்
பிடரி மயிர் சிலிர்க்க
கம்பீரமாய் நின்று
வெற்றுக் கூச்சல்கள் பற்றி
செவிமடுக்காமல்
வனத்தை ஆழ்கிறது சிங்கம்
…
குழப்பத்துடன் கூச்சலிடும்
சில்வண்டுகளைக்
கண்டு கொள்வாரின்றி
சலமைந்து நகர்கிறது
இயல்பு வாழ்க்கை
…
மகிழ்ச்சிக் கரை புரண்டோடும்
காட்டாற்று வெள்ளத்தில்
பாதுகாப்புணர்வுடன்
தன்னியல் பின் பாதையில்
கையசைத்துப் போகிறது
கிழக்கிலிருந்து சூரியன்
Leave a Reply